போஸ்டர் அடித்து பணத்தை வீணாக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக அரசில் ஊழல் மலிந்துவிட்டது என்று முன்னதாக கமல்ஹாசன் கூறிய கருத்து தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. நடிகர் கமல்ஹாசனின் அந்த கருத்துக்கு பதிலளிக்க வேண்டிய அமைச்சர்களோ, பதில் சொல்வதை விட்டுவிட்டு கமல்ஹாசனுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். அதோடு, வழக்குப் போட்டுவிடுவோம், என்றும் வருமான வரி கட்டியது குறித்து சோதனை செய்வோம் என்று மிரட்டல் விடுத்தனர்.
இதற்கு அமைச்சர்கள் மட்டும் தான் அப்படி பேசினர் என்றால், முதலமைச்சரும் இதில் இணைந்து விட்டார். கமல்ஹாசன் அரசியலுக்கு வரட்டும் அதற்கு பின்னர் அவரின் கருத்துக்கு பதில் சொல்வோம் என்று தெரிவித்தார்.
இதற்கெல்லாம், தனது சமூல வலைதள பக்கத்தின் பதிவின் மூலம் பதிலடி கொடுத்தார் கமல்ஹாசன். அதில், எனது துறையில் உள்ள ஊழல்கள் குறித்து நான் அமைச்சர்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் சந்திக்கும் ஊழல் குறித்த புகார்களை அமைச்சர்களுக்கு அனுப்புங்கள் மக்களே என்று குறிப்பிட்டு அமைச்சர்களின் விவரங்கள் அடங்கிய இணையதள முகவரியை இணைத்திருந்தார்.
இந்த நிலையில், சிலர் கமலுக்கு எதிர்பு தெரிவித்திருந்தாலும், கமல்ஹாசனுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், ரசிகர்கள் தரப்பில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக போஸ்டர்களும் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டு வருகின்றன.
இதனையறிந்த கமல்ஹாசன் தற்போது, சமூல வலைதளப்பக்கத்தின் மூலமாக ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், போஸ்டர்கள் அடித்து பணத்தை வீண் செய்ய வேண்டாம் என்றும், இவர்களுக்கு பதிலளிக்க நானே போதும் என்றும் பதிவிட்டுள்ளார்.