அதிமுக செய்தி தொடர்பாளர் கே.சி.பழனிசாமி அதிரடியாக கட்சியை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார். இவர் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கே.சி.பழனிசாமி, அதிமுக.வின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவராக அண்மையில் நியமிக்கப்பட்டார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அவரை நியமித்து அறிவிப்பு வெளியிட்டனர். மீடியாக்களிலும் அதிமுக சார்பில் கருத்துகளை அவர் கூறி வந்தார்.
கே.சி.பழனிசாமியை இன்று (மார்ச் 16) மாலை திடீரென கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தே நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தனர். கட்சியின் கொள்கை-குறிக்கோளுக்கு எதிராக செயல்பட்டதாக அவர் மீது அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
அதிமுக.வை விட்டு நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி, திருப்பூர் புறநகர் மாவட்டத்தை சேர்ந்தவர். முன்னாள் எம்.பி.யும்கூட! பல ஆண்டுகளாக அதிமுக.வில் பதவி இல்லாமல் இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்து தீவிரமாக இயங்கினார்.
ஓ.பன்னீர்செல்வம் அணிக்காக மீடியாவில் காரசாரமாக பேசியவர் இவர்தான். அதனாலேயே இவருக்கு செய்தி தொடர்பாளர் பதவியை அணிகள் இணைப்புக்கு பிறகு ஓபிஎஸ் பெற்றுக் கொடுத்தார்.
சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என தேர்தல் ஆணையத்தில் இவர் தாக்கல் செய்த மனு, சசிகலா தரப்புக்கு பெரும் குடைச்சலாக அமைந்தது. அதையொட்டி கட்சியின் பெயர், சின்னம் மீட்புப் பணிகளிலும் இவரது பணி உண்டு.
அதிமுக.வில் முறைப்படி பொதுச்செயலாளர் தேர்வு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் இவர் கொடுத்த மனு இன்னும் விசாரணையில் இருக்கிறது. இபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்த பிறகும் அந்த மனுவை இவர் வாபஸ் பெறவில்லை. இது இபிஎஸ் அணியில் பலருக்கும் நெருடலை உருவாக்கியபடியே இருந்தது. ஆனாலும் ஓபிஎஸ் தரப்பின் பலமான ஆதரவால் கட்சியில் செல்வாக்கு மிக்கவராகவே தொடர்ந்தார்.
இந்தச் சூழலில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவது தொடர்பான பேட்டி ஒன்றில், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஆதரிப்போம்’ என குறிப்பிட்டார். இது பாஜக மேலிடத்தை கோபப் படுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில்தான் கே.சி.பழனிசாமி அதிமுக.வை விட்டு அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.