தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் கி.வீரமணி-திருநாவுக்கரசர் ஆகியோர் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. நீண்ட இடைவெளிக்கு பிறகு கருணாநிதியை தமிழக தலைவர்கள் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
வயது மூப்பு மற்றும் உடல்நலப் பிரச்னை காரணமாக தி.மு.க. தலைவர் கருணாநிதி ஓய்வில் இருக்கிறார். சுவாசப் பிரச்னை காரணமாக தொண்டையில் துளையிட்டு குழாய் பொருத்தப்பட்டதால் அவரால் பேச முடியவில்லை. அவரது குடும்ப உறுப்பினர்களும் மருத்துவர்களும் மட்டுமே கருணாநிதியை சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
கடந்த ஜூன் 3-ம் தேதி கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரை சந்தித்து வாழ்த்து கூற தமிழகத்தில் தி.மு.க.வின் கூட்டணித் தலைவர்கள் பலர் ஆர்வமாக இருந்தனர். அப்போது, ‘மருத்துவர்கள் அனுமதித்தால், ஜூன் 3-ம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் ஏற்பாடு செய்யப்பட்ட கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா மேடையிலேயே கருணாநிதி தோன்ற வாய்ப்பு இருப்பதாக’ ஸ்டாலின் சஸ்பென்ஸ் வைத்தார். ஆனால் வைரவிழா மேடைக்கு கருணாநிதி வரவில்லை.

அந்த விழாவுக்கு வந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் அகில இந்திய செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் சிலர் கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க சட்டமன்ற வளாகத்திற்கு கருணாநிதி வருவாரா? என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. அதுவும் நடக்கவில்லை.
சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பதில் இருந்து கருணாநிதிக்கு விலக்கு கொடுத்தும் கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆளும்கட்சியினரும் ஆதரவு கொடுத்தது அரசியல் வட்டாரத்தில் சிலாகிக்கப்பட்டது. ஆகஸ்ட் 10 (நாளை), 11-ம் தேதிகளில் கருணாநிதி தனது மூத்த பிள்ளை என வர்ணித்த முரசொலி நாளிதழின் பவளவிழா நடக்கிறது. இதிலும் கருணாநிதி பங்கேற்க வாய்ப்பில்லை என முன்கூட்டியே ஸ்டாலின் தெரிவித்துவிட்டார்.
இந்தச் சூழலில்தான் ஆகஸ்ட் 8-ம் தேதி (நேற்று) தி.க. தலைவர் கி.வீரமணி கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தார். அண்மையில் ஜெர்மனி நாட்டின் கொலேன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாட்டில் வீரமணி பங்கேற்று திரும்பியதையொட்டி மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்பட்டது. இந்த சந்திப்பின்போது தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உடன் இருந்தார்.
அதேபோல தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தனது மகளின் திருமண அழைப்பிதழை கருணாநிதியை சந்தித்து வழங்கினார். அப்போது மணமகனின் தந்தையும், அரசரின் வருங்கால சம்பந்தியுமான இசக்கி சுப்பையாவும் உடன் இருந்தார். இவர் வேறு யாருமல்ல, முன்னாள் சட்ட அமைச்சரும், அம்பாசமுத்திரம் சட்டமன்ற அ.தி.மு.க. முன்னாள் உறுப்பினருமான இசக்கி சுப்பையாதான். தற்போது டி.டி.வி.தினகரன் அணியில் இயங்கும் இசக்கி சுப்பையா, அரசியலைக் கடந்து கருணாநிதியை சந்திக்க வந்தது பலரது புருவங்களை உயர்த்த வைத்தது.
இரு தலைவர்களையும் சந்தித்தபோதும் கருணாநிதி பேசும் முயற்சியை எடுக்கவில்லை. ஆனால் எதிரே நிற்பவர்களை உன்னிப்பாக கவனித்தார். ஆட்களை அடையாளம் தெரிந்துகொண்ட முகபாவத்தை கருணாநிதி வெளிப்படுத்தியதாக இரு தரப்புக்கும் நெருக்கமானவர்கள் கூறினர்.