/tamil-ie/media/media_files/uploads/2017/10/kamal-haasan.jpeg)
கமல்ஹாசன் இன்று மீண்டும் ரசிகர்களை சந்தித்து பேசினார். தனது அரசியல் திட்டங்கள் குறித்து அவர்களுடன் கமல்ஹாசன் பகிர்ந்துகொண்டதாக தெரிகிறது.
கமல்ஹாசன், கடந்த ஓரிரு மாதங்களாக ட்விட்டர் மூலமாகவே அரசியலை சூடேற்றி வருகிறார். அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறும் அவர், ‘ஊடகங்களின் உந்துதலுக்காக உடனடியாக கட்சி ஆரம்பிக்க முடியாது’ என்றும் சொன்னார். அதேசமயம் அறப்போர் உள்ளிட்ட இயங்கங்களுடன் இணைந்து இயங்கவிருப்பதாகவும் கூறினார்.
ஏற்கனவே கடந்த மாத தொடக்கத்தில் தனது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ரசிகர்களுடன் சந்திப்பு நடத்தினார் கமல்ஹாசன். அப்போது ரத்ததானம் உள்ளிட்ட பணிகளை செய்வது குறித்தே அதிகம் பாடம் நடத்தினார். நவம்பர் 4-ம் தேதி சென்னையில் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் நடத்திய ஆலோசனையின்போது, ‘ஏரி, குளங்களை தூர்வார 5 லட்சம் பேரை அனுப்பி வைக்க நான் தயார்’ என்றார்.
இந்தப் பின்னணியில் இன்று (நவம்பர் 5) சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் தனது ரசிகர்கள் மற்றும் நற்பணி இயக்க நிர்வாகிகளை கமல்ஹாசன் சந்தித்தார். பிறபகல் 2 மணியளவில் தொடங்கிய இந்தக் கூட்டத்திற்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகள் வந்திருந்தனர். கூட்டத்தில் பேச விரும்பிய அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்தார் கமல்ஹாசன்.
அதில் பேசிய பலரும், ‘தலைவா! தனிக் கட்சி தொடங்கு! உன்னை அரியணையில் அமர்த்துவது எங்கள் பொறுப்பு’ என்கிற ரீதியில் பேசினார்கள். ஆனால் கமல்ஹாசன் வழக்கம்போல மிக பக்குவமாகவும் நழுவலாகவும் பேசியதாக கூறுகிறார்கள். அதாவது, இப்போதைக்கு ஓட்டு அரசியலை செய்யாமல் நற்பணி அரசியல் செய்ய விரும்புவதாக கமல்ஹாசன் கோடிட்டுக் காட்டியதாக சொல்கிறார்கள்.
நவம்பர் 7-ம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாள்! அதையொட்டி ரசிகர்களுடன் நடந்த சந்திப்பாகவும் இதை கூறலாம். கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருமே கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினர். அனைவருக்கும் நன்றி கூறுகிற விதமாக பேசிய கமல்ஹாசன், ‘நாம் முடிவு செய்துவிட்டோம். நிச்சயம் அரசியலுக்கு வரப் போகிறோம்’ என்றும் குறிப்பிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.