Advertisment

நிலமும் வனமும் எங்களுக்கானவை! சுதந்திர தினத்தில் உரிமைக்காக போராடிய காடர் பழங்குடியினர்...

இடைமலையாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 1 வருடத்திற்கும் மேலாக தாய்முடி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் 24 குடும்பத்தினர் 6 வீடுகளில் வசித்து வந்தனர்.

author-image
Nithya Pandian
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kadar tribes staged protest inside forest on Independence day to get their tribal settlement

Kadar tribes staged protest inside forest on Independence day to get their tribal settlement : எரவாளார், மலசர், மலைமலசர், புலையர், காடர், முதுவர் என்று பல்வேறு பழங்குடி மக்களின் தாயகமாக விளங்குகிறது மேற்கு தொடர்ச்சி மலை. காடர்கள் கவரக்கல், கல்லாறு, உடும்பன்பாறை, நெடுங்குன்றம், ஈத்தக்குளி, மற்றும் எருமைப்பாறை என்ற ஆறு குடியிருப்பு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

Advertisment

2019ம் ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிப்பினை அடைந்தனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைந்திருக்கும் கல்லாறு பகுதியும் இதில் ஒன்று. தமிழக மலைவாழ் பழங்குடிகளான காடர்கள் இந்த பகுதியில் வசித்து வந்தனர். ஆரம்ப காலம் முதல் கொத்துக்காடு விவசாயம்  செய்து வந்தவர்கள், வன உயிர் பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பின்பு, பழங்கால முறையில் இருந்து  மாற்றம் அடைந்து, கிழங்கு, தேன் எடுத்தல் மற்றும் மிளகு விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர். கல்லாறுக்கு மிகவும் அருகில் 50 ஏக்கரில் அவர்களுக்கான சோலைகளும் அமைந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு ஏற்பட்ட கனமழையின் காரணமாக அவர்களின் குடியிருப்பு பகுதிக்கு அருகே அமைந்திருந்த இடைமலையாற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது.

ஒரு சிலரின் வீடுகள் முற்றிலுமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அவர்கள் அங்கிருக்கும் தங்களின் வீடுகளில் இருந்து வெளியேறி, கல்லாறுக்கு அருகிலேயே மீண்டும் ஒரு குடியிருப்பினை ஏற்படுத்தினர். இந்த விபரம் அறிந்து வந்த வனத்துறையினர், தாசில்தார் மற்றும் வருவாய்துறையினர் அவர்களின் குடியிருப்புகளை காலி செய்ய  24 மணி நேரமே அவகாசம் அளித்தனர். 24 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தாய்முடி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் இடம் அமர்த்தப்பட்டனர்.

publive-image 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காடுகளில் இருந்து காடர்கள் வெளியேற்றப்பட்ட போது

அவர்களின் சோலைகளில் மிளகு மற்றும் கிழங்கு எடுத்தல் தான் அவர்களுக்கு வாழ்வாதாரம். அதனை விற்று தான் அவர்கள் தங்களின் தேவைகளை பார்த்துக் கொள்வார்கள். காடுகளின் மீதான அவர்களின் உறவு அற்றுவிட்ட சூழலில் கிடைக்கும் வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. பொதுவெளி சமூகத்தினரின் ஓர் அங்கமாக மாற விரும்பாத அம்மக்கள் தொடர்ந்து பல்வேறு சமயங்களில் தங்களை காடுகளுக்குள் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். போராட்டங்கள் நடத்தவும் விருப்பம் தெரிவித்தனர். தொடர்ந்து அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் சுதந்திர தினத்தன்று போராட்டம் நடத்தி காடுகளுக்குள் குடியேறினார்கள் காடர்கள்.

மேலும் படிக்க : காடுகளில் இருந்து வெளியேற்றப்படும் காடர்கள் ... என்னவாகும் பழங்குடிகளின் நிலை  

போராட்டத்தில் ஈடுபட்ட  காடர்கள்

தாசில்தார், வனத்துறையினர் மற்றும் பழங்குடியினர் தலைவர்கள் என அனைவரிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. இருப்பினும் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் நிறைவடைந்தன.  தெப்பக்குளமேட்டில் குடியேற வேண்டும் என்று காடர் பழங்குடியினர் முடிவு செய்தனர். மேலும் தெப்பக்குள மேட்டில் குடியேற வேண்டும். அங்கிருக்கும் பூமியில் விவசாயம் செய்ய எந்த தரப்பில் இருந்தும் தொந்தரவுகள் வரக்கூடாது. காலம் காலமாக நாங்கள் வசித்து வரும் நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. காவல்துறை மற்றும் வருவாய்துறை இதற்கு அனுமதி அளித்த போதிலும் வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். அதனால் சுதந்திர தினத்தன்று நாங்கள் எங்களின் வனத்திற்கே திரும்பி சென்றிடுவோம் என்று தாய்முடி எஸ்டேட்டில் இருந்து மானம்பள்ளி வனச்சரகர் அலுவலகம் வரை நடைப் பயணம் மற்றும் அலுவலக முற்றுகை அறவழிப் போராட்டம் நடத்துவோம் என்று கூறியிருந்தனர்.

