இவ்வளவு நாட்கள் ட்விட்டரில் அரசியல் பேசி வந்த கமல்ஹாசன், எண்ணூர் துறைமுகப் பகுதிகளில் அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பொதுமக்களிடம் நேரடியாக சென்று கேட்டறிந்தார்.
இந்த நிலையில், கடந்த 27-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதால், வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வீடுகளுக்கு தண்ணீர் புகுந்திருப்பதால், பலரும் தங்களது இருப்பிடங்களை காலி செய்து மூட்டை முடிச்சுகளுடன் வேறு இடங்களுக்கு செல்கின்றனர். இதனால், தமிழக அரசு மீது கடும் அதிருப்தியில் மக்கள் உள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இது அரசுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்படும் முன்னறிவிப்பு. உடனே செயல் பட்டால் வருமுன் காப்பதாகும். எனக்கு வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன" என இன்று பதிவிட்டுள்ளார்.
அந்த ட்வீட்டில் மேலும், "இவ்வேரிகளின் கொள்ளளவு தெரியாது. நீர் வரத்துப் பாதைகளும், நீர் வெளியேரும் பாதைகளும் தெரியாது. தெரியாது என்பதைவிட நில அபகரிப்புக்கு வசதியாய் தெரியாமல் வைக்கப்பட்டிருக்கிறது என்பதே கசந்து குமட்டும் உண்மை. நன்மங்கலத்திலிருந்து மற்றொரு ஏரிக்கு நீர் வரும் பாதையை மறித்துக் கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க நீதிமன்றம் 2015லேயே உத்தரவு பிறப்பித்துவிட்டது. எனினும் இன்றுவரை சட்டம் மீறப்பட்டே வருகிறது. அப்பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்கவும் குரலெழுப்பவும் ஊடகங்கள் தயவாய் உதவ வேண்டும். வருமுன் காப்போம். நித்திரை கலைப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.