முதல்வர் அறிவிப்பு எதிரொலி : 5000 மீனவர்களின் 12 மணி நேர ரயில் மறியல் நள்ளிரவில் நிறைவு

ஓகி தாக்கத்தில் இருந்து இன்னும் கன்னியாகுமரி மீளவில்லை. காணாமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி ரயில் மறியலுக்கு மீனவர்கள் திரண்டனர்.

ஓகி தாக்கத்தில் இருந்து இன்னும் கன்னியாகுமரி மீளவில்லை. காணாமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி ரயில் மறியலுக்கு மீனவர்கள் திரண்டனர்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
kanyakumari district, north east monsoon, chennai rains

ஓகி தாக்கத்தில் இருந்து இன்னும் கன்னியாகுமரி மீளவில்லை. காணாமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி ரயில் மறியலுக்கு மீனவர்கள் திரண்டனர்.

Advertisment

வங்கக் கடலில் உருவான ஓகி புயல், நவம்பர் 30-ம் தேதி கன்னியாகுமரியை தாக்கியது. தொடர்ந்து கேரளாவையும் பலமாக தாக்கியது. இதனால் இங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஓகியில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், இங்குள்ள மீனவர்களும்தான்!

Advertisment
Advertisements

கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளா மீனவர்களைப் பொறுத்தவரை ஆழ்கடலில் மீன்பிடித் தொழில் செய்பவர்கள்! பெரிய படகுகளில் உணவுப் பொருட்களுடன் சென்று 15 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை கடலில் தங்கியிருந்து மீன்களை பிடித்து வருபவர்கள்!

ஓகி புயல் தாக்குதலின்போது இவர்களில் ஆயிரக் கணக்கானோர் நடுக்கடலில் சிக்கினர். இவர்களை மீட்க தமிழக மற்றும் கேரள அரசுகளின் வேண்டுகோள் அடிப்படையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நடவடிக்கை எடுத்தார்.

இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை, இந்திய விமானப் படை ஆகியவற்றின் நடவடிக்கையால் கணிசமான மீனவர்கள் மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழக மீனவர்களும் கேரள மீனவர்களும் அடங்குவர். ஆனால் இன்னமும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் மீட்கப்படவில்லை என மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. வெளி மாநிலங்களில் கரை ஒதுங்கிய கன்னியாகுமரி மீனவர்களை மீட்பதிலும் மத்திய, மாநில அரசுகள் மெத்தனமான இயங்குவதாக மீனவர்கள் புகார் கூறி வருகின்றனர்.

எனவே மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை பகுதியான தூத்தூர், சின்னத்துறை பகுதி மீனவர்கள் இன்று (7-ம் தேதி) ரயில் மறியலுக்காக திரண்டனர். இது தொடர்பான Live Updates

இரவு 11.45: முதல்வர் அறிவித்த அறிவிப்புகளை எடுத்துக் கூறி மீனவ அமைப்புகள் சார்பில் மக்களை சமரசம் செய்தனர். அவர்களில் பலர் போராட்டத்தை கைவிட மறுத்தனர். எனினும் மீனவ அமைப்புகள் சார்பில் வலுக்கட்டாயமாக மக்களை கலையச் செய்தனர். இதனால் 12 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.

இரவு 9.00 : ஓகியில் பலியான மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ 10 லட்சம் உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இது பற்றிய தகவல் போராடும் மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் முதல்வர் நேரில் வர வேண்டும் என்கிற கோரிக்கையை அவர்கள் விடவில்லை.

மாலை 6.00 : கன்னியாகுமரி ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் முதல்வர் அல்லது துணை முதல்வர் வந்து பேசவேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆட்சியரை முற்றுகையிட்டு அங்கு சிறை வைத்த நிகழ்வும் நடந்தது.

மாலை 4.00 : நான்கு மணி நேரத்தை கடந்து பல்லாயிரக்கணக்கான மீனவ மக்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராடி வருகிறார்கள். அங்கேயே அவர்களுக்கு சமையல் செய்து உணவு வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. அந்த வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. போராட்டம் உடனடியாக முடிய எந்த அறிகுறியும் இல்லை.

பிற்பகல் 2.00 : இரண்டு மணி நேரத்தை கடந்து குழித்துறை ரயில் நிலைய தண்டவாளத்தில் அமர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் போராடி வருகிறார்கள். கேரளாவைப் போல தமிழகத்திலும் பலியான மீனவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் வழங்கவேண்டும் என்றும், கப்பல்களில் எங்கள் தரப்பையும் ஏற்றிக்கொண்டு ஆழ்கடலில் தேட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்கள். தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்கிறார்கள் அவர்கள்.

நண்பகல் 12.00 : குழித்துறை ரயில் நிலையத்தை வந்தடைந்த சுமார் 5000 மீனவர்கள் அங்கு முற்றுகையிட்டு ரயில் மறியல் நடத்துகிறார்கள். அவர்களுடன் அரசியல் கட்சி பிரமுகர்களும் இணைந்திருக்கிறார்கள். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதனால் பதற்றம் நிலவுகிறது.

ஆர்.கே.நகரில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, “மீனவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது”, என சிரித்துக்கொண்டே சாதாரணமாக கூறி சென்றார்.

பகல் 11.30 : குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் சென்றிருக்கும் ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் குளச்சல் சென்றார். அங்கு ஓகி புயலில் காணாமல் போன மீனவர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறச் சென்ற அவரை, ‘தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை’ என குற்றம்சாட்டி மீனவர்கள் முற்றுகை இட்டனர். இதனால் ஆளுனர் தனது நிகழ்ச்சியை அவசரமாக முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

பகல் 11.00 : சின்னத்துறையில் கிளம்பிய மீனவர்கள் 5 கி.மீ தொலைவைக் கடந்து புதுக்கடை பகுதிக்கு வந்தனர். இதற்குள் ஆங்காங்கே பல்வேறு தரப்பு பொதுமக்களும், பொதுநல அமைப்புகளும் போராட்டத்தில் இணைந்தனர். இதனால் ஊர்வலம் தொடங்கியதைவிட தற்போது கூட்டம் அதிகரித்திருக்கிறது.

காலை 10.30 : போராட்டத்திற்கு டூ-வீலரில் கிளம்பிய இளைஞர்கள் சிலரை மீனவ கிராமங்களை தாண்டிச் செல்ல போலீஸ் அனுமதிக்க வில்லை. இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

காலை 10.00 : போகிற வழியில் அவர்களை போலீஸ் வழிமறிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குழித்துறை போலீஸ் நிலையத்தில் மட்டுமே கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு வருகிறார்கள். மக்கள் நடைபயணமாக குழித்துறையை நோக்கி செல்கிறார்கள்.

காலை 9.30 : எந்த வாடகை வாகனமும் வர மறுத்ததால், ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஆண்களும் பெண்களுமாக நடந்தே குழித்துறை ரயில் நிலையத்திற்கு கிளம்பினர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கைகளில் கருப்புக் கொடி ஏந்தியிருந்தனர்.

காலை 9.00 : ஏற்கனவே கன்னியாகுமரி கடலோர கிராமங்களில் பதற்ற சூழல் நிலவியதால், அங்கு அரசு பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. எனவே ரயில் மறியல் போராட்டத்திற்கு தனியார் வாகனங்களை அமர்த்தி செல்ல முடிவெடுத்தனர். ஆனால் போலீஸ் தரப்பில் இருந்து எச்சரிக்கையைத் தொடர்ந்து தனியார் வாகனங்களை வழங்க யாரும் முன் வரவில்லை.

காலை 8.00 : தேங்காப்பட்டணம் முதல் நீரோடி வரையிலான சுமார் 10 மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள் சின்னத்துறை என்கிற கடலோர கிராமத்தில் கூடினர். ஆயிரக்கணக்கான மீனவர்கள் அங்கிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள குழித்துறை ரயில் நிலையத்திற்கு மறியலுக்காக கிளம்ப ஆயத்தமானார்கள்.

 

Kanyakumari District

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: