கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 100-க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ள நிலையில், இதுவரை 36 பேர் மரண அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள கருணாபுரம் பகுதி மட்டுமல்லாமல் மாதவச்சேரி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பலர் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100-க்கு அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒருசிலர் அபாய கட்டத்தை கடந்திருக்கும் நிலையில், பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து சி.பி.எம். கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் ஆகியோரும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவர்கள் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருவதாக பாதிக்கப்பட்ட நபர்களுடன் இருப்பவர்கள் தெரிந்துள்ளனர். சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் வார்டு உள்ளே பாதிக்கப்பட்டவர்களின் அலறல் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. வெளியில் அவர்களின் உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் பார்ப்பவரை கண்கலங்க வைக்கிறது.
இதுபற்றி பாதிக்கப்பட்டவரின் உறவினரிடம் நாம் பேசினோம். அப்போது அவர் கூறுகையில், "நேற்று காலை தான் அவர் கொஞ்சம் சாராயத்தை குடித்துள்ளார். தற்போது முன்னெச்சரிக்கையாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எந்தப் பாதிப்பும் இப்போது வரையில் இல்லை. சில மணி நேரம் கழித்து தான் பாதிப்பு அடைந்துள்ளாரா என்பது பற்றி தெரிய வரும். அவரது இரத்தத்தை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். இங்கு மருத்துவமனையில் நன்றாக சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
எங்கள் பகுதியில் (கருணாபுரம்) நிறைய பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலர் இறந்துள்ளனர். பொதுவாக ஊரில் நல்லது, கெட்டது நடக்கும் போது சாராயம் வாங்கிப் பருகுவார்கள். கள்ளச்சாராயம் விற்பனை செய்தவரின் மீது வழக்குகள் உள்ளன. சிலரை கைது செய்துள்ளனர்" என்று அவர் கூறினார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்த 22 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் தற்போது அடக்கம் செய்ய உடல்கள் இடுகாட்டுக்கு எடுத்துச்செல்லும் பணி தொடங்கியது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“