சினிமா துறை மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால், சினிமாவை விட்டு செல்வதை தவிர வேறு வழியில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஜிஎஸ்டி வரி நாடு முழுவதும் ஜூலை 1-ம் தேதி அமலுக்கு வரவுள்ளது. இதில் சினிமாவிற்கு 28% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் திரைப்படத்துறையினரிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் தென்னிந்திய வர்த்தக சபையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது நடிகர் கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஜிஎஸ்டி வரியின் மூலமாக சினிமாவிற்கு 28% வரி விதிக்கப்படுகிறது. நாடு முழுவதும் சினிமாவிற்கு ஒரே அளவிளான வரி விதிப்பது சரியாகாது.
ஹிந்தி மொழி திரைப்படங்களுக்கான சந்தை வேறு, பிராந்திய மொழிகளுக்கான சந்தை வேறு என்பதால் இது தயாரிப்பாளர்களுக்கு கட்டுப்படியாகாது. குறிப்பாக ஹிந்தி சினிமாவிற்கு இணையாக மற்ற பிராந்திய மொழி திரைப்படங்களுக்கும் வரி விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும் இந்திய நாடு பன்முகத் தன்மையை கொண்டது. இங்கு ஒற்றைத் தன்மையை நிலைநாட்ட வேண்டும் என நினைப்பது தவறானது. சினிமாவுக்கும் 28% வரி, சூதாட்டத்திற்கும் 28% வரி என்பது எந்த விதத்திலும் சரியானது அல்ல.
எனவே மத்திய அரசு சினிமாதுறையின் மீதான இந்த வரி விதிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவ்வாறு, சினிமா துறை மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால், சினிமாவை விட்டு செல்வதை தவிர வேறு வழியில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.