Advertisment

'திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை'! - சலசலப்பை ஏற்படுத்திய கமல்ஹாசன் அறிவிப்பு

அவசர கைக்குலுக்குகளால் எங்கள் கையில் கறை படிந்துவிடக் கூடாது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kamal Haasan, nathuram godse, கமல்ஹாசன்

Tamil Nadu news today in tamil

மக்களவைத் தேர்தலில், திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று அறிவித்துள்ளார்.

Advertisment

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் சில கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்க, சில கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேசிக் கொண்டிருக்கின்றன. தேர்தல் தேதி அறிவித்த பிறகு, கூட்டணி குறித்து முக்கிய கட்சிகள் விவரங்களை வெளியிட உள்ளன.

இந்தநிலையில், வெள்ளித் திரையில் ஆளுமை செலுத்திய கமல்ஹாசன் கடந்த ஆண்டு மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியைத் தொடங்கினார். தொடக்கத்தில் இவரது கட்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு இல்லையென்றாலும், தற்போது கிரவுண்ட் ஒர்க்கில் கமல் & கோ அதிக கவனம் செலுத்தி வருகிறது. கிராமம் கிராமமாக சுற்றுப் பயணம் செய்யும் கமல், அங்கு மக்களுடன் நேரடியாக உரையாடி 'ஸ்டார்' பிம்பத்தை உடைத்து, 'தலைவர்' பிம்பத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார்.

இதனால், முன்பிருந்த நிலையை விட, கிராமங்களிலும் மக்கள் நீதி மய்யம் பரவலாக சென்றடைய தொடங்கி இருக்கிறது. அதேசமயம், தேர்தலில் எந்தக் கட்சியுடன் கமல்ஹாசன் கூட்டணி வைப்பார் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வந்தது.

கட்சி தொடங்கியதில் இருந்தே ஆளும் கட்சியான அதிமுகவை மட்டுமே கார்னர் செய்து தாக்கி வந்தவர் கமல்ஹாசன். பாஜகவுடன் பட்டும் படாமல் உறவை காத்து வந்தார். ஆனால், நாளடைவில் 'பாஜக எதிர்ப்பு' எனும் மற்ற கட்சிகளின் ஃபார்முலாவையே பின்பற்றத் தொடங்கிய கமல், அதன்பிறகு பாஜக மீது சில விமர்சன அம்புகளை தொடுத்து வருகிறார்.

அதேசமயம், இன்னும் அரசியல் கட்சியே தொடங்காத ரஜினியை அவ்வப்போது கடுமையாக அட்டாக் செய்து வரும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள், கமலின் மக்கள் நீதி மய்யத்தின் மீது மறந்தும் விமர்சனம் வைக்காமல் இருந்து வருகின்றனர். இதனால், திமுகவில் கமல் கூட்டணி வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், திமுக அணியில் பல கட்சிகள் உள்ளதால், அவற்றிற்கு எவ்வளவு சீட் ஒதுக்குவது என்பதிலேயே குழப்பம் நீடிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இதனால், திமுக விரும்பினாலும், கமலுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்பதே அரசியல் வல்லுனர்களின் கணிப்பாக இருந்தது.

அதிமுகவுடன் செல்லவும் வாய்ப்பில்லை என்பதால், தினகரனின் அமமுகவுடன் கமல்  கூட்டணி வைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இவை அனைத்திற்கும் இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கமல்ஹாசன். அதிமுக, திமுகவுடன் கூட்டணி இல்லை என்று வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இன்று பிற்பகல் பேசிய கமல்ஹாசன், "திமுக, அதிமுகவுடன் நாங்கள் கூட்டணி வைக்கப் போவதில்லை. மக்களுக்கு நல்லதை பரிமாற புறப்பட்டு இருக்கிறோம். அவசர கைக்குலுக்குகளால் எங்கள் கையில் கறை படிந்துவிடக் கூடாது. எங்கள் கை சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அமமுகவுடனும் நாங்கள் கூட்டணி வைக்கப் போவதில்லை" என்று தெரிவித்து இருக்கிறார்.

கூட்டணி இல்லை என்று சொல்லியதில் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், 'எங்கள் கையில் கறை படியக் கூடாது' என்று பரபரப்பான எக்ஸ்டிரா கருத்தையும் கமல் உதிர்த்து இருப்பது திமுக, அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dmk Kamal Haasan Makkal Needhi Maiam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment