Kamal Haasan Controversial Speeches : இந்த வாரத்தின் ஹாட் டாபிக் என்னவென்றால் காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே தீவிரவாதியா இல்லை இந்துத்துவா கொள்கை கொண்டவர்களின் கதாநாயகனா என்பது தான்!
நாதுராம் கோட்சேவை தீவிரவாதி என்று சொல்லியதால் தான் இத்தனை கொந்தளிப்புகளா இல்லை, “நாதுராம் கோட்சே தான் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி... மேலும் அவர் ஒரு “இந்து” என்று கமல்ஹாசன் குறிப்பிட்டது தான் பிரச்சனையா?" என்பதையெல்லாம் பாஜகவினரும், இந்துத்துவா கொள்கை உடையவர்களும் தான் விளக்க வேண்டும்.
அந்த பிரச்சனைகளை அரசியல் தலைவர்களிடம் தள்ளிவிட்டு இங்கே வருவோம். தேசிய அளவில் எச்.ராஜா எப்படி தன்னுடைய ஹேட்ரெட் பேச்சுகளால் கவனம் பெற்றாரோ அதே போன்று கமல்ஹாசனும் தன்னுடைய சர்ச்சைப் பேச்சால் தேசிய அளவில் மிக சமீபமாக பேசு பொருளாகி வருகின்றார்.
மக்களின் வரிப்பணம் எங்கே ?
2015ம் ஆண்டு சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்கள் மழை நீரால் சூழ்ந்திருந்த காலத்தில், நான் ஏன் நன்கொடை அளிக்க வேண்டும். என்னுடைய வரிப்பணம் எங்கே? மக்களின் வரிப்பணம் எங்கே என்று கேள்வி கேட்டார். பிறகு அந்த கேள்வியை நான் கேட்கவில்லை என்று கூறினார். ஓ.பி.எஸ் அன்று கமல் ஹாசனை கருத்து கந்தசாமி என்றும் குழப்பும் பிதற்றல்வாதி என்றும் பதில் கருத்தாக்கத்தினை அளித்தார். அதன் பின் ஒரு வாரம் கமல்ஹாசனில் இல்லம் மற்றும் அலுவலகத்தில் மின்சார வசதி இல்லாமல் போனதெல்லாம் தனிக் கதை
ஜெயலலிதா இறப்பின் போது கமல்ஹாசனின் பதிவு
2016ம் ஆண்டு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அனைவரும் சோகத்தில் இருந்த போது, கமல்ஹாசனின் ட்வீட் சர்ச்சையை கிளப்பியது.
காஷ்மீரில் ஏன் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை ?
புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னணியில் இருக்கும் இந்தியா - காஷ்மீர் - பாகிஸ்தான் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பிய போது, இரு தரப்பு அரசியல்வாதிகளும் பேச்சுவார்த்தைகள் நடத்தி, நடுநிலைமையுடன் செயல்பட்டால் ஏன் இது போன்று நாட்டின் பாதுகாவலர்கள் இறக்க போகின்றார்கள் என்றும், காஷ்மீரில் ஏன் போது வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். அதில் அவர் குறிப்பிட்ட “அசாத் காஷ்மீர்” அன்றைய வட இந்திய செய்தி சேனல்களில் மிகப்பெரிய பேசும் பொருளானது. காஷ்மீரை பிரிக்கச் சொல்கின்றாரா கமல் என்ற விவாதமும் எழுந்தது,
சாதி குறித்த கருத்து
சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் பிள்ளைகளின் பள்ளிக்கூட விண்ணப்ப படிவத்தில் சாதி மற்றும் மதப் பெயர்களை குறிப்பிட வேண்டாம் என்றும், ஸ்ருதி மற்றும் அக்ஷரா ஹாசனின் பள்ளிப் படிவங்களை அவ்வாறே பூர்த்தி செய்தேன் என்றும் அவர் கூறினார்.
ஆனால் ஸ்ருதியோ, தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் ஐயங்கார் குடும்பப் பின்னணியில் இருந்து வந்தேன் என்று குறிப்பிட, மீண்டும் சர்ச்சைக்கு ஆளான கமல் ஹாசன். ஊருக்கு உபதேசம் இருக்கட்டும் கமல், ஆனால் மாற்றத்தை உங்களின் வீட்டில் இருந்து துவங்குங்கள் என்று அன்றும் நெட்டிசன்களால் பொறித்தெடுக்கப்பட்டார் உலக நாயகன்.
விஸ்வரூபம் முதல் இன்று வரை!
“விஸ்வரூபம் பார்ட் 1 வெளியாகாத விரக்தியில் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை” என்பதில் துவங்குகிறது இந்த கருத்துச் சுதந்திர இடர்பாடுகள். என்னை மாற்றிய நூல் பூணூல், அதனால் தான் விலகியே நிற்கின்றேன் என்றும், உங்க அம்மாவுக்கே ஏற்பட்ட இந்த அவமானத்தை எப்படி துடைக்க போறீங்க சாமி வரை , எப்போது கருத்து சொல்ல வாயைத் திறந்தாலுமே சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார் கமல்ஹாசன்.
இருந்தாலும், இந்து மகாசபையின் தலைவர் பூஜா ஷகூன் பாண்டே மகாத்மா காந்தியின் 71வது நினைவு தினத்தன்று, காந்தியின் புகைப்படத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடிய போது எங்கே போனது பாஜகவின் தேசப் பற்று என்றும் மக்கள் தான் கேள்வி எழுப்புகின்றார்கள்.
அய்யோ இப்போ மறுபடியும் ஒரு கேள்வி கேக்கனும்னு தோணுதே, மகாத்மா காந்தியை கொண்டாடுபவர்கள் தேசப் பற்றாளர்களா, மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றவர், சுட்டு சுட்டு விளையாடுபவர்களை கொண்டாடுபவர்கள் தேசப்பற்றாளர்களா ? - குழப்பத்தில் தேசப் பற்று!