நிலவேம்பு விவகாரம் : கமல்ஹாசன் விளக்கம்

வைத்தியர் அறிவுரையோ, வழிகாட்டுதலோ இல்லாமல், மருந்துகளை என் இயக்கத்தான் விநியோகிப்பதை நான் விரும்பவில்லை.

By: October 19, 2017, 8:20:09 PM

கமல்ஹாசன், நிலவேம்பு குடிநீர் விநியோகிப்பதை நிறுத்தி வைக்குமாறு தன்னுடைய இயக்கத்தினரிடம் கூறினார். இதுகுறித்து ட்விட்டரில் நேற்று கருத்து வெளியிட்டுள்ள கமல்ஹாசன், “சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக் கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்.

ஆராய்ச்சியை அலோபதியர்தான் செய்ய வேண்டுமென்றில்லை. பாரம்பரியக் காவலர்களே செய்திருக்க வேண்டும். மருந்துக்கு பக்க விளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான்” என கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் இந்தக் கூற்றுக்கு பாஜகவைச் சேர்ந்த தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், தேவராஜன் என்பவர் கமல்ஹாசனை கைதுசெய்யக் கோரி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அத்துடன், தமிழ்நாடு அரசு சித்த மருத்துவ சங்கத்தினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசனின் கருத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தன் ட்வீட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார் கமல்ஹாசன். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நிலவேம்புக் கஷாயத்தை நம் நற்பணி இயக்கத்தார் விநியோகிக்க வேண்டாம் என்று வேண்டிக் கொண்டதை, நிலவேம்புக்கு கமல்ஹாசன் எதிர்ப்பு என்று சிலர் செய்தியாய் பரப்புவது எந்த வகையிலும் நியாயமில்லை.

ஆர்வக் கோளாறில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் மருந்தை, அளவில்லாமல் கொடுப்பதைத் தவிர்க்கவே அந்த ட்வீட்டை வெளியிட்டேன். வைத்தியர் அறிவுரையோ, வழிகாட்டுதலோ இல்லாமல், மருந்துகளை என் இயக்கத்தான் விநியோகிப்பதை நான் விரும்பவில்லை. அரசு, வைத்தியர்கள் உதவியுடன் ஏற்பாடு செய்திருக்கிறது. அந்த உதவியோ, அறிவுரையோ இல்லாமல், மருந்துகள் அளவின்றி அனைவருக்கும் விநியோகிக்கப்படுவதை மட்டுமே நான் விமர்சிக்கிறேன்.

மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றால், அதை யார் செய்தாலும் போற்றுபவன் நான். ஆனால், மருத்துவ அறிவுரை இல்லாமல், ஆர்வம் மட்டுமே ஊக்கியாகச் செயல்படுதலை என் இயக்கத்தார் செய்வதைத்தான் நான் நிறுத்திவைக்கச் சொல்லியிருக்கிறேன். சித்தா, அலோபதி என்ற தனிசார்பு எனக்கில்லை.

அதுவரை டெங்குவை எப்படி கட்டுப்படுத்துவது? என்றால், பக்கத்து மாநிலமான கேரளத்தைப் பார்த்து கற்றுக் கொள்ளலாம். இத்தனை நாள் ஈ ஓட்டாமல், கொசுவை விரட்டியிருக்கலாம்” என தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Kamalhaasan explains his tweet about nilavembu kudineer

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X