அப்துல் கலாம் இல்லத்துக்கு இன்று காலை விஸிட் செய்த கமல்ஹாசன், அப்துல் கலாமின் அண்ணன் முகமது முத்துமீரான் மரைக்காயருக்கு கைக்கடிகாரத்தை நினைவுப்பரிசாக அளித்தார்.
தன்னுடைய அரசியல் பயணத்தை இன்று காலை ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தொடங்கியுள்ளார் கமல்ஹாசன். அப்துல் கலாம் இல்லத்துக்குச் சென்ற கமல்ஹாசனை, கலாமின் பேரன் சலீம் அழைத்துச் சென்றார். இல்லத்தில் இருந்த அப்துல் கலாமின் அண்ணன் முகமது முத்துமீரான் மரைக்காயரிடம் ஆசிபெற்ற கமல்ஹாசன், அவருக்கு கைக்கடிகாரத்தைப் பரிசாக அளித்தார். அப்துல் கலாம் படம் பொறித்த நினைவுப்பரிசு ஒன்றை கமல்ஹாசனுக்கு அளித்தார் கலாமின் பேரன் சலீம்.
அப்துல் கலாம் இல்லத்தில் காலை உணவு சாப்பிட்ட கமல்ஹாசன், மாடியில் இருந்த மியூஸியத்தையும் பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அப்துல் கலாம் படித்த மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்குச் சென்றார். பள்ளிக்குள் அரசியல் சம்பந்தமான நிகழ்வுகள் நடைபெறக் கூடாது என்பதால், உள்ளே செல்ல கமல்ஹாசனுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. எனவே, வெளியில் இருந்தபடியே பள்ளியைப் பார்வையிட்டார்.