கமல்ஹாசனின் அடுத்த சந்திப்பு விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் நடைபெற இருக்கிறது. இதற்காக நவம்பர் 4-ம் தேதி மீண்டும் களம் இறங்குகிறார் கமல்ஹாசன்.
கமல்ஹாசன், தமிழக அரசியலில் புதிய பரபரப்பு மையமாக உருவாகியிருக்கிறார். ட்விட்டரில் அவர் பற்ற வைத்த பிரச்னைகளே, தேசிய அளவில் விவாதங்களை கிளப்பின. முதல் முறையாக நேற்று (28-ம் தேதி) டிவிட்டரை விட்டு, களத்திற்கு வந்தார் கமல்ஹாசன்.
சென்னை எண்ணூரில் கொசஸ்தலை ஆற்றின் கழிமுகம், சாம்பல்குளம் பகுதிகளில் அவர் நடத்திய ஆய்வுக்கு நல்ல ரெஸ்பான்ஸ்! அவரது இந்த முயற்சியை மத்திய அமைச்சர் பொன்னார், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் வரவேற்றன. மு.க.ஸ்டாலின், அன்புமணி என அத்தனை தலைவர்களும் அதைப்பற்றி பேசினார்கள்.
கமல்ஹாசன் எதைச் சொன்னாலும் பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயகுமாரே, ‘இதுல ஒண்ணும் தப்பில்லை. நல்ல விஷயத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம்’ என கமல்ஹாசனை பாராட்டியதுதான் ஹைலைட்! அதாவது, எல்லாக் கட்சிகளும் கையிலெடுத்த பிரச்னை அது என்றாலும், கமல்ஹாசன் கையில் எடுத்ததும் அதன் பரிமாணமே மாறிப் போனது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அந்தப் பிரச்னையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் தெரிவித்தார். பொன்னார், திருமாவளவன், கலெக்டர் சுந்தரவல்லி ஆகியோருக்கு தனக்கே உரிய பாணியில் ட்விட்டரில் நன்றி தெரிவிக்கவும் கமல்ஹாசன் தவறவில்லை.
தொடர்ந்து இதேபோல ட்விட்டரில் ஒரு கால், நேரடியாக களத்தில் ஒரு கால் என பயணம் செய்ய ஆயத்தமாகியிருக்கிறார் கமல்ஹாசன். சென்னை எண்ணூரில் அவர் நடத்திய ஆய்வுக்கு கிடைத்த ரெஸ்பான்ஸ், அவரை உற்சாகப்படுத்தியிருக்கிறது.
கமல்ஹாசனை சந்தித்த பி.ஆர்.பாண்டியன்
இதைத் தொடர்ந்து அடுத்த கள நடவடிக்கையாக விவசாய சங்கப் பிரதிநிதிகளை சந்திக்க இருக்கிறார் கமல்ஹாசன். இந்த சந்திப்பு நவம்பர் 4-ம் தேதி சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கடந்த 24-ம் தேதி கமல்ஹாசனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அப்போதுதான் விவசாயிகளுடன் கமல்ஹாசன் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டது.
அடையாறு முத்தமிழ் மன்றத்தின் இருக்கை வசதிக்கு ஏற்ப சுமார் 500 விவசாயிகளை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை பி.ஆர்.பாண்டியனே ஏற்றுக் கொண்டிருக்கிறார். நவம்பர் 4-ம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து கமல்ஹாசன் கேட்டறிய இருக்கிறார்.
விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க தனது திட்டங்கள் குறித்தும் அவர் தெளிவுபடுத்துவார் என விவசாய சங்கப் பிரதிநிதிகள் எதிர்பார்க்கிறார்கள். வருகிற 7-ம் தேதி கமல்ஹாசனின் பிறந்த நாள்! அன்று தனது நற்பணி இயக்கத்தினரை சந்திக்க இருக்கிறார் கமல்ஹாசன். அதற்கு முன்பாக விவசாயிகளை சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள் சார்பில் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் நிகழ்ச்சியாகவும் இது அமைய இருக்கிறது. இன்றைய சூழலில் எந்த ஒரு பிரச்னையையும் மக்கள் மத்தியில் பேச வைக்கு கருவியாக கமல்ஹாசன் மாறியிருக்கிறார். எனவே அடுத்தடுத்து நெசவாளர் சங்கங்கள், மீனவர் அமைப்புகள் என கமல்ஹாசனை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கலாம். ஒரு வகையில் பார்த்தால், மு.க.ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ பாணியில் கமல்ஹாசனின் அரசியல் பயணம் ஆரம்பமாகிறது.