/tamil-ie/media/media_files/uploads/2017/11/jeyaku....jpg)
உலகில் கட்சி தொடங்கவே தொண்டர்களிடம் பணம் வசூலிக்கும் ஒரே தலைவர் கமல்ஹாசன் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கிண்டல் செய்தார்.
கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை மூலக்கொத்தளத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பார்வையிட்டார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, குதிரை பேர அரசு அல்ல, குதிரை வேக அரசு. கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம். மக்கள் ஆதரவு யாருக்கு என்பதுதான் முக்கியம். இறுதி எஜமானர்கள் மக்கள் தான்.
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. இமயமலை போல் இருக்கும் அ.தி.மு.க சிறு குன்றுகளைக் கண்டு அஞ்சாது. அ.தி.மு.க என்ற இயக்கத்தை பொதுமக்களை, தொண்டர்களை நம்பி எம்.ஜி.ஆர் ஆரம்பித்தார். ஜெயலலிதா கட்சியை வழி நடத்தினார்.
எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ தொண்டர்களிடம் கட்சி நடத்த பணம் கேட்கவில்லை. ஆனால் கமல்ஹாசன் கட்சி நடத்த தொண்டர்களிடம் ரூ.30 கோடி நிதி கேட்கிறார். அரசியல் கட்சி தொடங்க ரூ.30 கோடி வசூல் செய்வது என்ன கால்குலேஷன்? கமல்ஹாசன் என்ன கணக்கில் இருக்கிறார்? உலகத்திலேயே கட்சி ஆரம்பிக்க தொண்டர்களிடம் ரூ.30 கோடி வசூல் செய்யும் ஒரே தலைவர் கமல்ஹாசனாகத்தான் இருப்பார்.
எதிர்காலத்தில் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். மழை பெய்யும்போது மட்டும்தான் நீர் தேங்குகிறது, மழை நின்றால் நீர் வடிந்துவிடும். 2015 ல் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் தற்போது ஏற்பட்ட பாதிப்பை பாடமாக எடுத்து கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.