நீலகிரியில் சுற்றித் திரியும் ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல வேண்டாம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் மற்றும் பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடி பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்குள் 4 பேர்களை கடித்துக் கொன்றது. அதில், கடந்த ஆண்டு மசினகுடியை சேர்ந்த கௌரி என்ற பெண்ணை கால்நடைகளை மேய்த்து கொண்டிருந்தபோது கணவர் கண்ணெதிரே புலி தாக்கி கொன்றது.
இதையடுத்து, சில வாரங்கள் கழித்து அந்த பகுதியில், பெண் புலிக்கு விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்றது. இதனால் பெண்ணை கொன்ற புலி இறந்ததாக கருதப்பட்டது. ஆனால், இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 19ம் தேதி கூடலூர் அருகே முதுமலை பகுதியை சேர்ந்த குஞ்சு கிருஷ்ணன் என்ற விவசாயியை புலி கடித்து கொன்றது. இதைத் தொடர்ந்து, தேவர்சோலை அருகே தேவன் – 1 பகுதியைச் சேர்ந்த தோட்ட தொழிலாளி சந்திரன் என்பவரை புலி தாக்கி கொன்றது. அடுத்ததாக, மசினகுடி அருகே 4வது நபராக முதியவர் மங்கல பஸ்வனை புலி கடித்துக்கொன்றது.
ஒரு ஆண்டுக்குள் 4 பேர்களை கடித்துக் கொன்ற டி-23 என்று பெயரிடப்பட்டுள்ள ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல தமிழ்நாடு முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நிரஜ் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து, ஆட்கொல்லி புலியை சுட்டு கொல்ல பிரத்யேக பயிற்சி பெற்ற அதிரடிப்படையினர் மசினகுடி பகுதிக்கு வருகை தந்துள்ளனர். அதிரடிப்படையினர் 20 பேர் ஐந்து குழுக்களாக பிரிந்து புலியை கண்டவுடன் சுட்டு கொல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், மக்களின் உயிர் முக்கியம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் புலியைக் கொல்வதும் தீர்வு அல்ல. T-23 புலியை அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் பிடித்து மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையைக் கேட்டுக்கொள்கிறேன் என மக்கள் ட்வீட் செய்துள்ளார்.
இதேபோல் பாஜக எம்.எம்.ஏ வானதி ஸ்ரீனிவாசன், “நீலகிரி புலியை சுட்டுக் கொல்லும் உத்தரவை பாஜக விரும்பவில்லை. தயவுசெய்து அந்த புலியை சுட்டுக் கொல்லாமல் வனத்தில் கொண்டு விடவேண்டும் என்றும் புலி என்பது ஒற்றை உயிர் அல்ல” என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், கூடலூர் பகுதியில் 4 பேரை அடித்துக் கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுப்பிடிக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என வனத்துறை தெரிவித்துள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும், தேடுதல், பொறி வைத்துப் பிடித்தல், அமைதிப் படுத்தல் நடவடிக்கைகள் பலன் தராத நிலையில் தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தற்போதைய சூழலில் புலியை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது என்றும் வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil