அரசியலில் வெற்றிபெறும் ரகசியம் நடிகர் கமல்ஹாசனுக்கு தெரியும் எனவும், அந்த ரகசியத்தை கமல்ஹாசன் தன்னிடம் கூறமாட்டார் எனவும், நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
சென்னை அடையாறில் அரசு சார்பில் கட்டப்பட்ட சிவாஜி மணி மண்டபத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அவரது பிறந்த நாளான இன்று திறந்து வைத்தார். சென்னை அடையாறில் நடைபெற்ற திறப்பு விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, பாண்டியராஜன், நடிகர்கள் ரஜினி, கமல் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள், திரையுலகினர் கலந்து கொண்டனர் சிவாஜி கணேசன் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், காலம் காலமாக நிலைத்து நிற்கும் நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை திறக்கும் அதிர்ஷ்டம், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கிடைத்திருப்பதன் மூலம், அவர் அதிர்ஷ்டசாலி என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது என கூறினார்.
”தமிழ் சினிமாவின் போக்கை மாற்றி நடிப்பு, வசன உச்சரிப்பு, பாவனையில் புரட்சி செய்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நடிப்பின் உச்சமாக விளங்கியவர் சிவாஜி கணேசன்”, என ரஜினிகாந்த் புகழாரம் சூட்டினார்.
புராணங்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை நம் கண் முன்னே நிறுத்தியவர் சிவாஜி கணேசன் எனவும், கடவுள் மறுப்பு கொள்கை வேரூன்றியிருந்த கால கட்டத்தில் தன் நடிப்பை மட்டுமே நம்பி நெற்றியில் பட்டை போட்டு உச்சத்தை தொட்டார் என ரஜினிகாந்த் பேட்சினார்.
அரசியலில் சிவாஜி கணேசன் தோற்றது, அவரை தோற்கடித்த மக்களுக்குத் தான் அவமானம் என ரஜினிகாந்த் தெரிவித்தார்.
மேலும், “சிவாஜி அனைவருக்கும் அரசியல் பாடம் ஒன்றை கற்றுக்கொடுத்துள்ளார். அரசியலில் வெற்றிபெற சினிமா மட்டும் போதாது அதைத்தாண்டி ஒன்று வேண்டும் என்பது அவரது அரசியல் தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். அந்த ஒன்று என்ன என்பது மக்களுக்குத் தான் தெரியும். ஒருவேளை கமல்ஹாசனுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால், அதை என்னிடம் கூற மாட்டேன் என்கிறார். என்னுடன் வந்தால் சொல்லித் தருகிறேன் என்று கூறுகிறார். ஒருவேளை 2 மாதங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் சொல்லியிருப்பாரோ”, என கூறினார்.