ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்த விமர்சனத்துக்கு கமல்ஹாசன் விளக்கம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து கடந்த வாரம் தான் அளித்த விமர்சனத்துக்கு, தற்போது விளக்கம் அளித்துள்ளார் கமல்ஹாசன்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து கடந்த வாரம் தான் அளித்த விமர்சனத்துக்கு, தற்போது விளக்கம் அளித்துள்ளார் கமல்ஹாசன்.

‘ஆனந்த விகடன்’ இதழில் ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ என்ற தொடரை எழுதிவரும் கமல்ஹாசன், கடந்த வார இதழில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து விமர்சித்து எழுதியிருந்தார். ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் என்பது ஊரறிய நடந்த ஒரு குற்றம்’ என அவர் குறிப்பிட்டிருந்தார். (அதைப் படிக்க க்ளிக் செய்க)

கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். உருவ பொம்மை எரிப்பு, வழக்கு என்று அவர்கள் சென்றுள்ள நிலையில், இந்த வார இதழில் அதற்கு விளக்கம் அளித்து கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். “முழுநேர அரசியல்வாதியாகப்போகிறேன் என்றதும் திசையெங்கிலுமிருந்து விசாரிப்புகள், விமர்சனங்கள், கேள்விகள்… அவற்றில் சிலவற்றுக்கு இந்த வாரம் பதிலளிக்கலாம் என்று இருக்கிறேன்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பற்றி விமர்சனம் வைக்கும் நீங்கள் ஏன் அதில் பங்கெடுக்கவில்லை” என்கிறார்கள். அது எப்படிப் போகும் என்ற வியூகம் உணர, பெரிய அரசியல் அறிவு தேவையில்லை. இன்றைய சூழலில் அது எப்படித் தொடங்கி எப்படி முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. ஒருவிதமான எதிர்பார்த்த விபத்து. அது, நிகழப்பார்த்தோம் என்பதுதான் நமக்கான அவமானம். அந்த அவமானத்தைக் காலாகாலத்துக்கும் தாங்கிக்கொள்ள வேண்டி இருக்கிறது.

இதை நான் சொன்னதற்காக ஒரு தனிப்பட்ட மனிதர், தனிப்பட்ட கட்சி கோபித்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. மொத்தமாக எல்லோரும் கோபித்துக்கொள்ள வேண்டும், வருத்தப்பட வேண்டும். வேண்டுமானால் என்மீது கோபித்துக்கொள்ளுங்கள். வருத்தம் இல்லை. ஆனால், யாராவது நினைவுபடுத்தவேண்டும் இல்லையா? ‘அப்படித்தாங்க நடக்கும்’ என்ற மெத்தனம் எங்கு கொண்டுபோய் விடும்?

‘கையைக் கழுவிவிட்டு சாப்பிடுங்கள்’ என்று சொல்வதைக் கிண்டலடித்துக்கொண்டிருந்தால் எப்படி வியாதி குணமாகும்? ‘`எங்க ஊர்ல தண்ணியே இல்லை. எங்குபோய்க் கையக்கழுவுறது? ஆறு வேற தூரமா இருக்கு. பைப்லயும் தண்ணி வரமாட்டேங்குது. ஏதோ போங்க. இல்லைனா நீங்க கையக்கழுவிட்டு எனக்கு ஊட்டி விடுங்க’’ என்று என் விமர்சனத்துக்கு வீம்புபிடித்தால் எப்படி? நோயை நீங்கள் உணவாக உட்கொண்டபடியிருந்தால் எப்போது குணமாவீர்கள்?

ஆமாம், நடந்த அந்தக் குற்றத்தை ஒப்புக்கொள்வதன்மூலம் நான் என்னையே அவமானப்படுத்திக்கொள்கிறேன்.

ஆர்.கே.நகரில் குடியிருந்து டோக்கன் வாங்கியிருந்தால்தான் அசிங்கமா? வெளியில இருந்து அது நிகழப் பார்த்துக்கொண்டு இருந்தேனே, அந்தக் குற்றவுணர்வு எனக்கும் உண்டே. அதைத் தடுக்க என்ன செய்தோம். அதில் ஏதாவது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தவர்களின் முயற்சி என்ன ஆனது?

இதை அடிக்கோடிட்டுக் காட்டவேண்டிய ஊடகங்கள் ஓரளவுக்குச் செய்தன. ஆனால், இன்னும் செய்ய வேண்டும். ஏனெனில், ஊடகங்கள் என்பது மக்களின் மனசாட்சி. ஆனால், அவையும் சேர்ந்து உளறிக்கொட்டினால் ஒருவிதமான தீர்க்கமுடியாத நோயாக மாறிவிடும். அதை நாம் அனைவரும் சேர்ந்து செய்யவேண்டும் என்பதே என் விமர்சனத்தின் உள்ளர்த்தம்” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close