Advertisment

பசுமைப் புரட்சி உழவர்களை கடனாளி ஆக்கியது; தமிழர் மரபு விவசாயத்துக்கு மாற வேண்டும்.. கி. வெங்கட்ராமன்

இந்தியாவில் கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, கேரளா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகள் உயிர்ம வேளாண் கொள்கையை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
K Venkatraman says Tamil farmers should switch to traditional agriculture instead of Green Revolution

தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மை கொள்கையை அறிவிக்கக்கோரி திங்கள்கிழமை (நவ.28) காலை திருச்சி மேல சிந்தாமணியில் தமிழக உழவர் முன்னணி அமைப்பினரின் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மை கொள்கையை அறிவிக்கக்கோரி திங்கள்கிழமை (நவ.28) காலை திருச்சி மேல சிந்தாமணியில் தமிழக உழவர் முன்னணி அமைப்பினரின் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

Advertisment

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில்,“நவீனம்”, “வளர்ச்சி" என்ற பெயரால் நம்மீது திணிக்கப்பட்ட பசுமைப் புரட்சி உழவர்களைக் கடனாளியாக்கியது.

வேளாண்மையை விட்டு உழவர்களை வெளியேற்றி வருகிறது. நீர், நிலம், காற்று நஞ்சானது. உண்ணும் உணவிலும் நஞ்சு கலந்தது. வீரிய வித்துகள் என்ற பெயரால் உழவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒட்டுவிதைகள் வெள்ளத்தையோ வறட்சியையோ நோய்களையோ தாங்க முடியாத நோஞ்சான் பயிர்களையே உருவாக்கின.

வேளாண்மையை இலாபகரமான தொழிலாக மாற்றுவதற்கும். பசுமைப் புரட்சியின் அழிவிலிருந்து வேளாண்மையைத் தற்காத்துக் கொள்ளவும் தமிழர் மரபு வேளாண்மைக்கு மாற வேண்டிய தேவை உள்ளது.

அரசின் பங்கேற்பும் ஆதரவும் இருந்தால்தான் இந்தத் தற்சாற்பு வேளாண்மையை பெருமளவு பாதுகாத்து வளர்க்க முடியும். இன்று சூழல் பேரழிவும், புவிவெப்பமாதல் சிக்கலும், உழவர் தற்கொலையும் அச்சுறுத்திக் கொண்டுள்ள சூழலில், உலக நாடுகள் பலவும் இயற்கை சார்ந்த வேளாண்மைக்கு முதன்மை கொடுத்து வருகின்றன.

இந்தியாவில் கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, கேரளா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகள் உயிர்ம வேளாண் கொள்கையை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன.

வேளாண்மையை வளம் குன்றாத -இலாபகரமான - மதிப்புமிக்க தொழிலாகப் பாதுகாப்பதற்கு, கிராமங்களில் இருந்து நகரம் நோக்கிய புலம்பெயர்வை மட்டுப் படுத்துவதற்கு, நிலத்தின் உயிர்ம வளத்தையும், உற்பத்தித் திறனையும் வளர்ப்பதற்கு, உழவர் தற்சார்பையும் அதன் வழியாக தமிழ்நாட்டின் தற்சார்பையும் உறுதிப்படுத்துவதற்கு, நிலம், நீர், காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு நஞ்சில்லா உணவும் வேளாண் உற்பத்திப் பொருட்களும் கிடைப்பதற்கு, உயிர்ம வேளாண்மைக் கொள்கை அறிவிப்பு மிகவும் தேவையாகும்.

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக உயிர்ம வேளாண்மைக் கொள்கையை (Organic Farming Policy) அறிவித்து, தமிழ்நாட்டை - முதன்மையான இயற்கையோடு இயைந்த வேளாண்மை மாநிலமாக மாற்றி தற்சார்புள்ள தமிழ்நாட்டைப் படைக்க முன்வர வேண்டும்” என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தாளாண்மை உழவர் இயக்கத்தை சேர்ந்த பாமயன், சுயாட்சி இயக்க தலைவர் கே.பாலகிருட்டிணன், கால்நடை மற்றும் மூலிகை மருத்துவம் அமைப்பை சேர்ந்த முனைவர் புண்ணியமூர்த்தி, தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கத்தை சேர்ந்த இரமேசு கருப்பையா, பசுமை சிகரம் சுற்றுச்சூழல் அமைப்பினை சேர்ந்த யோகநாதன், திருச்சி தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி. நீலமேகம், செயலாளர் கி.சதீஸ்குமார், துணை செயலாளர் ஆர்.கே.ராஜா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

நிறைவாக தமிழக உழவர் முன்னணி ஒருங்கிணைப்பு நிர்வாகி க.முருகன் நன்றி கூறினார்.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment