சசிகலா விவகாரத்தில் சித்தராமையாவுக்கு தொடர்பு: சிபிஐ விசாரிக்க வலியுறுத்தல்

சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதில் கர்நாடக மாநில அரசுக்கு தொடர்புள்ளது என அம்மாநில பாஜக-வினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

சசிகலாவுக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதில் கர்நாடக மாநில அரசுக்கு தொடர்புள்ளது என குற்றம் சாட்டியுள்ள அம்மாநில பாஜக-வினர், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகி மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் அவருக்கு சிறையில் எந்தவொரு சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை என சிறைத்துறை மறுப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும், இந்த சலுகைகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை டிஐஜி-யாக இருந்த ரூபா குற்றம் சாட்டினார். “கர்நாடக சிறைத் துறை டிஜிபி-யாக இருந்த சத்தியநாராயண ராவுக்கு ரூ.1 கோடியும், சிறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு ரூ.1 கோடியும்” சசிகலா தரப்பினர் லஞ்சம் வழங்கியதாக ரூபா மவுட்கில் குற்றம் சாட்டியுள்ளார்.

அதேபோல், கர்நாடக உள்துறை செயலர், ஊழல் தடுப்புத்துறை இயக்குநர், காவல் துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு புகார் கடிதம் அனுப்பிய அவர், ஊடகங்களிலும் இது குறித்து பேசினார். தவிர இரண்டு அறிக்கைகளையும் அவர் வெளியிட்டார். மேலும், சிறையில் சசிகலாவுக்கு தனி அறைகள் ஒதுக்கப்பட்டது, கையில் பையுடன் சுதந்திரமாக சசிகலா உலா வருவது போன்ற வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இவ் விவகாரம் தொடர்பாக விசாரிக்க உள்துறை அமைச்சகத்தின் சார்பில் உயர்நிலை விசாரணை குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவினர், கடந்த 17-ம் தேதியன்று பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர். அத்துடன், ரூபாவிடமும் அக்குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே, சிறைத்துறை டிஐஜி-யாக இருந்த ரூபா, சிறைத் துறை டிஜிபி-யாக இருந்த சத்தியநாராயண ராவ் உள்ளிட்டோரை அம்மாநில அரசு அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. அதேபோல், பாஜக-வை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் அசோக் தலைமையிலான அம்மாநில சட்டப்பேரவை பொது கணக்குக்குழு முன்னிலையில் நேற்று முன்தினம் ஆஜரான கூடுதல் டிஜிபி மேகரிக், டிஐஜி ரேவண்ணா ஆகியோர், சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மை தான் என ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், சசிகலாவுக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதில் கர்நாடக மாநில அரசுக்கு தொடர்புள்ளது என குற்றம் சாட்டியுள்ள அம்மாநில பாஜக-வினர், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அசோக் கூறுகையில், “பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை சசிகலாவின் விருந்தினர் மாளிகையாக மாறிவிட்டது. அங்கு அவருக்கு 5 அறைகளை ஒதுக்கி ராஜபோக வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது தெரியவந்து உள்ளது. இந்த விஷயத்தில் முதல்வர் சித்தராமையாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினோம். மேலும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரியும் நாங்கள் மனு அளித்துள்ளோம்” என்றார்.

இதனிடையே, சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அவர் தற்போது சாதாரண அறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருடன் இளவரசியும் அடைக்கப்பட்டுள்ளார். சசிகலாவை முக்கிய பிரமுகர்கள் சந்திக்க வழங்கப்பட்டு வந்த சிறப்பு அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்ற கைதிகளை போல சாதரணமாகவே சசிகலாவும் நடத்தப்படுகிறார் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

×Close
×Close