காலா படத்துக்கு தடை கேட்ட வழக்கில் நடிகர் ரஜினிக்கும், இயக்குனர் பா.ரஞ்சித்துக்கும் ஒரு வாரம் அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் ‘காலா’ படத்தை அவரது மருமகன் தனுஷ் தயாரித்து வருகிறார். ஏற்கனவே ரஜினியை வைத்து கபாலியை இயக்கிய பா.ரஞ்சித் இந்தப் படத்தை இயக்குகிறார்.
மும்பையிலும், சென்னை பூந்தமல்லியில் ‘செட்’ அமைத்தும் காலாவின் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. அண்மையில் உடல் பரிசோதனைகளுக்காக அமெரிக்கா சென்ற ரஜினி, திரும்பி வந்து காலாவில் மும்முரமாகியிருக்கிறார்.
இந்த காலாவின் கதைக்கும், தலைப்புக்கும் உரிமை கோரி சென்னை காரம்பாக்கத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தனது மனுவில், ‘ரஜினி நடிக்கும் காலா என்ற கரிகாலன் படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது. படத்தை ரஞ்சித் இயக்குகிறார். படத்தின் மூலக்கரு மற்றும் கதை குறித்து ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து பேசியுள்ளேன்.
1996ல் இயக்குனர் ரவிக்குமார் மூலம் கரிகாலன் மற்றும் உடன்பிறவாத தங்கச்சி ஆகிய படத் தலைப்புகளை வெளியிட்டேன். கரிகாலன் கதையின் கரு மற்றும் தலைப்பு அனைத்தும் என் படைப்பு. என் படைப்பை நடிகர் தனுஷ், இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மற்றொரு வடிவில் படமாக தயாரிக்கின்றனர். எனவே கரிகாலன் என்ற தலைப்பையும் கதையையும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.’ என கூறியிருந்தார்.
இந்த மனுவுக்கு பதிலளிக்க ரஜினி, ரஞ்சித் ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஜூலை 12-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ரஜினியும் ரஞ்சித்தும் மும்பையில் காலா படப்பிடிப்பில் இருப்பதாக அவர்களின் வழக்கறிஞர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே இவர்கள் பதிலளிக்க ஒரு வாரம் அவகாசம் கொடுத்து நீதிபதி உத்தரவிட்டார்.