“மீனவர்களுக்கு செவிசாய்க்க வேண்டியது எங்கள் கடமை” - கமல்ஹாசன்

கடல் மேலாண்மை, நீங்கள் செயல்பட வேண்டிய விதம், அரசு செயல்பட வேண்டிய விதம் இவை எல்லாம் நாம் மீண்டும் கலந்தாலோசித்து முடிவுசெய்ய வேண்டும்.

‘மீனவர்களுக்கு செவிசாய்க்க வேண்டியது எங்கள் கடமை’ என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பிரவேசத்தைத் தொடங்கிய கமல்ஹாசன், கணேஷ் மஹாலில் மீனவர்களைச் சந்தித்தார். அப்போது மீனவர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், “இங்கு உங்களைப் பார்க்க வந்ததற்கு முக்கிய காரணம், தமிழகத்தின் முக்கியமான தொழில்களில் உங்கள் தொழிலும் ஒன்று. அது பாதுகாக்கப்பட வேண்டும். பாதுகாப்புடன் நீங்கள் செயல்பட வேண்டும், தொழில் செய்ய வேண்டும்.

உங்களுக்கு ஏற்படும் சுக, துக்கங்களை பத்திரிகை வாயிலாக அறிவதற்குப் பதிலாக உங்கள் வாய்மொழியில் அறிய கடமைப்பட்டிருக்கிறேன். இனி அப்படித்தான் நடக்கும். அந்த வாய்ப்பை நான் உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க ஆசைப்படுகிறேன். எனக்கும் அந்த வாய்ப்பை நீங்கள் தரவேண்டும்.

வெவ்வேறு அரசுகள் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, ‘அதை ஏன் நீங்கள் நிறைவேற்றவில்லை?’ என நீங்கள் கேட்கும்போது, அதை திசை திருப்புவதற்காக வேறு பிரச்னைகளைக் கொண்டு வந்து வைப்பது வாடிக்கையாகி விட்டது. கேள்வி கேட்பவர்களையு, தங்கள் உரிமைகளைக் கோருபவர்களையும் தடியடி செய்து பதில் சொல்ல முடியாது. தன்மையுடன் பணிந்து மன்னிப்போ, நன்றியோ கேட்க வேண்டியது எந்த அரசின் கடமை.

கடல் மேலாண்மை, நீங்கள் செயல்பட வேண்டிய விதம், அரசு செயல்பட வேண்டிய விதம், சர்வதேச சட்டங்களை நாம் மதிக்கும் விதம் இவை எல்லாம் நாம் மீண்டும் கலந்தாலோசித்து முடிவுசெய்ய வேண்டும். நான் சொல்வது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். உங்களைப் பார்க்க வந்தேன். உங்களுக்கு செவிசாய்க்க வேண்டியது எங்கள் கடமை.

இந்தப் புதுக்கட்சியின் அறிவிப்பு இன்று மாலை நிகழவிருக்கிறது. முடிந்தவர்கள் வர வேண்டும். வரக் கடமைப்பட்டவர்கள் வந்தே ஆகவேண்டும்” என்றார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close