/indian-express-tamil/media/media_files/2025/06/30/kumari-glass-brdge-s-2025-06-30-10-20-14.jpg)
கன்னியாகுமரிக்கு புதிய கவர்ச்சியாக வந்து சேர்ந்துள்ளது கண்ணாடி நடைபாலம். கடல் நடுவே அமைந்திருக்கும் பழமையான விவேகானந்தர் மண்டபத்தையும், 133 அடி உயரத்தில் விண்னை முட்டி நிற்கும் திருவள்ளுவர் சிலையையும் இணைக்கிறது இந்தப் பாலம். 77 மீ. நீளம், 10 மீ. அகலம் கொண்ட இந்தப் பாலம் ரூ.37 கோடியில் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் கடல் நடுவே அமைக்கப்பட்ட முதல் கண்ணாடி பாலம் என்ற பெருமிதத்துடன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி திறந்து வைத்தார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/06/30/kumari-glass-brdge-2025-06-30-10-21-02.jpeg)
எதற்காக இந்தப் பாலம்?
கன்னியாகுமரியில் கடந்த 2000-வது ஆண்டில் ஜனவரி 1-ம் தேதி 133 அடி திருவள்ளுவர் சிலையை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். அதுவரை படகு மூலமாக விவேகானந்தர் மண்டபம் மட்டுமே சென்று வந்த சுற்றுலாப் பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கும் சென்று திரும்புவது வழக்கமானது. ஆனால், கடல் சீற்றம் அதிகமான நாட்களில் திருவள்ளுவர் சிலைக்கு படகுகளை இயக்க முடியவில்லை.
விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் பார்த்துவிட்டு சுற்றுலாப் பயணிகள் திரும்பும் சூழல் ஏற்பட்டது. எனவே, இதை தவிர்க்க இயற்கை சீற்றத்தால் பாதிக்காத அளவில் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு நடை பாலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அந்தப் பாலத்தை சுற்றுலாப் பயணிகள் ரசிக்கும் விதமாக கண்ணாடி பாலமாக அமைத்து இருக்கிறது. தற்போது, இந்தப் பாலத்தை ரசிப்பதற்காகவே விவேகானந்தர் மண்டபத்திற்கும் திருவள்ளுவர் சிலைக்கும் வருகிற பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
எப்படி செல்ல வேண்டும்? செலவு எவ்வளவு?
குமரி கடற்கரையில் இருந்து விவேகானந்தர் மண்டபம் செல்ல காலம் காலமாக படகு சேவை நடந்து வருகிறது. தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் மூலமாக இந்த சேவையை நடத்துகிறார்கள். படகில் ஏறி விவேகானந்தர் மண்டபம் அடைந்தால்போதும். விவேகானந்தர் மண்டபம் அமைந்திருக்கும் பாறையையும் திருவள்ளுவர் சிலை அமைந்திருக்கும் பாறையையும் கடல் நடுவே இணைக்கும் விதமாகத் தான் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது.
கண்ணாடி பாலத்தில் செல்ல இதுவரை தனியாக கட்டணம் எதையும் தமிழக அரசு வசூலிக்கவில்லை. அதே சமயம், விவேகானந்தர் மண்டபம் செல்லும் படகு பயணத்திற்கு இருவித கட்டணங்கள் உண்டு. சாதாரண வரிசையில் சென்றால் நபருக்கு ரூ.100 கட்டணம். சிறப்பு வரிசையில் சென்றால் ரூ.300 கட்டணம். சாதாரண வரிசையில் சென்றால் 2 முதல் 3 மணி நேரம் வரை காத்திருக்க நேரலாம். சிறப்பு வரிசையில் ஒரு மணி நேரத்திற்குள் படகு பயணத்திற்கான டிக்கெட் கிடைக்க வாய்ப்பு உண்டு. இதுவே இந்த 2 வித கட்டணங்கள் இடையிலான வேறுபாடு.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/06/30/kumari-galss-brige-2025-06-30-10-22-56.jpeg)
விவேகானந்தர் மண்டபத்தில் கட்டணம் எவ்வளவு?
படகு பயணத்தில் இருக்கைக்கு தகுந்த எண்ணிக்கையில் மட்டுமே பயணிகளை ஏற்றுகிறார்கள். ஒவ்வொரு பயணிக்கும் பாதுகாப்புக்காக லைஃப் ஜாக்கெட் வழங்கப்படுகிறது. கடற்கரையில் இருந்து புறப்பட்டால் 3 நிமிடங்களில் அந்தப் படகு விவேகானந்தர் மண்டபத்தை சென்று அடைந்து விடும். அங்கு விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விவேகானந்தர் மண்டபத்தில் அமைந்துள்ள அவரது பிரம்மாண்ட சிலை, தியான அறை ஆகியவற்றை தரிசித்து விட்டு கண்ணாடி பாலம் செல்லலாம்.
10 மீட்டர் அகலம் கொண்ட கண்ணாடி பாலத்தில் நடுவே 2 மீட்டர் அகலம் மட்டுமே கண்ணாடியால் அமைக்கப்பட்டது. இருபுறமும் கிரானைட் கற்களால் நடைபாதை இருக்கிறது. பாலத்தின் நடுவே கண்ணாடி பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பரவசத்துடன் நடந்து அடுத்த முனையை நோக்கி நகர்கிறார்கள். அப்போது, கால்களுக்கு கீழே தவழும் கடல் அலைகளை கண்டு ரசிக்க முடிகிறது. பலரும் அந்த இடத்தில் நின்று கடல் அலை காட்சியோடு புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்கிறார்கள்.
சுற்றுலாப் பயணிகள் வருகையால் பிசியான கன்னியாகுமரி கண்ணாடி நடை பாலம்- வீடியோ#Kanyakumari pic.twitter.com/PiwTaZ4IrM
— Indian Express Tamil (@IeTamil) June 30, 2025
கண்ணாடி பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்வதில் பிரச்னை இல்லை. ஆனால், அதில் குதிக்கவும் ஓடவும் கூடாது என கண்டிப்பாக அறிவுரை எழுதி போடப்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் 750 பேர் வரை இந்த கண்ணாடி பாலத்தில் நிற்கும் அளவுக்கு அதன் தாங்கும் தன்மை இருப்பதாக அண்மையில் ஆய்வு செய்த அமைச்சர் எ.வ வேலு தெரிவித்தார். எனினும், பயணிகள் சிலர் அந்த கண்ணாடி பாலத்தில் திக் திக் மனதோடு திகிலுடன் மெதுவாக நடந்து செல்வதை பார்க்க முடிகிறது. இந்த கண்ணாடி பாலத்திலிருந்து கீழே கடலை பார்ப்பதும், கரையில் கன்னியாகுமரி ஊரின் அழகை பார்ப்பதும் தனி ரசனைதான்.
கண்ணாடி பாலத்தின் அடுத்த முனையை அடைந்து விட்டால் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் பாதத்தை போய் சேரலாம். அங்கிருந்து சிலையின் உள்ளாக அமைக்கப்பட்டிருக்கும் படிக்கட்டுகள் வழியாக மேலே போக முடியும். திருவள்ளுவர் சிலையில் இருந்தும் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்தும் கண்ணாடி பாலத்தை மக்கள் படம் எடுத்து மகிழ்கிறார்கள். கண்ணாடி பாலம் அமைந்த பிறகு இங்கே வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை சராசரியாக 2 மடங்கு ஆகியிருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறார்கள். அதாவது கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாதங்களில் 8.5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்திருப்பதாக அமைச்சர் வேலு தெரிவித்திருக்கிறார்.
தன்னை புதுப்பித்த கன்னியாகுமரி
உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவர் நம்மிடம் கூறுகையில், 'கடந்த 2000-வது ஆண்டு வரை குமரி என்றாலே சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், விவேகானந்தர் மண்டபம், காந்தி மண்டபம் ஆகியவைதான் சுற்றுலா பயணிகளின் பார்வை அம்சங்கள். நூற்றாண்டு காலமாக பார்த்து வந்த இவற்றை மீண்டும் மீண்டும் எத்தனை முறைதான் பார்வையாளர்கள் பார்த்து ரசிக்க முடியும்? எனவே விடுமுறை சீசன் காலங்களில் மட்டுமே கூட்டம்கூடும் இடமாக கன்னியாகுமரி மாறிக் கொண்டிருந்தது.
அதன் பிறகு கடந்த 25 ஆண்டுகளில் திருவள்ளுவர் சிலை, காமராஜர் மணி மண்டபம், சூரிய அஸ்தமனத்தை காணும் காட்சி கோபுரம் என அடுத்தடுத்து அமைந்த புதிய ஈர்ப்பு சக்திகள் குமரிக்கு மெருகூட்டின. இப்போது, அவை அனைத்துக்கும் மகுடம் வைத்ததுபோல இந்த கண்ணாடி நடைபாலம் புதிய ஈர்ப்பை கொடுத்திருக்கிறது. இப்படி ஒவ்வொரு புதிய சுற்றுலா அம்சங்கள் வரும்போதுதான் கன்னியாகுமரி தன்னை புதுப்பித்துக் கொள்கிறது. புதிய சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல் ஏற்கனவே கன்னியாகுமரியை பார்த்தவர்களும் மீண்டும் கூட்டம் கூட்டமாக; குடும்பம் குடும்பமாக வருகிறார்கள்' என்றார் அவர் .
படகு பயணத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதுதான் இங்கு இருக்கும் குறை. தற்போது குமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு ஒரு படகும் விவேகானந்தர் மண்டபத்திற்கு 2 படகுகளும் இயக்கப்படுகின்றன. மேலும் 3 படகுகள் என்ற அளவில் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் திட்டம் இருப்பதாக அமைச்சர் வேலு தெரிவித்தார். அதை விரைவாக செய்ய வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பு. தவிர கண்ணாடி பாலமும் திருவள்ளுவர் சிலையும் சந்திக்கும் பகுதியில் இடது புறமாக குப்பைகள் மண்டி கிடக்கின்றன. கட்டுமான பணியின்போது உருவான குப்பைகள் இவை எனத் தெரிகிறது. அவற்றை உடனே அகற்ற நடவடிக்கை எடுப்பது நல்லது என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.