Kaliru : தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் யானைகள் இறப்புகள், மனித - யானை இடையூறுகள், வனவிலங்கு தாக்குதல்களால் உயிரிழக்கும் மனிதர்களின் எண்ணிக்கை இதற்கு ஒரு தீர்வு இருப்பது போன்ற தோற்றப்போலியை கூட ஏற்படுத்தவில்லை.
வனங்களில் இருந்து வெளியேறும் யானைகள் மனிதர்களின் குடியிருப்புக்குள் புகுந்துவிட்டால் அவை அங்கிருந்து வெளியேற்றப்படுகின்றன. ஆனால் வெளியேற்றி எங்கே அனுப்பப்படுகின்றன? மற்றொரு காடு? அல்லது மற்றொரு மனித குடியிருப்பு? தமிழகத்தில் வனவிலங்கு - மனிதர்கள் மோதல்கள் அதிகமாக இருக்கும் இடங்களின் நிலைமை என்ன? எதற்காக இத்தகைய மோதல்கள் ஏற்படுகின்றது? இதற்கு தீர்வு என்ன? இத்தகைய மோதல்களை தடுப்பதில் வனத்துறையினரின் பங்கு என்ன என்ற பல கேள்விகளுக்கு பதிலாய் அமைந்துள்ளது 18 நிமிடங்கள் மட்டுமே ஓடும் ஆவணப்படம்.
களிறு - இந்த படத்தை திருப்பூரை சேர்ந்த வனவிலங்கு ஆவணப்பட இயக்குநர் சந்தோஷ் கிருஷ்ணன் (24) மற்றும் மத்திய பிரதேசத்தில் அமைந்திருக்கும் கன்ஹா புலிகள் காப்பகம், கிப்லிங் முகாமின் தலைமை இயற்கையாளருமான ஜெஸ்வின் கிங்ஸ்லி(28) இணைந்து இயக்கியுள்ளனர். பின்னணி குரல் கொடுத்துள்ளார் புகழ்ப்பெற்ற வனவிலங்கு புகைப்படக் கலைஞரும் இயற்கை ஆர்வலருமான பெலிண்டா ரைட்.
“மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இந்த படத்தை இயக்கினோம்” என்று தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசினார் இயக்குநர்களில் ஒருவரான சந்தோஷ் கிருஷ்ணன். “வருகின்ற காலங்களில் யானைகளின் இந்த மூர்க்க குணங்களும், தாக்குதல்களும் அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர இந்த போக்கு குறையாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகரிக்கலாம். அந்த நடவடிக்கைகள் மூலமாக மனித உயிர் இழப்புகள் குறையுமே தவிர மனித - யானை இடையூறுகள் வருகின்ற காலத்தில் குறைவதற்கான வாய்ப்புகள் குறைவு” என்று கூறினார் சந்தோஷ்.
”நமக்கு தேவையான கரும்புகள் அனைத்தும் கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. கர்நாடக வனப்பகுதிகளிலும் பிரச்சனை இல்லை. தமிழக எல்லைப் பகுதிகளிலும் பிரச்சனை இல்லை. சத்தியமங்கலம் திம்பம் சாலையில் கரும்புகள் கொண்டு வரப்பட வேண்டும் என்றால், குறைவான அளாவில் கரும்புகளை ஏற்றி வருவது தான் சரியான முறை. வளைவுகளில் அதிக எடை காரணமாக கீழே விழும் அபாயங்களும் இருக்கின்றன என்பதால் ஹாசனூரில் ஒரு “செக்போஸ்ட்” வைக்கப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக எடுத்துவரப்படும் கரும்புகள் இங்கே பிரித்தெடுக்கப்பட்டு கீழே போடப்படுகின்றன. இங்கே கரும்பு லாரிகள் வந்து நிற்கும் என்பது யானைகளுக்கு நன்றாகவே தெரியும் என்பதால் அந்த செக்போஸ்ட்டில் எப்போதும் 10 முதல் 20 யானைகள் நின்று கொண்டே தான் இருக்கும். யானைகளின் இந்த நடத்தை மாற்றங்கள் (Behaviour changes) தற்போதய பிரச்சனை இல்லை. ஆனால் மிக நிச்சயமாக அதன் அடுத்த தலைமுறையின் மரபுகளில் மாற்றங்களை உருவாக்கும் பிரச்சனை. காடுகளில் இருப்பதற்கு பதிலாக சாலைகளில் கரும்பு உட்கொள்ளலாம் என்ற செய்தி கடத்தப்படும் என்பது தான் அதிக பின்விளைவுகளை ஏற்படுத்தும் பிரச்சனை” என்று மனிதர்களின் செயல்பாட்டினால் யானைகளின் நடத்தைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து உரையாடினார் சந்தோஷ்.
இது ஹாசனூர் பகுதிக்கே உரிய பிரச்சனை. ஒவ்வொரு பகுதியிலும் அங்கே நிலவும் கால சூழலுக்கு ஏற்றவாறு யானைகள் பிரச்சனைகளை சந்திக்கின்றன. தமிழக யானைகளின் பிரச்சனைகள் அனைத்தும் ஒரே சீராக இருக்கிறது என்று கூறிவிட இயலாது. கோவையில் இருக்கும் பிரச்சனை நீலகிரியில் இருக்காது. எனவே தான் ஒவ்வொரு பகுதியிலும் இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க தனிப்பட்ட தீர்வுகளை கையாள வேண்டும் என்றும் கூறினார் சந்தோஷ் கிருஷ்ணன்.
EL CINE SUMA PAZ, தாகூர் சர்வதேச திரைப்பட விழா, One earth award - போன்ற சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆவணப்பட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றதோடு சில திரைப்பட விழாக்களில் பங்கேற்று அரையிறுதி, இறுதிச் சுற்றுவரை களிறு படம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
”கொரோனா தொற்று முதல் அலை முடிவுற்ற பிறகு நான் என்னுடைய சொந்த ஊரான மேட்டுப்பாளையத்திற்கு வந்தேன். எங்கள் வீட்டின் முன்னால் குப்பைத் தொட்டியில் போடப்பட்டிருந்த பலாப்பழத்தை சாப்பிட பாகுபலி என்ற யானை வந்தது. யானை வரவும் அக்கம்பக்கத்தில் இருந்த நபர்கள் அனைவரும் சேர்ந்து கூச்சலிட அங்கு பெரும் பரபரப்பான சூழலே ஏற்பட்டுவிட்டது.
யானைகள் வழித்தடமாக அறியப்பட்டுள்ள கல்லாறு வழித்தடத்தில் யானைகளின் நிலைமையும் காடுகளின் நிலைமையும் மோசம் அடைந்ததை நாம் சமீபத்தில் பார்த்திருப்போம். விவசாயிகள் பயிரிடும் முறையில் ஏற்பட்ட மாற்றங்களும் அவர்களின் ஓராண்டு உழைப்பை சில நொடிகளில் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் யானைகளின் “வாழ்வா சாவா” போராட்டமும் தான் களிறு ஆவணப்படம் எடுக்க உத்வேகமாக இருந்தது” என்று நம்மிடம் பேசினார் களிறு ஆவணப்படத்தின் மற்றொரு இயக்குநர் ஜெஸ்வின் கிங்ஸ்லி.
”வருடாந்திர வலசை செல்லும் யானைகள் இந்த பகுதிகளில் சந்திக்கும் பிரச்சனைகளை தடுக்கவும், யானைகள் மனிதர்கள் குடியிருப்பு பகுதிக்குள் வந்துவிட்டால் யானைகளை காட்டுப்பகுதிக்குள் திருப்பி அனுப்பவும் நானும் என்னுடைய தந்தையும் முன்பு வனத்துறையினருக்கு உதவிகள் செய்து வந்தோம். கோவையில் யானைகளை துரத்த பட்டாசு வெடித்தல், வால்பாறையில் தேயிலை தோட்டங்களில் இருந்து யானைகளை வெளியேற்ற பயன்படுத்தப்படும் யுத்திகள் அனைத்தும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் இருந்தாலும் பல ஆண்டுகளாக வலசை செல்லும் பாதையை தொலைத்த யானைகளுக்கு இது மேலும் சிக்கல்களையே தருகிறது. களிறு கள யதார்த்தம் என்னவோ அதனை பேசுகிறது. நிஜத்தில், மாற்றங்களை இப்படம் ஏற்படுத்தும் என்று நம்புகின்றோம். யானைகளின் மாறுபட்ட பழக்கங்களுக்கு மத்தியில் மக்கள் தங்களை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஒரு சிந்தனையை இப்படம் உருவாக்கும் என்று நினைக்கின்றோம்” என ஜெஸ்வின் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.