“இதுவரை நான் தமிழ் ரசிகர்களின் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருந்தேன். இப்போது இல்லங்களில் வாழ ஆசைப்படுகிறேன்” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இன்று தன்னுடைய அரசியல் கட்சியின் பெயர், கொடியை அறிமுகப்படுத்த இருக்கிறார் கமல்ஹாசன். முன்னதாக ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இல்லத்திற்குச் சென்ற அவர், பிறகு மீனவர்களைச் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய கமல்ஹாசன், “அப்துல் கலாம் எனக்கு ஆதர்ச மனிதர். அவர் வீட்டுக்குச் சென்றது எனக்கு சந்தோஷம். அது திட்டமிட்டுச் சென்றதுதான். ஆனால், அதில் அரசியல் எதுவும் இல்லை. முக்கியமாக அவருடைய உணர்வு, நாட்டுப்பற்று இதெல்லாம் என்னைக் கவர்ந்த விஷயங்கள். என்னுடைய பாடத்தில் ஒரு பகுதி, அவருடைய வாழ்க்கை.
அவர் படித்த பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதிலும் அரசியல் இல்லை. ஆனால், வேண்டாம் என்று தடைபோட்டு விட்டார்கள். பள்ளிக்குச் செல்வதைத்தான் அவர்கள் தடுக்க முடியுமே தவிர, நான் பாடம் படிப்பதைத் தடுக்க முடியாது. அந்தப் பாடம் தொடரும். என்னுடைய படத்தில் வரும் தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் நான். அப்படித்தான் படிக்கணும்னா, அதுவும் செஞ்சுட்டுப் போறேன்.
நேற்று இரவு சந்திரபாபு நாயுடு அழைத்திருந்தார். நீங்களெல்லாம் என்னிடம் என்ன கொள்கை? என்று கேட்கிறீர்கள் அல்லவா? அவரிடம் இதுபற்றி கேட்டேன். ‘கொள்கை பற்றிக் கவலைப்படுவதைவிட, மக்களுக்கு என்ன செய்ய முடியும்னு பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள். அதுவே உங்கள் கொள்கையாகிவிடும்’ என்றார். என் மனதில் இருந்ததைத்தான் அவர் பிரதிபலித்தார்” என்றார்.
சினிமாவுக்கும், அரசியலுக்குமான வித்தியாசம் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த கமல்ஹாசன், “ரொம்ப வித்தியாசமா இருக்கு. அதுவும் மக்கள் தொடர்பு விஷயம் தான், இதுவும் மக்கள் தொடர்பு விஷயம் தான். அதிலிருந்த பொறுப்பைவிட அதிகப் பொறுப்பும், அதிலிருந்த பெருமையைவிட அதிகப் பெருமையும் இதில் இருப்பதாக நினைக்கிறேன். ஏனென்றால், அது கொஞ்சம் பண்டமாற்று தான். என் திறமை - பணம் என்று கைமாறியது. இங்கு அதெல்லாம் கிடையாது. எனக்குத் திறமையிருந்தால் அது உங்களுக்கு. எனக்குப் பணமிருந்தால் அதுவும் உங்களுக்கு. இதுவரை நான் தமிழ் ரசிகர்கள் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருந்தேன். இப்போது இல்லங்களில் வாழ ஆசைப்படுகிறேன்” என்றார்.
‘அப்துல் கலாமின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாதது ஏன்?’ என கமல்ஹாசனிடம் கேட்கப்பட்டது. “நான் இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பது இல்லை. என்னுடைய நம்பிக்கை அப்படி” என்றார்.
இன்று கட்சி தொடங்குவதற்கான காரணம் என்ன? என்ற கேள்விக்குப் பதில் அளித்த கமல்ஹாசன், “இன்று பன்னாட்டுத் தாய்மொழி நாள்” என்றார்.
“அரசியலுக்கு வருவதற்குத் தொழில் மட்டுமே முக்கியமில்லை. ஒரு காலத்தில் வக்கீல்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தனர். திலகர், காந்தி, நேரு, அம்பேத்கர், ராஜாஜி என எங்கு பார்த்தாலும் வக்கீல்களாகவே இருந்தனர். ‘எல்லாரும் வக்கீலாவே இருக்காங்களே... எங்களுக்கு சான்ஸ் இல்லையா?’ என அப்போது யாரும் கேட்கவில்லை. உணர்வுள்ளவர்கள், உத்வேகமுள்ளவர்கள், அதற்கான ஆசையும், நேரமும் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதுதான் என்னுடைய ஆசை” என்றார் கமல்ஹாசன்.