கேரளாவின் திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர் அல்லாத அர்ச்சகருக்கு அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.
கேரள மாநில அரசின் அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், திருக்கோயில் அர்ச்சகர்களாக முறைப்படி பயிற்சி பெற்றவர்களில் 62 பேரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தேர்வு செய்தது.
இதில் 32 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு, 26 பேர் பிராமணர்கள், மீதமுள்ள பிராமணர் அல்லாதோர் 36 பேர் நியமனம் பெற்றுள்ளனர். இதில் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள் 6 பேர்.
கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு மு.க.ஸ்டாலின், வைகோ, ராமகிருஷ்ணன் போன்ற தமிழக தலைவர்கள் பாராட்டுகள் தெரிவித்தனர்.
குறிப்பாக, இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "கேரளாவில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் அற்புதமான திட்டம் செயல்பாட்டுக்கு வருவது, சிந்தைக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக அமைந்துள்ளது. அங்கே அர்ச்சகர் பணி காலியாக உள்ள 62 இடங்களுக்கு திருவிதாங்கூர் தேவசம் வாரியம் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமித்துள்ளது. இதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 6 பேர் இடம்பெற்றுள்ளனர் என்பது பெருமையோடு குறிப்பிடத்தக்கது.
பழங்குடி இனத்தவர், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் என மொத்தமாக 36 பேர் அர்ச்சகராகும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். திருவிதாங்கூர் தேவசம் வாரியத்திற்குட்பட்ட அனைத்துக் கோவில்களிலும் இனி இடஒதுக்கீட்டின் அடிப்படையிலும், பொதுப்பட்டியலின் வழியாகவும் தகுதி வாய்ந்த அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள மற்ற கோவில்களிலும் இந்த நடைமுறையைப் பின்பற்ற அங்கே ஆட்சி செய்யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாண்புக்குரிய முதல்வர் திரு. பினராயி விஜயன் அவர்களின் தலைமையிலான அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் வரவேற்புக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் உரியன" என்றார்.
இந்நிலையில், ட்விட்டரில் அரசியல் செய்யும் நடிகர் கமல்ஹாசன் இதுகுறித்து இன்று பதிவிட்டுள்ள ட்வீட்டில், "திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர் அல்லாத அர்சகர்கள் நியமனம். நன்றி கேரள முதல்வருக்கும் தேவஸ்தானத்துக்கும். வைக்கம் வீரர்க்கு வணக்கம்" என்று குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலம், தமிழ் என இரண்டிலும் தனது நிலைப்பாட்டை கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்த கமல், "தமிழக அரசியலுக்கு கேரள அரசியலில் இருந்து ஏதாவது பாடத்தை கற்க முடியுமா என்ற ஆர்வத்தில் ஒரு அரசியல் சுற்றுலாவாக இதை எடுத்துக்கொண்டேன். ஏனெனில் இங்கு சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.