சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவிற்கு யார் தடுத்தாலும் நிச்சயம் வந்திருப்பேன் என, நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னை அடையாறில் அரசு சார்பில் கட்டப்பட்ட சிவாஜி மணி மண்டபத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அவரது பிறந்த நாளான இன்று திறந்து வைத்தார். சென்னை அடையாறில் நடைபெற்ற திறப்பு விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, பாண்டியராஜன், நடிகர்கள் ரஜினி, கமல் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள், திரையுலகினர் கலந்து கொண்டனர் சிவாஜி கணேசன் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், திறப்பு விழாவிற்கு யார் தடுத்திருந்தாலும் நிச்சயம் வந்திருப்பேன் என தெரிவித்தார். “இந்த நிகழ்ச்சிக்கு உள்ளே எனக்கு அனுமதி கிடைத்திருக்காவிட்டாலும், வெளியே அமர்ந்திருப்பேன். யார் தடுத்தாலும் இந்த விழாவிற்கு நிச்சயம் நான் வந்திருப்பேன்.”, என கூறினார்.
மேலும், சிவாஜி கணேசன் தேசிய, ஆசிய எல்லைகளை கடந்த கலைஞன் எனவும் புகழாராம் சூட்டினார். “சிவாஜி கணேசன் அரசியல் எல்லையை கடந்த நடிகர் மட்டுமல்ல. தேசிய, ஆசிய எல்லைகளை கடந்தவர். அந்த மாபெரும் கலைஞனுக்கு அரசு செய்யும் நன்றி அறிவிப்புதான் மணிமண்டபம்.”, என கூறினார்.
தான் சிவாஜி கணேசனின் குடும்பத்தினரின் அனுமதியுடன், அக்குடும்பத்தில் தாமதமாக இணைந்த பிள்ளை எனவும் கமல்ஹாசன் கூறினார்.
“இனி எத்தனை அரசுகள் வந்தாலும் சிவாஜி கணேசன் என்ற கலைஞனை மதித்தே ஆக வேண்டும். அந்த மரியாதைக்காக கெஞ்சவோ, கொஞ்சவோ வேண்டாம். அவருக்கு இந்த மரியாதை தன்னால் கிடைக்கும். அவரின் அடியொற்றி நடந்த கலைஞர்களில் நானும் ஒருவன். இங்த நிகழ்ச்சிக்கு நடிகனாக வரவில்லை. அவரது கோடானுகோடி ரசிகர்களில் ஒருவராக வந்துள்ளேன். அவரைப் போல் நடிக்க வேண்டும் என இன்றும் முயல்கிறோம். அதுதான் எங்களை மேம்படுத்துகிறது”, இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.