நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "கலந்தாலோசிக்காது நமது இயக்கத்தார் மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடைஞ்சலாக ஆர்ப்பாட்டங்களில் இறங்கலாகாது. விதிகளை மதியாத இயக்கத் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலையை தலைமைக்கு தயவாய் ஏற்படுத்தாதீர்கள். ஆக்க பூர்வமான வேலைகள் நிறைய இருக்கின்றன" என்று நேற்று இரவு போஸ்ட் செய்திருந்தார்.
பலருக்கும், ஏன் தனது ரசிகர்களை கமல் எச்சரித்தார் என்று புரியாமல் இருந்தது. ஆனால், நேற்று தினகரனை எதிர்த்து கமல் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் தான் கமல் இந்த ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரனின் வெற்றியை விமர்சித்த கமல்ஹாசன், 'இந்த வெற்றி ஆகப்பெரிய அவமானம். இது பணம் கொடுத்து பெறப்பட்ட வெற்றி' என கூறினார். இதற்கு பதிலளித்த தினகரன், நடிகர் கமலின் விமர்சனம் வாக்களித்த ஆர்கே நகர் மக்களை அவமானப்படுத்தும் செயல் என தெரிவித்தார்.
நேற்று பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரனும், கமல்ஹாசனின் ட்விட்டர் பதிவுகளே தலைமைக்கு தகுதியில்லாதவர் என்பதை வெளிக்காட்டுகிறது என்று விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில், நேற்று மதுரை கட்டபொம்மன் சிலை அருகே டிடிவி தினகரனை கண்டித்து, கமல்ஹாசனின் ரசிகர்கள் 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டிடிவி தினகரன் முறைகேடு செய்து ஆர்.கே நகர் தொகுதியில் வெற்றிபெற்றாதாக அப்போது கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்தே, கமல்ஹாசன் தனது ட்விட்டரில் ரசிகர்களை கண்டிக்கும் விதமாக ட்வீட் செய்துள்ளார்.