நீட் தேர்வுக்காக நீட்டுக்காக ஒரு நல்ல மருத்துவரை இழந்து விட்டோம். இதனை விட அவலம் என்ன உள்ளது என நடிகர் கமல்ஹாசன் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூரை சேர்ந்தவர் அனிதா. சிறு வயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என கனவு கண்டு, அதற்காக சிரமப்பட்டு படித்து வந்தார். அவரது உழைப்புக்கு ஏற்றார்போல் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்து, 196.5 கட்-ஆஃப் மதிப்பெண்ணும் பெற்றார். ஆனால், நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் அனிதா மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார். நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற சட்டப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு போராடியவர் அனிதா என்பது கவனிக்கத்தக்கது.
மருத்துவம் பயில வாய்ப்பு கிடைக்காததால் மனமுடைந்த நிலையில் இருந்த மாணவி அனிதா, தற்கொலை செய்து கொண்டு தனது உயரை இன்று மாய்த்துக் கொண்டார். அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்கு நீட் தேர்வு மீதான தனது கோபத்தை நடிகர் கமல்ஹாசன் வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், "அனிதா தற்கொலை வேதனை அளிக்கிறது. நீட் தேர்வுக்காக ஒரு நல்ல மருத்துவரை இழந்து விட்டோம். இதனை விட அவலம் என்ன உள்ளது. தற்கொலையில் இருந்த தான் பாடம் கற்க வேண்டுமா?" என ஆவேசம் தெரிவித்தார்.
மேலும், மருத்துவ கனவுடன் வாழ்ந்த அனிதாவை மண்ணோடு மண்ணாக புதைத்து விட்டார்கள். இதற்கு எதிராக போராட வேண்டும். நீட்டுக்கு எதிராக போராட வேண்டியவர்கள் பேரம் பேசுகிறார்கள். நியாயம் கிடைக்க சாதி மதம் கடந்து போராட வேண்டும். வாதாட வேண்டியவர்கள் பேரம் பேசி கொண்டிருக்கிறார்கள். நல்ல செய்தி வருகிறது எனக்கூறியவர்கள் காணாமல் போய் விட்டனர் எனவும் கமல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நீட் தேர்வுக்கு எதிராக ஆரம்பம் முதலே நடிகர் கமல்ஹாசன் குரல் கொடுத்து வந்தார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓர் ஆண்டு விலக்களிக்க ஒத்துழைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்த போது,"நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம். குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயை கூர்ந்து உடனே பேசுங்கள்" என அவர் தெரிவித்திருந்தார்.
அதேபோல், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்த போது, அதற்கு நன்றி தெரிவித்த கமல்,"மாணவரின் தவிப்புணர்ந்த சட்ட அமைச்சகத்திற்கும், அனைத்து கட்சிகளுக்கும் நன்றி. இந்த ஒரு வருட வாய்ப்பு அவசரச் சிகிச்சையே, இனி என்ன செய்வோம்?" எனவும் அவர் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.