தனது அதிரடி ட்வீட்டுகளால் இணையத்தை ஆக்கிரமிக்கும் நடிகர் கமல்ஹாசன், உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் பலியான குழந்தைகள் குறித்து இன்று ட்வீட் செய்திருந்தார். அதில், "இனிவொரு சம்பவம் இதுபோன்று நிகழக்கூடாது" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து நீட் தேர்வு குறித்தும் தனது கருத்தினை இன்று ட்வீட்டியுள்ளார். அதில், "நீட் தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம். குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயைகூர்ந்து உடனே பேசுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கவில்லை. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், பலமுறை மத்திய அரசிடம் ஆலோசித்தனர். நீட் தேர்விலிருந்து அரசு கல்லூரிகளுக்கு மட்டும் இந்த வருடம் விலக்கு அளிக்க தமிழக அரசு கோரினால், மத்திய அரசு ஒத்துழைக்க தயாராக உள்ளது. ஓராண்டுக்கு விலக்கு கேட்டால் மத்திய அரசு ஒத்துழைக்கும். இதுகுறித்து மாநில அரசு 'அவசரச் சட்டம்' கொண்டுவந்தால் ஒத்துழைப்பு அளிக்கப்படும். கிராமப்புற மாணவர்கள் பாதிப்பார்கள் என்பதை விளக்கி அந்த தனி அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும். ஆனால், நீட் தேர்வில் நிரந்தர விலக்கு என்பது கிடையாது" என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், "குதிரைகள் பேரத்தை பிற்பாடு பேசலாம். இது மாணவர்களின் எதிர்காலம் பற்றியது. தயவு கூர்ந்து இதுதொடர்பாக உடனடியாக பேசுங்கள்" என கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். அதேசமயம், "நீட் தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம்" என்றும் நக்கலாக குறிப்பிட்டுள்ளார்.