கமல்ஹசான் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், அவரின் அரசியல் பயணத்திற்கு அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இந்தியன்-2 திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த இந்தியன்-2 திரைப்படம் கமல்ஹாசனின் அரசியல் பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊழலுக்கு எதிரான போராளியாக இந்தியன் திரைப்படத்தில் நடித்த கமல்ஹாசன், தற்போது ஊழலுக்கு எதிரான கடுமையாக கருத்து தெரிவித்து வருகிறார். குறிப்பாக தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்திருப்பாக கமல்ஹாசன் தெரிவித்த கருத்து தமிழக அரசியலில் சூடு கிளப்பிதோடு, பரபரப்பையும் ஏற்படுத்தியது. தமிழக அமைச்சர்களோ கமல்ஹாசனை மாறி மாறி விமர்சித்தனர். இந்த விமர்சனத்திற்கு நான் ஒன்றும் சளைத்தவன் இல்லை என்று காட்டும் வகையில், கமல்ஹாசனும் அவற்றிக்கு தக்க பதிலடி கொடுத்தார்.
ஆனால், அமைச்சர்களோ விமர்சனத்திற்கு பதில் அளிக்காமல், கமல்ஹாசன் மீது வழக்கு போட்டுவிடுவோம், வருமான வரி கட்டியது குறித்து சோதனை செய்ய நேரிடும் என மிரட்டல் விடுத்தது நினைவிருக்கலாம். இப்படி ஒருபுறம் இருக்க தான் அரசியலில் இறங்கிவிட்டேன் என்றும், மக்கள் விருப்பப்பட்டால் முதலமைச்சராகவும் தாயாராக இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். முன்னதாக,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், போர் வரும் வரை காத்திருங்கள் என ரசிகர்களிடம் தனது அரசியல் பிரவேசம் குறித்து ட்விஸ்ட் வைத்திருந்தார். ஆனால், இதன் பின்னர் லேட் என்ட்ரி கொடுத்தாலும் சட்டென அரசியல் களத்திற்கு புகுந்துவிட்டதாக கமல்ஹாசன் அறிவித்தார். மேலும், மக்களோடு இணைந்து செயல்படதாயாராக இருக்கும்போது, ரஜினியுடன் இணையமாட்டேனா என்றும் கமல்ஹசான் தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர், மற்றும் டோலிவுட் தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகியோர் பிக்பாஸ் கிராண்ட் ஃபைனலில் தோன்றி, தென்இந்திய சினிமாவுக்கே ஒரு முக்கிய செய்தியை கொண்டு வந்தனர். இந்தியன்- 2 திரைப்படம் தான் அந்த முக்கிய செய்தியாகும். இந்தியன்-2 திரைப்படத்தை ஷங்கர் இயக்கவுள்ள நிலையில், இதனை டோலிவுட் தயாரிப்பாளர் தில் ராஜூ தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரிக்கவுள்ளார்.
இந்தியன் திரைப்படத்தின் முதல் பாகமானது ஊழலுக்கு எதிராக கடுமையான கருத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. இந்த நிலையில், கமல்ஹாசன் அரசில் குறித்து பேசி வரும் நிலையில், இந்தியன்-2 திரைப்படம் ஊழலுக்கு எதிரானதாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. இந்த செய்தியானது, திரையுலகில் மட்டுமல்லாமல் தமிழக அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் திரைப்படமானது 1996-ம் ஆண்டு வெளிவந்தது. இந்த நிலையில் இந்தியன்-2 படத்தின் மூலம் மீண்டும் கூட்டணியில் இணையவுள்ளனர் ஷங்கர்-கமல்ஹாசன்.
தமிழின் முதல் பிக்பாஸ் நிகழ்சியில் இறுதி எபிசோட் நிகழ்ச்சி சனிக்கிழமை ஒளிபரப்பானது. இந்த பிக்பாஸ் நிகழ்சியில் வெல்லப்போவது யார் வெல்லப்போவது என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், ஆரவ் டைட்டில் வென்று அசத்தினார்.