“திராவிடம் என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்குமானது” - கமல்ஹாசன்

திராவிட இயக்கம் ஏதோ கெட்ட வார்த்தை போன்று சொல்கிறார்கள் சிலர். வேறுசிலரோ, அதைத்தவிர வேறு எதையும் பேசமாட்டோம் என்கிறார்கள்.

‘திராவிடம் என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அது பொருந்தும்’ என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

‘ஆனந்த விகடன்’ இதழில் ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ என்ற கட்டுரைத் தொடரை எழுதி வருகிறார் கமல்ஹாசன். இந்த வார இதழில், “கமல்,  சோ மாதிரி ஒரு தேர்ந்த விமர்சகர்’ என்று என்னை அடையாளப்படுத்துகிறார்கள். நான் வெறும் விமர்சகன் மட்டும் இல்ல, இறங்கி வேலை செய்ய வந்தவன். நான் ஒரு நடனக் கலைஞன், நான் சுப்புடு அல்ல. அதற்காக அவர்களை  நான் கிண்டலடிப்பதாக நினைக்கவேண்டாம். அதுவேறு, இதுவேறு.

நான் மக்களின் தெண்டன். அதுதான் என் முதல் அடையாளம். மக்களின் விமர்சகன் அல்ல. மக்கள் பண்ணும் தவறுகளில், எனக்கும் பங்கு இருக்கிறது. அதேபோல் அவர்கள் கொள்ளும் வெற்றிகளில் பங்கு இருக்க வேண்டும் என்று நினைப்பவன். அதை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறேன்.

வரி கட்டுவதில் முதல் இடம்  மகாராஷ்டிராவுக்கும் இரண்டாவது இடம் தமிழகத்துக்கும் இருக்கிறது. “இங்க வரி வசூல் பண்ணிட்டு அதை வடநாட்டு முன்னேற்றத்துக்கு பிரிச்சு கொடுக்குறாங்க’’ என்று சிலர் சொல்கிறார்கள். கூட்டுக் குடும்பம் என்றால் அப்படித்தானே இருக்கும். அண்ணன் சம்பாத்தியத்தை வேலையில்லாத தம்பிகளுக்கு பகிர்ந்தளிப்பது நம் வழக்கம்தானே. அதை நான் குறைசொல்லவில்லை. ஆனால், அண்ணன் கொடுக்கிறார் என்பதால் ஏமாளி என்று நினைத்து அவரை பட்டினிப்போட்டுவிடக்கூடாது. இந்தப் பகிர்தல் சமீப காலமாக சரிவர நடக்காததுபோன்ற எண்ணம் எனக்கு உள்ளது.

அதற்கு முக்கியமாக, நாம் உணரவேண்டியது, திராவிட இயக்கம் ஏதோ கெட்ட வார்த்தை போன்று சொல்கிறார்கள் சிலர். வேறுசிலரோ, அதைத்தவிர வேறு எதையும் பேசமாட்டோம் என்கிறார்கள். இது இரண்டுமே விமர்சனத்துக்கு உரியதுதான். திராவிடம் என்பது தமிழ்நாடு தழுவியது மாத்திரம் அல்ல. நாடு தழுவியது. அதில் மிகப்பெரிய சரித்திரமும் ஆந்த்ரோபாலஜியும் இருக்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சியும் சம்பந்தப்பட்டு இருக்கிறது.

உங்கள் சாயலில் என்னால் பீகாரில் ஓர் ஆளை காட்ட முடியும். அதற்குக் காரணம் திராவிடம் என்பது அங்கிருந்து வருகிறது. அதற்காக அதை அழிக்கவேண்டிய அவசியம் கிடையாது. தேவையின்றி தலையில் தூக்கிவைத்துக்கொள்ள வேண்டியதும் இல்லை. அது நம் அடையாளம்.

அதை தென்னிந்தியா முழுவதும் கொண்டாடினால் இப்போது நாம் சொல்லும் இந்த பாரபட்சங்கள் இல்லாமல் போய்விடும். ஒட்டுமொத்தமாக  ஒருங்கே  ஒலிக்கும் கோரஸாக இங்கிருந்து டெல்லிவரை பேச முடியும். சந்திரபாபு நாயுடு அவர்களும், பினராயி விஜயன் அவர்களும், சந்திரேசேகர ராவ் அவர்களும், சித்தராமையாவும் திராவிடர்கள்தான்.

தமிழன் மட்டும்தான் திராவிடன் என்று உரிமை கொண்டாட வேண்டியது இல்லை. சந்தோஷமாக வெவ்வேறு மொழி பேசுபவர்களுடன் அதைப் பகிர்ந்துகொள்ளலாம். இது என் கருத்து. இந்தக் கருத்து இன்னும் வேர் கொள்ளவேண்டும் என்பதே என் ஆசை. அப்படி நினைக்க ஆரம்பித்தால் நமக்கு பல பலங்கள் கூடும்.

தென்னாடுடைய சிவன் என்பதில் எந்த அவமானமும் இல்லையே. எல்லா ஊர்களிலும் இருக்கிறான் என்கிற பெருமைதான் தெரிகிறது. திராவிடமும் அப்படித்தான், சிவன்போல. அதற்காக தமிழையோ மற்ற மொழிகளையோ கரைத்து ஒன்றாக்கிவிடவேண்டும் என்று சொல்லவில்லை இனம், தன்மானம், சுயமரியாதை, மொழிப்பற்று அப்படியே இருக்கவேண்டும். அதை மாற்றவேக்கூடாது. இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொருந்தும். அதைத்தான நேருவும் வேற்றுமையில் ஒற்றுமை என்கிறார். அந்த வேற்றுமையை மாற்றிவிடக்கூடாது” எனக் கூறியுள்ளார்.

×Close
×Close