ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தமிழ் இருக்கைக்கு நிதி குவிகிறது. சென்னையில் இன்று நடிகர் கமல்ஹாசன் ரூ 20 லட்சம் நிதியை அதற்காக வழங்கினார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்காவில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற தனியார் பல்கலைக்கழகம்! இங்கு தமிழ் மொழிக்கென ஒரு இருக்கையை ஏற்படுத்துவதற்கு கடந்த 3 ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கான முயற்சிகளை, அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசிக்கும் இதயநோய் மருத்துவரான வி. ஜானகிராமனும், புற்றுநோய் மருத்துவரான ஞானசம்பந்தனும் மேற்கொண்டுவருகிறார்கள்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான நிரந்தர இருக்கையை ஏற்படுத்த 6 மில்லியன் டாலர்கள் தேவைப்படும். ஜானகிராமனும், சம்பந்தனும் தலா அரை மில்லியன் டாலர்களை தானமாகக் கொடுத்துள்ளனர். தமிழக அரசு ரூ 10 கோடி (சுமார் 1.5 மில்லியன் டாலர்) வழங்கியது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் இருந்து சுமார் 2 மில்லியன் டாலர்கள் அளவுக்குத் திரட்டப்பட்ட நிலையில், மீதமுள்ள நிதியைத் திரட்டும் முயற்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் திரையுலகைச் சேர்ந்த பலரும் உதவி வருகிறார்கள். நடிகர் விஷால் தனது பங்காக ரூ 10 லட்சம் வழங்கினார். இந்தச் சூழலில் அரசியலில் ஐக்கியமாகியிருப்பவரான நடிகர் கமல்ஹாசன் ரூ 20 லட்சம் நிதியை வழங்கியிருக்கிறார். இதற்கான காசோலையை இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து ஒருங்கிணைப்பாளர்களிடம் கமல்ஹாசன் வழங்கினார். அப்போது பேராசிரியர் ஞானசம்பந்தன் உடன் இருந்தார்.
இந்த நிதி வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், ‘ஊர்கூடி தேர் இழுப்போம். தமிழ் இருக்கைக்கு குரல் கொடுப்பதுடன் பொருளும் கொடுப்போம்’ என்றார். கமல்ஹாசனைத் தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து மேலும் பலர் தேவையான நிதியை ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.