திமுக புதிய பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்: பொருளாளர் எ.வ.வேலு?

வரலாறு திரும்புகிறது. எப்படி அப்போதைய பொருளாளரை புரமோட் செய்து பொதுச்செயலாளராக கலைஞர் கொண்டு வந்தாரோ, அதையேதான் மு.க.ஸ்டாலினும் செய்கிற நிலையில் இருக்கிறார்.

DMK K Anbazhagan death, DMK K Anbazhagan passed away, DMK new General secretary, duraimurugan, EV Velu, பேராசிரியர் அன்பழகன், பேராசிரியர் அன்பழகன் மரணம்

திமுக புதிய பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்படுவது ஏறக்குறைய உறுதி ஆகிவிட்டது. துரைமுருகன் தற்போது வகிக்கும் பொருளாளர் பதவி யாருக்கு? என்பதுதான் விவாதமே! அந்தப் பதவியை எ.வ.வேலு கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக.வில் பொதுச்செயலாளர் பதவி என்பது சாதாரணமானது அல்ல. 1949-ல் அறிஞர் அண்ணா திமுக.வை தொடங்கியதும் அவர் அமர்ந்த பதவி அது. ‘நான் கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர் பெரியார். அவருக்காக கழகத்தில் தலைவர் பதவி எப்போதும் காலியாக இருக்கும்’ என அறிவித்திருந்தார் அண்ணா. எனவே முழு அதிகாரங்களும் பொதுச்செயலாளர் வசம் இருக்கும்படியாகவே திமுக சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்டன. அண்ணா மறைகிற வரை இந்த நிலையில் மாற்றம் இல்லை.

1969-ல் அண்ணா மறைவைத் தொடர்ந்து, தற்காலிக பொதுச்செயலாளர் ஆனார் நெடுஞ்செழியன். முதல்வர் பொறுப்பை கலைஞர் கருணாநிதி ஏற்றார். இந்த இரட்டை அதிகார மையம் சில நெருடல்களை உருவாக்கவே, பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை கொண்டு வந்தனர். பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் கலைஞர் குதித்தார். தன் கைப்படவே கடிதம் எழுதி, தனக்கு ஆதரவு திரட்டினார் கலைஞர்.

நெடுஞ்செழியனும் அந்தப் பதவியை குறிவைக்க, ஒரு சமரச தீர்வு எட்டப்பட்டது. அதன்படி, நெடுஞ்செழியன் பொதுச்செயலாளர் என்றும், தலைவர் பதவியை உருவாக்கி கலைஞரை அந்தப் பொறுப்பில் அமர்த்துவது என்றும் முடிவானது. தலைவர் பதவிக்கு சிறப்பு அதிகாரங்களும் அப்போது வழங்கப்பட்டன.

1977 வரை நெடுஞ்செழியன் திமுக பொதுச்செயலாளர் பொறுப்பை வகித்தார். 1977-ல் நெடுஞ்செழியன் தனிக் கட்சி தொடங்கியதும், அடுத்த பொருளாளர் யார்? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஏற்கனவே 1972-ல் எம்.ஜி.ஆர். பிரிந்தபோது அவர் வகித்த பொருளாளர் பதவியை, பேராசிரியர் அன்பழகனுக்கு கிடைக்கச் செய்தார் கலைஞர். அந்தப் பதவியை திறம்படச் செய்த பேராசிரியரை, பொதுச்செயலாளராக ‘புரமோட்’ செய்ய விரும்பி, செய்து முடித்தார் கலைஞர். அப்படித்தான் 43 ஆண்டுகளுக்கு முன்பு பேராசிரியர் அன்பழகனை பொதுச்செயலாளர் பதவி தேடி வந்தது.

இப்போது வரலாறு திரும்புகிறது. எப்படி அப்போதைய பொருளாளரை புரமோட் செய்து பொதுச்செயலாளராக கலைஞர் கொண்டு வந்தாரோ, அதையேதான் மு.க.ஸ்டாலினும் செய்கிற நிலையில் இருக்கிறார். ஆம், திமுக பொருளாளரான துரைமுருகன் அடுத்த பொதுச்செயலாளர் ஆகிறார். அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோரைத் தொடர்ந்து திமுக.வின் 4-வது பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன். திமுக வரலாற்றில் முக்கிய நிகழ்வாக இது அமையும்.

அண்ணா, நாவலர், பேராசிரியர் அமர்ந்த இருக்கையில் அமரும் அளவுக்கு கட்சிக்காக உழைத்தவரும், திராவிட இயக்க வரலாற்றில் ஊறியவர்களிள் இப்போதைக்கு முதன்மையானவரும் துரைமுருகன்தான். மேலும் அவரைவிட உயர் பதவிக்கு இன்னொருவரை கொண்டு வருவது அவ்வளவு உசிதமல்ல என்பதை கட்சி முன்னணி நிர்வாகிகள் அனைவருமே புரிந்து வைத்திருக்கிறார்கள்.
கலைஞரின் எண்ணவோட்டத்தை உணர்ந்து வைத்திருந்த துரைமுருகன், கடந்த 2018 முதல் பொருளாளர் பதவியில் ஸ்டாலினை புரிந்து கொண்டு இயங்கி வருகிறார். மு.க.ஸ்டாலினை கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு உணர்வுபூர்வமாய் முன்மொழிந்தவரும் அவரே. தவிர, துரைமுருகனைத் தவிர்த்து வேறு யாரை உயர் பொறுப்புக்கு கொண்டு வருவதாக இருந்தாலும், நிச்சயம் அதற்கு போட்டி இருக்கும். அதைத் தவிர்க்கவும், துரைமுருகன் சரியான சாய்ஸ் என கட்சித் தலைமை கருதுகிறது.

அதேசமயம், துரைமுருகன் தற்போது வகித்து வரும் பொருளாளர் பதவிக்கு கட்சிக்குள் போட்டி நிச்சயம். அண்மையில் முதன்மைச் செயலாளராக புரமோஷன் பெற்ற கே.என்.நேரு, ஆ.ராசா, எ.வ.வேலு, பொன்முடி ஆகியோர் இந்தப் பதவியை குறி வைக்க வாய்ப்பிருப்பதாக கூறுகிறார்கள். இவர்களில் எ.வ.வேலுவே கட்சித் தலைமையின் சாய்ஸாக இருக்கும் என்கிற பேச்சு அடிபடுகிறது.

பேராசிரியர் உடல் நலிவுற்று இருந்த தருணத்திலேயே கட்சியின் நலன் கருதி, பொதுச்செயலாளரின் அதிகாரங்கள் சில தலைவருக்கு மாற்றப்பட்டுவிட்டன. கட்சியில் 2-வது பதவி என்றாலும், மற்ற கட்சிகளை ஒப்பிடுகையில் இன்னமும் அது அதிகாரம் மிக்கப் பதவிதான். கட்சி முழுமையாக மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இயங்குவதால், இந்தப் பதவிப் பரிமாற்றங்களில் பெரிய சர்ச்சைகளுக்கு வாய்ப்பு இல்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: K anbazhagan death dmk new general secretary selection

Next Story
கண்ணீர் ஊற்றெடுத்த இறுதி அஞ்சலிக் காட்சிகள்: போட்டோ, வீடியோ தொகுப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com