Advertisment

‘இனி நான் ட்விட்டர் புலி இல்லை’ : களத்தில் இறங்கினார் கமல்ஹாசன்

இன்று காலை சென்னை எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல் குளம் உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாகச் சென்று ஆய்வுசெய்த கமல்ஹாசன், அங்குள்ள மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

author-image
cauveri manickam
Oct 28, 2017 10:18 IST
New Update
kamal-visit-kosasthalaiyarriver

இதுவரை ட்விட்டரிலும், ‘பிக் பாஸ்’ மேடையிலும் தன்னுடைய கருத்துகளைக் கூறிவந்த கமல்ஹாசன், முதன்முறையாக நேரடியாகக் களத்தில் இறங்கியுள்ளார்.

Advertisment

‘தவறு நடந்தபின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஒரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வடசென்னைக்கு ஆபத்து. முழுவிவரம் கீழே’ என ட்விட்டரில் நேற்று பதிவிட்ட கமல்ஹாசன், ஒரு அறிக்கையையும் இணைத்துள்ளார்.

அதில், ‘கோசஸ்தலையாறு சென்னை அருகே இன்னும் முழுவதும் சாக்கடையாகாமல் மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அது கூவம் அடையாற்றைவிட பன்மடங்கு பெரிய ஆறு. அதன் கழிமுகத்தின் 1090 ஏக்கர் நிலத்தை சுற்றுச்சூழல் சிந்தனையில்லா சுயநல ஆக்கிரமிப்பாளர்களால் இழந்துவிட்டோம்.

வல்லூர் மின் நிலையமும், வடசென்னை மின் நிலையமும் தங்கள் சாம்பல் கழிவுகளை கோசஸ்தலையாற்றில் கொட்டுகின்றன. இதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல வருடங்களாகப் போராடியும் அரசு பாரா முகமாய் உள்ளது. மீனவர்கள் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து குரலெழுப்ப முற்பட்டதும் செவிடர் காதில் ஊதிய சங்குதான்.

பற்றாக்குறைக்கு, ஹிந்துஸ்தான் பெட்ரோலியமும், பாரத் பெட்ரோலியமும் தங்கள் எண்ணெய் முனையங்களை நட்டாற்றில் கட்டியிருக்கின்றன. காமராஜர் துறைமுகத்தை விரிவுபடுத்துகிறோம் என்ற போர்வையில், கோசஸ்தலை கழிமுகத்தின் 1000 ஏக்கர் நிலத்தை சுருட்டும் வேலையும் நடப்பதாகக் கேள்விப்படுகிறேன். நில வியாபாரிகளுக்கு கொடுக்கும் முன்னுரிமையையும் உதவியையும் ஏழை மக்களுக்கு கொடுக்காத எந்த அரசும், நல் ஆற்றைப் புறக்கணிக்கும் உதவாக்கரைகள் தான்.

வழக்கமாக வரும் மழை போனவருடம் போல் பெய்தாலே வடசென்னை வெள்ளக்காடாகும். வானிலை ஆராய்ச்சியாளரின் எதிர்பார்ப்புப்படி இவ்வருடம் அதிக மழை வரும் பட்சத்தில் 10 லட்சம் வடசென்னை வாழ் மக்களுக்கு பெரும் பொருட்சேதமும் ஏன்? உயிர் சேதமும் கூட ஏற்படலாம் என்பது அறிஞர் அச்சம்.

100 வாக்கி டாக்கிகளும், பல படகுகளும் இவ்வருடம் வெள்ளத்தில் தவிக்கப்போகும் மக்களை ஒருவேளை கரையேற்றலாம். அவர்கள் வாழ்க்கையில் கரையேற நிரந்தரத் தீர்வு காண்பதே நல்லரசுக்கு அடையாளம். இது, நிகழ்ந்து முடிந்தவற்றின் விமர்சனமல்ல. நிகழக்கூடிய ஆபத்திற்கான எச்சரிக்கை. அரசு விளம்பரப்படுத்தும் ஆபத்துதவி எண்ணுக்கு கூப்பிடலாம். ஆபத்து வந்தபின் கூப்பிட்டுக் கதறாமல், முன்பே அரசையும் மக்களையும் எச்சரிக்கிறோம். மக்கள் செவிசாய்ப்பார்கள் என்று நம்புகிறோம். ஆனால் அரசு? அது செவிசாய்க்காமல் மெல்லச் சாயும். அது விரைவுற நாமும் உதவலாமே’ என்று கூறப்பட்டுள்ளது.

இன்னொரு ட்வீட்டில், ‘சென்னை காட்டுக்குப்பம், முகத்துவாரக்குப்பம், சிவன்படை வீதி குப்பத்து மீனவ நண்பர்களின் குரலை ஊடகங்கள் தயவாய் உயர்த்த வேண்டும்’ என்று சொல்லி, அதுகுறித்து ஒரு இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்க்கையும் இணைத்துள்ளார் கமல்ஹாசன்.

கமல்ஹாசனின் இந்த ட்வீட் செய்தியை அறிந்த காட்டுக் குப்பம் மீனவர்கள், நன்றி தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். ‘காட்டுக் குப்பத்துப் பெண்களும், இளைஞர்களும் என் குரலுக்கு நன்றியைப் பதிவு செய்தது நெகிழ வைக்கிறது. நான் செய்தது உதவியல்ல, கடமை. விரைவில் சந்திப்போம்’ என மற்றுமொரு ட்வீட்டில் கூறியுள்ளார் கமல்ஹாசன்.

இந்நிலையில், இன்று காலை சென்னை எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல் குளம் உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாகச் சென்று ஆய்வுசெய்த கமல்ஹாசன், அங்குள்ள மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். ‘ட்விட்டரில் மட்டுமே கமல்ஹாசன் ஆக்டிவாக இருக்கிறார்’ என அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் குற்றம்சாட்டி வந்த நிலையில், நேரடியாகக் களத்தில் இறங்கி அவர்களுக்குப் பதில் அளித்துள்ளார்.

#Ennore Port #Sambal Kulam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment