அஜித்துக்கு இருந்த தைரியம் கமலுக்கு இருந்ததா? கமலை தொடர்ந்து சீண்டும் அமைச்சர்!

அஜித் பொதுமேடையில் தைரியமாக பேசியதுபோல் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது கமலுக்கு பேச தைரியம் இல்லாமல் போனது ஏன்?

“பிக்பாஸ்” என்ற இந்த ஒற்றைச் சொல் தான் தமிழகத்தின் இந்த நிமிடத்தினுடைய ஹாட் டாபிக். அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பு பிரிவு மற்றும் மார்க்கெட்டிங் பிரிவைப் போல, இந்த் நொடி யாராலும் மகிழ்ச்சியில் திளைக்க முடியாது. ஏனெனில், நெடுவாசல் மறந்து, கதிராமங்கலம் மறந்து, விவசாயிகளின் போராட்டம் மறந்து, திரும்பும் திசையெங்கும் நாம் பேசிக் கொண்டிருக்கும் வார்த்தை பிக்பாஸ் தான். இந்த வாரம் யார் நாமினேட் ஆவார்கள்? யார் எலிமினேட் செய்யப்படுவார் என்று சிந்தனை சென்றுக் கொண்டிருக்கிறது.

“ஒரு பொய்யில் சில உண்மைகள் கலந்திருந்தால் தான் அந்த பொய் மற்றவர்களால் நம்பப்படும்” என்றும் ஒரு தமிழ் படத்தில் வசனம் வரும். இது பிக்பாஸுக்கு பக்காவாக பொருந்தும். அவர்கள் முழு ஸ்கிரிப்ட்டையும் எழுதாமல், “மனிதன் பாதி..மிருகம் பாதி… கலந்து செய்த நிகழ்ச்சி இது” என்று உருவாக்கி, அந்த வசனத்தை பேசிய கமலையே இந்த நிகழ்ச்சியை நடத்தவும் வைத்துவிட்டார்கள்.

இதில், தற்போதைய பிரச்சனை என்ன என்பது நமக்கு நன்றாகவே தெரியும். காயத்ரியின் ‘சேரி பிஹேவியர்’ சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளிக்க வந்த கமல், தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். (இதுவும் பிக்பாஸ் ஸ்க்ரிப்ட் தானோ!!)

இதையடுத்து, பொங்கியெழுந்த தமிழக அமைச்சர்கள், கமலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேட்டி அளித்தனர். குறிப்பாக, “கமல்ஹாசன் இதுவரை அவர் நடித்த படங்களுக்கு எவ்வளவு வரி கட்டினார் என்பதை விளக்குவாரா? ஆய்வு செய்யட்டுமா?” என அமைச்சர் எஸ்பி வேலுமணி மிரட்டல் விடுத்தார். மேலும், சில அமைச்சர்கள் கமலை அச்சுறுத்தும் விதத்தில் பேட்டி அளித்தனர்.

இதைத் தொடர்ந்து கமலுக்கு ஆதரவாக நேற்று அறிக்கை வெளியிட்ட மு.க.ஸ்டாலின் “தமிழக அரசை ஊழல் அரசு என்று பொதுமக்கள் சொல்வதைத்தான், குடிமக்களில் ஒருவரான கமல்ஹாசனும் தெரிவித்திருக்கிறார். அதற்காக அவர் மீது வன்மம் கொண்டு குதிரை பேர பினாமி அரசின் அமைச்சர்கள் கருத்து தெரிவிப்பதும், மிரட்டுவதும் ஜனநாயகத்தின அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயலாகும். இப்படி பேசும் அமைச்சர்களை முதலமைச்சர் வேடிக்கை பார்ப்பது அதை விட அடாவடி செயலாகும்” என்றார். இதற்கு கமல்ஹாசனும் தனது ட்விட்டரில் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்தச் சூழ்நிலையில், இந்த விவகாரம் குறித்து இன்று மீண்டும் பேட்டியளித்துள்ள சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது இது போன்ற கருத்துக்களை கமல்ஹாசன் ஏன் தெரிவிக்கவில்லை. திமுக ஆட்சியில் முதலமைச்சர் விழாவில் நடிகர்கள் மிரட்டப்படுவதாக அஜித் பேசியபோது கமல் எங்கு சென்றார்? அஜித் பொதுமேடையில் தைரியமாக பேசியதுபோல் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது கமலுக்கு பேச தைரியம் இல்லாமல் போனது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, திமுக ஆட்சியின் போது, கடந்த 2010-ஆம் ஆண்டு நடந்த “பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா”வில் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட தமிழ் சினிமாவின் அத்தனை உச்ச நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். அப்போது கருணாநிதியின் முன் மேடையில் பேசிய அஜித், “இந்த விழாவிற்கு வரச் சொல்லி மிரட்டுகிறார்கள். நாங்களும் கஷ்டப்பட்டுத் தான் உழைக்கின்றோம். இது போன்ற விழாக்களுக்கு கட்டாயம் வர வேண்டும் என்று மிரட்டப்படுவதை நீங்கள் தடுக்க வேண்டும்” என்றார்.

அனைவரும் கருணாநிதியை புகழ்ந்து பாராட்டிப் பேசிக் கொண்டிருக்க, அஜித் கலைஞர் முன்னாலேயே தைரியமாக தனது கருத்துகளை வெளியிட்டார். இதற்காக, ரஜினி எழுந்து நின்று அஜித்திற்கு கைத்தட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close