நவம்பர் 7ஆம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக கமல்ஹாசன் கூறியிருப்பதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென அதிரடியாக நுழைந்திருக்கிறார் கமல்ஹாசன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ட்விட்டரில் மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து வந்த கமல், ‘பிக் பாஸ்’ மேடையில் நேரடியாகவே அரசியல் பேச ஆரம்பித்தார். அதுமட்டுமல்ல, வெளி நிகழ்ச்சிகளில் கூட அரசியல் பேசி, தன்னுடைய அரசியல் ஆசையை வெளிப்படையாகவே தெரிவித்தார்.
மத்திய, மாநில அரசுகளை அவர் விமர்சித்து வருவதால், யாருடனும் கூட்டணி சேராமல் தனிக்கட்சி தொடங்குவார் என்றே எல்லோரும் நினைக்கிறார்கள். வருகிற நவம்பர் 7ஆம் தேதி அவருக்குப் பிறந்தநாள். எனவே, அன்றைய தினம் புதுக்கட்சி தொடர்பான அறிவிப்பை கமல் வெளியிடுவார் என ஆவலோடு எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், நவம்பர் 7ஆம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ‘ஆனந்த விகடன்’ வார இதழில் தொடர் எழுதிவரும் கமல்ஹாசன், அறப்போர் இயக்கம் பற்றியும், அது நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ‘நீதியும் சமத்துவமும் உள்ள சமுதாயத்தை அமைக்க வேண்டும்’ என்ற அறப்போர் இயக்கத்தின் நோக்கமே கமலின் நோக்கமாகவும் இருப்பதால், இந்த வாரம் அவர்களைப் பரிந்துரைப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
‘இளைஞர்படை ஒன்று காத்திருப்பதை என்னால் உணர முடிகிறது. அவர்களை ஒருங்கிணைக்க வேண்டிய கடமையும் தேவையும் எனக்கு வந்துவிட்டது. வரும் நவம்பர் 7ஆம் தேதி அவர்களுடன் தொடர்புகொள்ளத் தடையில்லாமல் உரையாடும் வழி ஒன்றை ஏற்படுத்தி அறிவிக்கவுள்ளேன். அவர்களுடன் அளாவளாவுவதற்கல்ல; பாசறைகள், பயிற்சி முகாம்கள் ஏற்படுத்தி ஆகவேண்டிய காரியங்களுக்கான செயல்திட்டம் தீட்ட.
திறமையாளர்கள், படிப்பாளிகள், உழைப்பாளிகள் அனைவரையும் சாதிவரையறைகள் தாண்டி ஒன்றுகூட வைக்கும் சங்கநாதம் தனியே தேவையில்லை. அது ஏற்கெனவே நம் மனங்களில் ரீங்கரிக்கத் துவங்கி நாள்கள் பல ஓடிவிட்டன.
இனியும் தாமதியாது கூடுவோம். பட்டிமன்றம் போட்டுப் பேச அல்ல; செயல்திட்டங்கள் தீட்ட. திட்டங்களுடன் நான் கூட்ட நினைப்பது வெறும் தொண்டர் கூட்டத்தை மட்டுமல்ல; தலைவர்களின் பெருங்குழுவை. இதை ஒரு தியாகமாக நினைத்து முன்வருபவர்கள் இப்போதே தயவுசெய்து ஒதுங்கிக் கொள்ளுங்கள். தியாகமாக நினைத்து வருபவர்கள் எதையோ எதற்காக இழப்பது போன்ற உணர்வுடன் வந்து எம்மைத் தேவையில்லாமல் கடன்படச் செய்வார்கள். தமிழகத்திற்குச் செய்ய வேண்டிய கடமையாக நினைத்து வருபவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன். செய்வார்கள் எனக் காத்திருந்தது போதும். நம்மால் முடியும், என்னால் முடியும். என்னால் முடியும் என்றால் உன்னாலும் முடியும்.
நமது இயக்கத்துடன் சேர்ந்து பணிசெய்யப் பல இயக்கங்கள் தயாராக உள்ளன. அவர்களுடன் பேசியதில் வந்த புரிதலும் அடக்கமும், நாம் அவர்களுடன் சேர்ந்து பணிசெய்து தமிழகத்திற்கு பலம் சேர்க்க வேண்டும் என்பதே. உதாரணமாக, இரண்டு வருடங்களாக இயங்கிவரும் அறப்போர் இயக்கம் பல கோணங்களில் ஊழலை நேர்கொண்டு தாக்கும், நீக்கும் இயக்கம். இதற்குப் பின்னால் வெறும் வீரம் மட்டுமல்ல... அயராத துப்பறிவும் புலனாய்வும் தீராத்தேடலும் இருக்கின்றன’ என்று அந்த தொடரில் எழுதியுள்ளார் கமல்ஹாசன்.
கமல்ஹாசனின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, அரசியல்வாதிகள் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.