தமிழக அரசியல் களத்தில் கூடிய வரைவில் காலூன்றவிருக்கும் பன்முகத்தன்மை கொண்ட உலக நாயகன் கமல்ஹாசன் கேரள, டெல்லி, முதல்வர்களின் அடுத்தடுத்த சந்திப்புகளுக்கு பின்னர், தமிழக முதல்வராக சேவையாற்ற தயார் என தெரிவித்துள்ளார்.
அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா தொடங்கி சுமார் அரை தசாப்தங்களாக திரைத்துறையினர் கோலோச்சி வரும் தமிழக அரசியல், அடுத்தததாக தசாவதாரம் நாயகனையும், கபாலியையும் தன்னுள் எடுத்துக் கொள்ள தயாராகி வருகிறது. உலகநாயகன் கமல்ஹாசன் மட்டுமல்ல சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் அரசியல் பிரவேசத்துக்கு தயாராகி வருகிறார்.
ரசிகர்களுடனான சந்திப்பின் போது, போர் வரட்டும் என்றார் ரஜினி. தற்போது, 100 நாட்களில் தேர்தல் வந்தால் நான் களம் காண்பேன் என்கிறார் கமல். போர் வரட்டும் என்று கூறிய ரஜினியின் சில நகர்வுகள் தமிழருவி மணியன் போன்றோரால் லைம் லைட்டில் நடத்தப்பட்டாலும், பெரும்பாலான அவரது அடுத்தக்கட்ட நகர்வுகள் திரை மறைவிலேயே நடக்கின்றன. ஆனால், கமலின் அரசியல் பிரவேசம் வெட்ட வெளிச்சத்தில் நடக்கிறது. டுவிட்டரை தனது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வரும் அவர், தனது விமர்சன அம்புகளை தமிழக அரசு மற்றும் மத்திய அரசு மீது தொடர்ந்து கமல்ஹாசன் எய்து வருகிறார். கமல்ஹாசன் மற்றும் தமிழக அரசுக்கு இடையேயான வார்த்தை போர் முற்றிய போதும், மிரட்டல் தொனியில் ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் பேசிய போதும், எதற்கும் அஞ்சாமல் விமர்சனங்களை அவர் முன் வைத்து வருகிறார்.
நான் அரசியலுக்கு வந்து விட்டேன். கோட்டையை நோக்கிய எனது பயணம் தொடங்கி விட்டது என தெரிவித்ததையடுத்து, கூடிய விரைவில் அவர் அரசியல் களம் காண்பார் என எதிர் பார்க்கப்படும் சூழலில், இம்மாத இறுதியில் கமல் அரசியல் கட்சி தொடங்குவார் என அவருக்கு நெருக்கமான நண்பர்கள் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
அதற்கு ஏற்றாற்போல், கேரள முதல்வர் பினராயி விஜயனை கமல்ஹாசன் அண்மையில் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், "பினராயி விஜயனுடனான சந்திப்பில் அரசியல் நோக்கம் இருக்கலாம். அரசியலில் நான் இப்போது பயிலும் காலத்தில் இருக்கிறேன் என்றார்.
அதேசமயம், எந்த கட்சியிலும் சேரமாட்டேன். அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் தனி கட்சிதான் தொடங்குவேன் என்றும் கமல் தெளிவு படுத்தியுள்ளார்.
கமல்ஹாசனின் புதிய அரசியல் கட்சி: இம்மாத இறுதியில் அறிவிப்பு
இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கமல்ஹாசனின் இல்லத்துக்கே நேரில் வந்து சந்தித்தார். பின்னர் இருவரும் கூட்டாக சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஊழலை எதிர்ப்பவர்கள் எனக்கு உறவினர்கள் என கமல் கூறினார். கெஜ்ரிவால் பேசும் போது, நாடு ஊழலாலும், மதவாதத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துள்ளது. கமல் அரசியலுக்கு வர வேண்டும் என்றார்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இவர்களது இந்த சந்திப்பு, தமிழக அரசியலை மட்டுமல்லாமல் இந்திய அரசியலையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இது தொடர்பாக ஆங்கில ஊடகங்கள் பலவற்றுக்கு தனித்தனியாக பேட்டியளித்த கமல், பல்வேறு விஷயங்களை தெளிவு படுத்தியுள்ளார். தமிழக முதல்வராக சேவையாற்ற தயார் எனவும், 100 நாட்களில் தேர்தல் வந்தால் என்னுடைய பங்கு அதில் இருக்கும் எனவும் அந்த பேட்டிகளில் கமல் தெரிவித்துள்ளார். அரசியலில் தலைமை கிரீடம் முள்கிரீடம் போன்றது என குறிப்பிட்டுள்ள அவர், புதைகுழியை சுத்தம் செய்து மக்களுக்கு தகுந்த இடமாக மாற்ற யாரேனும் முன்வர வேண்டும். எனக்கு அதிகார பசியில்லை. ஆனால், மக்களுக்கு நன்மை செய்ய இது தான் வழி என்றால் அதனை நாம் கைப்பற்றுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் மெது மெதுவாக தங்களுக்கே தெரியாமல் நமது மாநிலத்தை பலவீனமான, பரிதாபகரமான நிலைக்கு தள்ளி விட்டனர். அடுத்ததாக, படிப்படியாக மக்களை நான் சந்திக்கவுள்ளேன் எனவும் கமல் தெரிவித்துள்ளார்.
மேலும் ரஜினியை சுமார் நான்கு வாரங்களுக்கு முன்னர் சந்தித்து பேசியதாக தெரிவித்துள்ள கமல்ஹாசன், "ஊழலுக்கு எதிராக போராடுவது உள்ளிட்ட எங்கள் இருவரது இலக்கு ஒன்று தான். ஆனால், நான் வேறு பாதையிலும், அவர் வேறு பாதையிலும் பயணிக்கிறோம். விவரமாக நாங்கள் விவாதிக்கவில்லை. எனவே, எங்களுக்கு கருத்து வேறுபாடு அப்போது வரவில்லை. ஆனால், அரசியல் போட்டியாளர்களாக நாங்கள் இருவரும் முன்மாதிரியாக இருக்க ஒப்புக் கொண்டுள்ளோம். அங்கிருந்து நான் விடை பெற்ற போது, அவரை ஆரத்தழுவி விட்டு, நான் அரசியலுக்குள் செல்கிறேன்" என்று கூறி விட்டு வந்ததாகவும் கமல் விளக்கமளித்துள்ளார்.
இரு பெரும் திரை ஆளுமைகளும் அரசியல் களத்துக்குள் வரும் போது, தமிழக அரசியல் பட்டை தீட்டப்பட்ட வைரம் போன்று ஜொலிக்குமா? இல்லை வழக்கம் போலவே நாம் பயணப்பட போகிறோமா என்பது வரும் நாட்களில் தெரிய வரும். அந்த நாட்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.