Advertisment

கமல்ஹாசன் தொடங்கும் ‘நாளை நமதே’ பயணம்

வருகிற 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் கமல்ஹாசன், அந்தப் பயணத்துக்கு ‘நாளை நமதே’ என்று பெயரிட்டுள்ளார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
kamal haasan

வருகிற 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் கமல்ஹாசன், அந்தப் பயணத்துக்கு ‘நாளை நமதே’ என்று பெயரிட்டுள்ளார்.

Advertisment

தமிழக மக்களின் பிரச்னைகளைத் தெரிந்து கொள்வதற்காக வருகிற 21ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் கமல்ஹாசன். இந்தப் பயணத்துக்கு ‘நாளை நமதே’ என்று பெயர் வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன். ‘ஆனந்த விகடன்’ இதழில் அவர் எழுதிவரும் ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ தொடரில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தத் தொடரில், “நாங்கள் என்ன செய்ய விழைகிறோம் என்பதற்கு முன்னுதாரணமாக, எங்கள் பானையில் எவ்வகைச்சோறு இருக்கிறது என்பதைப் பதம் பார்ப்பதற்கு ஏதுவாக முதல்கட்டமாகச் சில கிராமங்களைத் தத்தெடுக்கவிருக்கிறோம். ஒரு சோறு பதம்போல இது, நாங்கள் செய்துகாட்டும் எங்களுடைய செயல்திறனுக்கான அடையாளத் திட்டம்.

இது என் நம்பிக்கை மட்டுமன்று, எங்களுள் விதைக்கப்பட்ட நம்பிக்கை. இந்தியாவின் பலம் கிராமங்களில்தான் இருக்கிறது என்று காந்தியார் விதைத்தது. நகரத்தை நோக்கிப் புலம்பெயர்பவர்கள் எல்லாம் தேவைக்காகத்தான் நகர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, அந்தத் தேவைகள் அவர்களைச் சென்றடையும்பட்சத்தில், அவர்கள் நகரம் நோக்கி நகரமாட்டார்கள். அப்படிப்பட்ட  முன்மாதிரி கிராமங்களை நிஜமாகவே உருவாக்கிக் காட்டுவதற்கான முனைப்புதான் இது.

ஆனால், ‘மாவட்டத்துக்கு ஒன்று, மாநகராட்சிக்கு ஒன்று’ என்று ஏகப்பட்ட கிராமங்களைத் தேர்ந்தெடுத்து அகலக்கால் வைக்கப்போவது இல்லை. முதலில் ஒரே ஒரு கிராமம். அதற்காக நாங்கள் போடும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கிறோம். விரைவில் ஹார்வேர்டு பல்கலைக்கழத்துக்குப் பயணமாகும் நான், அங்கு பேசப்போவதும் இதைப்பற்றித்தான். ஆம், நான் போவதே, திறமைகளைச் சேர்க்கத்தான். அவர்களை என் தமிழகக் கிராமங்களை நோக்கி அழைக்கப்போகிறேன். எத்தனை பேர் வருவார்கள் என்று தெரியாது. ஆனால், அந்த உதவி நமக்கு அதி அவசியம். நிச்சயம் ஆர்வத்துடன் வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

ஆனால், அந்த ஆர்வம் இங்குள்ள அரசியல்வாதிகளிடம் போய்விட்டது என்றே நினைக்கிறேன். ஆகம வழிபாட்டுமுறை போல், ‘இப்படித்தான் இதைப் பண்ணவேண்டும்’ என்பதுபோல் இறுகிப்போய்விட்டார்கள். அதனால்தான் ‘ஐ வில் சேலஞ்ச் தி ஸ்டேட்ஸ்கோ’ என்று சொல்லியிருக்கிறேன். இதை மாற்றியே ஆகவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை கிராமத்திலிருந்து தொடங்குவது, காந்தியாருக்குச் செய்யும் மரியாதை என்று நினைத்துவிட வேண்டாம். அவருக்கு எப்போதுமே மரியாதை இருக்கிறது. இது நாட்டுக்குச் செய்யும் மரியாதை. ஏனெனில், கிராமங்களில்தான் நம் பலமிருக்கிறது. நகரங்களில் புற்றீசல்போல் எல்லோரும் ஓரிடத்தில் அடைந்துகொண்டு  க்யூ கட்டுவது மட்டுமே மிச்சமிருக்கிறது.

சரி, கிராமத்தானுக்கு என்ன வேண்டும்? ‘ஏழு கடல் கடந்து வண்டுக்குள் இருக்கும் அரக்கனின் உயிர்’ என்று சொல்லும் பழங்கதைபோல் காடுமலை கடந்து ஏழு மலை தாண்டிப் போய்க் கற்கும் ஒரு பொருள்தான் கல்வி என்ற நிலைமாறி நவீனக் கல்வி கிடைக்க வழிவகை செய்யவேண்டும். பல லட்சம் ரூபாய் செலவு செய்து அமெரிக்கன் பள்ளியிலும் பிரிட்டீஷ் கல்விக் கூடங்களிலும் சேர்க்கிறார்களே அந்தக் கல்வியை நம் கிராமங்களுக்குள் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். இதற்கான முன் விதைகளை காமராஜர் போன்றோர் விதைத்துவிட்டார்கள். அவ்வளவு ஏன் ஜஸ்டீஸ் பார்ட்டி காலத்திலேயே அந்த விதை விதைக்கப்பட்டுவிட்டது. அதை அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுக்கவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. நான் மூத்தோர்களைப் பார்த்து வியந்தும் நிற்க முடியாது; வரப்போகும் இளைஞர்களைப் பார்த்து இகழவும் முடியாது. அவர்களின் அறிவையும் இவர்களின் பலத்தையும் சேர்த்து கிராமத்துக்குள் பாய்ச்ச வேண்டும்.

