'சேரி பிஹேவியர்' என்று பிக்பாஸ் ஷோ போட்டியாளர் காயத்ரி தெரிவித்த ஒற்றை வார்த்தைக்கு பதில் சொல்ல வந்த நடிகர் கமல்ஹாசன், தமிழக அரசின் மீதும் விமர்சனங்கள் வைத்தார். அப்போது பேசிய கமல், "தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழலும், லஞ்சமும் உள்ளது. பத்து வருடங்களுக்கு முன்பாகவே 'சிஸ்டம் சரியல்ல' என்று முதலில் கூறியது நான் தான்" என்றார்.
கமலின் இந்த பேச்சுக்கு அதிமுக அமைச்சர்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தனர். சிலர் கமல்ஹாசனை ஒருமையிலும் கடிந்தனர். ஆனால், 'விடாது சிகப்பு' என்பது போல், கமல்ஹாசனும் தொடர்ந்து, தனது ட்வீட்கள் மூலம் அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு பதிலளித்து வந்தார்.
நீட் தேர்வு விவகாரம், டெங்கு காய்ச்சல் பரவல், பெரம்பலூர் முட்டை ஊழல் என அனைத்து விஷயங்கள் தொடர்பாகவும், தொடர்ந்து தனது ட்வீட்கள் மூலம், தனது கருத்துகளை வெளியிட்டு வந்தார். இதனால், அவ்வப்போது அமைச்சர்களும் கமலை விமர்சித்துக் கொண்டே இருந்தனர்.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் இன்று தனது ட்விட்டரில், "ஒரு மாநிலத்தில் ஊழல், துயர சம்பவங்கள் நிகழ்ந்தால், மாநில முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். தமிழகத்தில் பல குற்றங்கள் நடந்தும் எந்த கட்சிகளும் முதல்வரை ராஜினாமா செய்ய வலியுறுத்தாதது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு அடுத்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "எனது இலக்கு என்பது சிறப்பான தமிழகம். எனது குரலுக்கு வலிமை சேர்க்க யாருக்கு துணிச்சல் உள்ளது? திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எனக்கு கருவியாக உதவ வேண்டும். இந்தக் கருவிகள் பயன்படவில்லை எனில், வேறு ஒன்றை கண்டறிய வேண்டியது தான்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர் பதிவிட்டுள்ள மூன்றாவது ட்வீட்டில், "சுதந்திரம் ஊழலலிருந்து நாம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்க்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும் லெல்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை தமிழக அரசை விமர்சித்து வந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது முதலமைச்சரை நேரடியாக விமர்சித்து இருப்பது, தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, 'என் குரலுக்கு வலிமை சேர்க்க யாருக்கு துணிச்சல் உள்ளது?' என அவர் கேட்டிருப்பது அவரது அரசியல் படிகளில் அடுத்த முன்னேற்ற அடியாகவே தெரிகிறது. மேலும், இதுநாள் வரை கமல்ஹாசன் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் "திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எனக்கு கருவியாக உதவ வேண்டும். இந்தக் கருவிகள் பயன்படவில்லை எனில், வேறு ஒன்றை கண்டறிய வேண்டியது தான்" என கூறி, இரு கட்சிகளுக்கும் தனது எதிர்ப்பு நிலையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதில் மற்றொரு சுவாரஸ்ய நிகழ்வாக, கமல்ஹாசனின் இந்த ட்வீட்டை டிடிவி தினகரன் லைக் செய்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/z97-1-300x217.jpg)