publive-image தெப்பக்குளமேட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட காடர்கள்

வன உரிமை அங்கீகார சட்டம் 2006 -ன் படி கிராம சபை கூட்டப்பட்டு சில தீர்மானங்களை எடுத்துள்ளனர். தங்கள் நிலத்தில் தாங்களே தங்களுக்கான சுதந்திரத்தை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தெப்பக்குளமேட்டில் பதாகைகள் வைத்து போராட்டம் நடத்தியதோடு குடிசைகளும் அமைக்க துவங்கினார்கள். 15/08/2020 மாலை 3 மணி வரை காட்டில் இருந்து போராட்டம் நடத்திய மக்கள் தற்போது தங்களின் தற்காலிக குடியிருப்பு பகுதிகளுக்கு சென்றுள்ளனர். காலை முதல் அந்த பகுதியில் வனத்துறையினர் அதிகமாக காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். தாசில்தாருடன் நாளை (17/08/2020) மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர் காடர் பழங்குடியினர்.

Kallaru Kadar tribes of Western Ghats தாய்முடி எஸ்டேட்டில் காடர் பழங்குடியினர்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இது தொடர்பாக போராட்டத்தில் இறங்கிய  ராஜலெட்சுமி ஜெயபாலிடம் பேசிய போது, நாங்கள் கிராம  சபையை ஜூன் மாதம் 3ம் தேதியே கூட்டி, எங்களுக்கு தெப்பக்குளமேட்டில் தான் இருப்பிடம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டோம். மேலும் அது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்றையும் எழுதினோம். ஆனால் இதற்கு இடைப்பட்ட தருணங்களில் இரண்டு முறைக்கும் மேல் வனத்துறையினர் வந்து, இடத்தினை குறிப்பிடாமல் கடிதத்தை எழுதி அனுப்புங்கள் என்று கூறுகின்றனர். அப்படி எழுதி அனுப்பினால் எங்களை காடுகளுக்குள் வாழ விடாமல் எங்கேனும் தூரமான இடத்தில் கொண்டு போய் விட்டுவிடுவார்கள். அவர்கள் கூறிய இடத்தில் எல்லாம் வாழ இயலாது. கல்லாறு இருப்பிடத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் தான் தெப்பக்குளமேடு இருக்கிறது. நீர், விறகு என்று எங்களுக்கு எதற்கும் பஞ்சமில்லை. நாங்கள் இருக்க போகும் பகுதிகளுக்கு பட்டாக்கள் மட்டும் வழங்கினால் போதுமானது” என்றும் கூறியுள்ளார் ராஜலெட்சுமி.

சட்டத்திற்கு எதிரானது - வனத்துறை தரப்பு

ஆனைமலை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் மற்றும் துணை வனப் பாதுகாவலர் ஆரோக்கியராஜ் சேவியரிடம் பேசிய போது, “வன உரிமைகள் அங்கீகார சட்டம் 2006-ன் படி, காடர் பழங்குடியினருக்கு அவர்கள் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வந்த பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் பட்டாக்கள் வழங்க ஏற்பாடாகியுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் பட்டாக்கள் வழங்கப்பட இருக்கும் நிலையில், இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேறு இடத்தில் குடியிருப்பு பகுதியை அமைத்து தர வேண்டும் என்று இவர்கள் கூறுவதை நாங்கள் ஏற்றுக் கொண்டாலும், மத்திய அரசு இதற்காக கமிட்டி ஒன்றை உருவாக்கி இதனை விசாரிப்பார்கள். அவர்களுக்கு தெப்பக்குளமேட்டில் குடியிருப்பு பகுதி அமைக்க ஆட்சேபணை இல்லை என்றால் நிச்சயமாக அவர்களுக்கு அங்கே பட்டாக்கள் வழங்கப்படும்” என்று கூறியுள்ளார். அதற்கு முன்பே இவர்கள் தெப்பக்குளமேட்டில் குடியேறினால் அது ஆக்கிரமிப்பின் கீழ் தான் வரும் என்றும்  கூறியுள்ளார். அவர்களுக்கு பாதுகாப்பான சூழல் தாய்முடி எஸ்டேட்டில் உள்ளது. அவர்கள் விவசாயம் செய்வதற்கான பூமிக்கும் பட்டா வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். தற்போது ஏன் புது இடம் கேட்டு போராட்டம் நடத்துகின்றார்கள் என்ற கேள்வியையும் முன் வைக்கிறார் அவர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment