“தன்மானம்தான் முக்கியம்” ரஜினியை சீண்டுகிறாரா கமல்?

கருணாநிதியின் பெருந்தன்மை என்னவென்றால் மறுபடியும் அவர் அது குறித்து கேட்கவேயில்லை. அது மூதறிஞர்களுக்கு, பெரியவர்களுக்கே உரித்தான தன்மை.

ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்தும், கிண்டல் அடித்தும் பேசியவர்கள் எல்லாம் இந்த மேடையில் இருக்கின்றனர். இதுபோன்ற ஒரு புதிய கலாசாரத்தை நானும் பயில இந்த மேடைக்கு வந்திருக்கிறேன் என்று முரசொலி நாளிதழின் பவள விழாவில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

‘முரசொலி’ நாளிதழின் பவள விழா வாழ்த்து அரங்கம் நேற்று மாலை நடைபெற்றது. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு திமு. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

இந்த விழாவில் ‘இந்து’ குழுமத்தின் தலைவர் இந்து என்.ராம், நடிகர் கமல்ஹாசன், ‘தினத்தந்தி’ தலைமை பொதுமேலாளர்(நிர்வாகம்) ஆர்.சந்திரன், கவிஞர் வைரமுத்து, ‘ஆனந்த விகடன்’ குழுமத்தின் மேலாண் இயக்குனர் பா.சீனிவாசன், ‘தினமணி’ ஆசிரியர் வைத்தியநாதன், ‘தினமலர்’ ஆசிரியர் ரமேஷ், ‘டெக்கான் கிரானிக்கல்’ ஆசிரியர் பகவான் சிங், ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆசிரியர் அருண்ராம், ‘தினகரன்’ செய்தி ஆசிரியர் மனோஜ் குமார், ‘நக்கீரன்’ கோபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அப்போது நடிகர் கமல்ஹாசன் பேசும்போது: நான் வயது வந்தது முதல் திமுக தலைவர் கருணாநிதியின் ரசிகனாக இருந்து வந்திருக்கிறேன். நடிகர் ரஜினிகாந்த் இந்நிகழ்சிக்கு வருகிறாரா? என்று கேட்டிருந்தேன். ஆம் வருகிறார், பார்வையாளர் இடத்தில் அமர்கிறார் என்று சொன்னார்கள். மேடைக்கு வந்தால், ரஜினியுடன் கையைப்பிடித்து இருந்து கொள்ளலாம், வம்பில் மாட்டிக் கொள்ளமாட்டோம் என்று நினைத்தேன்.

விழாவிற்கான அழைப்பிதழை பெற்ற பின்னர், கண்ணாடியை பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தேன். அப்போது ‘அடேய் முட்டாள் எவ்வளவு பெரிய வாய்ப்பை இழக்கிறாய்.. இந்த விழா எப்படிப்பட்ட விழா என்பதை முதலில் புரிந்துகொள்’ என்று எனக்கு தோன்றியது.

தற்காப்பு முக்கியம் இல்லை, தன்மானம் தான் முக்கியம். ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், இந்த மேடையில் வீற்றிருக்கும் பெரிய பத்திரிகை ஆசிரியர்களுடன், பாதியில் பத்திரிகை நடத்தமுடியாமல் பாதியில் நிறுத்திய கடைநிலை பத்திரிகை ஆசிரியராக இந்த மேடையில் அமரும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இது மாபெரும் வாய்ப்பாகவே கருதுகிறேன். அவர்களுடன் அமர நான் தகுதியானவனா? என்பதை யோசித்துப் பார்க்காமல் வாய்ப்பை பறித்துக் கொண்டேன் என்று தான் கூறவேண்டும்.

அந்த விழாவுக்கு(முரசொலி பவள விழா) சென்று கழகத்தில்(தி.மு.க.) சேர்கிறீர்களா? என்னிடம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. அப்படி ஒருவேளை நான் திமுக-வில் சேர்வதாக இருந்தால், 1983-ம் ஆண்டில் கருணாநிதி அனுப்பிய ஒரு ‘டெலிகிராம்’ வந்தது. அது ஒரு கேள்வி. அந்த பெரும்தன்மையை நான் என்றும் மறக்கமாட்டேன்.

நீங்கள் ஏன் தி.மு.க.வில் சேரக்கூடாது? என்று வந்திருந்தது. அந்த ‘டெலிகிராமை’ வெளியில் காட்டவும் தைரியம் இல்லை, அதற்கு பதில் சொல்லவும் தைரியம் இல்லை. அதை மடித்து அப்படியே உள்ளே வைத்துவிட்டேன்.அந்த டெலிகிராமிற்கு இன்று வரை பதில் சொல்லவில்லை.

அதில், கருணாநிதியின் பெருந்தன்மை என்னவென்றால் மறுபடியும் அவர் அது குறித்து கேட்கவேயில்லை. அது மூதறிஞர்களுக்கு, பெரியவர்களுக்கே உரித்தான தன்மை. அதேபோன்ற மரியாதை இந்த மேடையிலும் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறேன்.

ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்தும், கிண்டல் அடித்தும் பேசியவர்கள் எல்லாம் இந்த மேடையில் இருக்கின்றனர். இதுபோன்ற ஒரு புதிய கலாசாரத்தை நானும் பயில இந்த மேடைக்கு வந்திருக்கிறேன்.

‘ஆனந்த விகடன்’ சீனிவாசன் பேசும்போது எங்கள் பத்திரிகை பற்றி ‘பூநூல் பத்திரிகை என்றும், பாரம்பரிய பத்திரிகை என்றும் சொல்லி கிண்டல் அடித்திருக்கிறார்கள்’ என்று சொன்னார். அவரே சந்தோ‌ஷமாக இந்த விழாவுக்கு வந்திருக்கும்போது, பூநூலே இல்லாத கலைஞானி இந்த விழாவுக்கு வருவதில் என்ன ஆச்சரியம்? இருக்கிறது. ஏன் இப்படி பதறுகிறீர்கள்? இது ஒரு பத்திரிகையின் வெற்றி விழா.

இங்கே வந்து ஏதாவது அரசியல் விமர்சனம் சொல்வீர்களா? என்றால் அதற்கு இதுவா மேடை. அந்த அறிவு எனக்காவது இருக்க வேண்டாமா? இங்கே ஒரு புதிய அனுபவத்தை தமிழகம் பெற்றுக்கொண்டிருக்கிறது. இவர்கள் எல்லாம் அதற்கு முன்னோடிகளாக விளங்குவார்கள்.

சரித்திரம் சொல்லும் இங்கே வந்துள்ள பத்திரிகை ஆசிரியர்கள் எல்லாம் காட்டிய கண்ணியம், அவர்கள் செய்த கடமை, அவர்கள் காண்பித்த கட்டுப்பாடு ஏற்கனவே கேட்டவை தான். ஆனால் இந்த பத்திரிகையாளர்கள் வெவ்வேறு கருத்துடையவர்களாக இருப்பினும் அதனை செயல்படுத்தி காட்டி இருக்கிறார்கள் . அந்த கூட்டத்தில் அமரும் பாக்கியத்தை பெற்றே ஆகவேண்டும் என்ற ஒரு பேராசையுடன் வந்தவன் நான். இன்னொரு வி‌ஷயத்தை இந்த மேடையில் வைப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.

அரசியலே பேசாமல் போய்விட்டார் என்று வையக்கூடாது அல்லவா? அதற்காக. இதோடு முடிந்தது இந்த திராவிடம் என்றெல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அது குறித்து முன்னதாகவே நான் கூறியிருந்தேன், “ஜன கன மன” பாட்டில் திராவிடம் என்ற சொல் இருக்கும் வரை இது இருக்கும். இதற்கு அடுத்த கட்டம் செல்கிறேன்.

திராவிடம் என்பது இங்கே தமிழகம், தென்னகத்தோடு மட்டும் நின்றுவிட்டது என்று நினைப்பவர்களுக்கு கொஞ்சம் தொல்பொருள் ஆராய்ச்சி பற்றியும், மானுடவியல் பற்றியும் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு படித்து தெரிந்ததால் அல்ல, சொல்ல கேட்டதால் கூறுகிறேன். நாடு தழுவியது இந்த திராவிடம். சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்து மெதுவாக தள்ளிக்கொள்ளப்பட்டு வந்து, கடைசில் ‘டிக்காசன்’ போல படிந்து நிற்கிறது. இந்திய இயக்கத்தை தடை செய்ய முயற்சி நடக்கிறது, இதை திராவிடம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு செய்தால் நாடு நம்மை நினைவில் வைத்துக்கொள்ளும். நான் சொல்வது ஓட்டின் எண்ணிக்கையை அல்ல. மக்களின் சக்தியை.

இவ்வாறு அவர் பேசினார்.

கமல்ஹாசன் பேசும்போது, “தற்காப்பு முகிக்கியம் இல்லை, தன்மானம் தான் முக்கியம்” என்று குறிப்பிட்டிருந்தார். அவரது அந்த பேச்சு நடிகர் ரஜினிகாந்தை சீண்டியது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியதாகவே பார்க்கப்படுகிறது. பார்வையாளர் மத்தியில் ரஜினிகாந்த் இருக்க, மேடையில் அமர்ந்திருந்த கமல்ஹாசன் இவ்வாறு பேசியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

ரஜினிகாந்த் அரசியலில் களம் இறங்க காத்திருப்பதற்கு முன்னோட்டமாக சில கருத்துக்களை முன்னதாக தெரிவித்திருந்தார். ஆனால், எப்போது அரசியலில் இறங்கப்போகிறார் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

ஆனால், சமீபத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது என்று கமல்ஹாசன் தெரிவித்த கருத்து தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. அமைச்சர்கள் மாறி மாறி கமல்ஹாசனை விமர்சித்த நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளை அமைச்சர்களுக்கு அனுப்பி வையுங்கள் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டார் கமல்ஹாசன். மேலும், நான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டேன் என்றும் அமைச்சர்களுக்கு பதிலடி கொடுத்தார். இந்த நிலையில், அவர் திமுக-வின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close