அமைச்சர் ஜெயக்குமாரின் கேள்விக்கு 'அறப்போர் இயக்கம்' மூலம் பதிலளித்த கமல்ஹாசன்!

இந்த முறைக்கேட்டை மேற்கோள்காட்டி கமல்ஹாசன் பொத்தாம் பொதுவாக, 'என்னைக் கேள்வியும் ஆதாரமும் கேட்போருக்கு இதுவே போதுமான பதில்' என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது என்று கடந்த 19-ஆம் தேதி குறிப்பிட்டு இருந்தார்.

கமலின் இந்த பதிவு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், “குற்றவாளிகள் நாடாளக் கூடாது, ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான் என்று நடிகர் கமல் கூறியது கண்டனத்துக்குரியது. குற்றம் இருப்பது கண்டுபிடித்தால் எங்களிடம் கூறுங்கள் நாங்கள் திருத்திக் கொள்கிறோம். நீங்கள் சொல்லியும் நாங்கள் கேட்கவில்லை என்றால் அதற்காக லஞ்ச ஒழிப்பு துறை, நீதிமன்றம், தகவல் அறியும் உரிமை சட்டம் என பல்வேறு விஷயங்கள் உள்ளன.

கற்பனையான குற்றச்சாட்டை நடிகர் கமல்ஹாசன் முன்வைத்திருப்பதை ஏற்க முடியாது. யார் மீது வேண்டுமானாலும் குற்றச்சாட்டை வைத்து விடலாம். ஆனால் அதற்கு ஆதாரம் வேண்டும். ஜெயலலிதா இருந்த போது வாயை மூடிக் கொண்டு நாட்டை விட்டே ஓடிவிடுவேன் என்று கூறிய கமலுக்கு இப்போது முதுகெலும்பு வந்தது எப்படி? ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதிலிருந்தே கமல் யாருடைய கைப்பாவையாக இருந்து வருகிறார் என்பது தெரியவருகிறது. கடந்த காலங்களில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வரும் கல்யாணகுமார் கேரக்டரை போல் இருந்தார். தற்போது குணா கேரக்டரில் கற்பனையிலேயே வாழ்ந்து வருகிறார்” என்றார்.

இந்த நிலையில், கமல்ஹாசன் தனது ட்விட்டரில் அறப்போர் இயக்கத்தினர் வெளியிட்ட வீடியோ ஒன்றை பதிவிட்டு, “அறப்போர் இயக்கச் சகோதரர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். என்னைக் கேள்வியும் ஆதாரமும் கேட்போருக்கு இதுவே போதுமான பதில். மேலும் உள்ளதாம் பல ஆதாரங்கள் This is just expose 1 Keep at it Arappore warriors” என்று குறிப்பிட்டுள்ளார். குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் ஆதாரம் கேட்டதற்கு பதிலளிக்கும் விதமாக கமல்ஹாசன் இந்த ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

சென்னை மந்தைவெளியில் உள்ள தேவநாதன் தெருவில் சாலை அமைத்ததில் ரூ.26 லட்சம் முறைகேடு செய்யப்பட்டிருப்பதாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முறைக்கேட்டை மேற்கோள்காட்டி கமல்ஹாசன் பொத்தாம் பொதுவாக, ‘என்னைக் கேள்வியும் ஆதாரமும் கேட்போருக்கு இதுவே போதுமான பதில்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close