அடுத்து நல்ல குடிநீர் வேண்டும், சுற்றம் சுத்தம் சுகாதாரம் வேண்டும், கலைநயம் கொண்ட பொழுதுபோக்கு வேண்டும், வெளியேபோய் ஊர் திரும்ப நல்ல போக்குவரத்து வசதி வேண்டும், நீர்நிலை ஆதாரங்களை மேம்படுத்த வேண்டும்.... இப்படி அரசாங்கம் செய்யத் தவறியதை நாங்கள் செய்யப்போகிறோம். ஆம், ‘முற்றம் கோணல்’ என்று சொல்லிக்கொண்டே இருப்பதில் அர்த்தமே இல்லை. ஆடிக்காட்டு என்றால் ஆடிக்காட்ட வேண்டும். இப்போது நாங்கள் ஆடிக்காட்டப்போகிறோம். முதலில் ஒரு கிராமம். அதை மேம்படுத்துவதன் மூலம் கிடைக்கும் அனுபவப் பாடத்தைக்கொண்டு அடுத்தடுத்த கிராமங்களில் பணி முடிக்கப்போகிறோம்.

இந்த ‘நாளை நமதே’வுக்கான முதல் கிராமத் தேடலுக்காகச் சென்ற நம் குழுவினர், “ஒவ்வொரு கிராமமுமே அந்த முதல் கிராமத்துக்கான ‘லட்சணங்களுடன்’ இருக்கின்றன’’ என்று அதிர்ச்சி சொன்னார்கள். “அரசுப் பள்ளிக்கூடங்கள் பெயரளவுக்கே இயங்குகின்றன. மொத்த மாணவர்கள் 200 பேர் என்றால், தற்போதைய ஸ்ட்ரென்த் 50க்கும் குறைவே. ஒரே ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ள பள்ளிகள் ஏராளம். பல பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை. முக்கியமாக, தமிழாசிரியர்கள் இல்லை’’ என்றார்கள். மொழிப்பாடம் கற்றுத்தரத் தமிழாசிரியர்கள் இல்லாமல் எதிர்காலத் தமிழகத்தை எப்படிக் கட்டமைக்கப்போகிறோம் என்ற கவலை எனக்கு. அரசு, அரசியல் மேல் நம்பிக்கை இல்லாமல் மனம் தளர்ந்து, ‘விதி, இறைவனிட்ட பிச்சை’ என்று மக்கள் சோர்ந்து உட்கார்ந்திருப்பதை உணர முடிகிறது.

மடிக்கணினியையும் கைப்பேசியையும் சாப்பிட முடியாது. ஆனால், அவைதாம் பலருக்கும் போய்ச் சேர்ந்திருக்கின்றன. மடிக்கணினி கொடுத்துவிட்டதாலேயே அறிவு வந்துவிடும் என்பதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். அதை இயக்குவதற்கே தனி அறிவு வேண்டுமே. அது ஒரு கருவிதானே. மீன் இருக்கும் இடம் வேறு, தூண்டில் இருக்கும் இடம் வேறு எனும்போது அதைக்கொண்டுபோய்ப் போட்டு எப்படி மீன் பிடிக்கவேண்டும் என்பதைக் கற்றுத்தந்தால்தானே அவன் சுயமரியாதையுடன் சுயமாக வாழ்க்கை நடத்த முடியும்.

இவற்றையெல்லாம் மாற்றி அமைத்துக்காட்டிவிட்டால், ஒருவேளை கோபப்பட்டு, ‘ஓஹோ, ஒரு தனிமனிதனாக, தன் நற்பணி அமைப்பை வைத்துக்கொண்டு முன்மாதிரி கிராமமாக மாற்றிக்காட்டியிருக்கிறான். நாம் சர்வ வல்லமை பொருந்திய அரசு. அவனைவிட மேன்மையாகச் செய்துகாட்டுவோம்’ என்று களத்தில் இறங்கி அரசு செயல்பட்டு வென்றால், என் பணி முடிந்தது என்றே நினைத்துக்கொள்வேன். அதைவிடுத்து ட்வீட் போட்டுக்கொண்டிருப்பதில் அர்த்தமே கிடையாது. ட்விட்டரில் போட்டுப்பார்த்துவிட்டேன். ட்வீட் மழையே பொழிந்துவிட்டேன். ஆனால் பெய்வது, தோல் கனத்தில் அவர்களுக்கு உறைக்கவே இல்லை. அப்படியிருக்க நான் மழை பொழிந்து என்ன பயன்? அதனால்தான் களம்காணத் தயாராகிவிட்டேன். அதற்கான முயற்சிதான் இந்த ‘நாளை நமதே.’

ஆம், நாளை நிச்சயம் நமதே. களத்தில் சந்திப்போம், கரம் கோப்போம், தமிழகம் காப்போம்” என எழுதியுள்ளார் கமல்ஹாசன்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment