காவிரி விவகாரம்: கர்நாடகா பேருந்துகள் அனைத்தும் தமிழக எல்லையிலேயே நிறுத்தம்

தமிழகத்தில் காவிரி விவகாரம் கொதித்துள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காகக் கர்நாடக பேருந்துகள் அனைத்தும் தமிழக எல்லையிலேயே நிறுத்தம்.

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி இன்று வரை தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்கவில்லை. இதனைக் கண்டித்து தமிழகத்தில் பாஜக-வை தவிர ஆதிமுக உட்பட அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தி வருகிறது.

கடந்த 3ம் தேதி அதிமுக உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. மேலும் திமுக சார்பில் அனைத்துக்கட்சிகள் ஆதரவுடன் ஏப் 5ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும் ஸ்டாலின் தலைமையில், ஏப் 7ம் தேதியில் இருந்து காவிரி உரிமை மீட்பு நடைப்பயணம் நடந்து வருகிறது. மேலும் திரையுலகினர் சார்பில் ஏப் 8ம் தேதி மௌன போராட்டமும் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் சார்பில் நாளைத் தமிழகம் வரும் மோடிக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற போராட்டங்கள் ஒருபுறம் நடக்க, காவிரி விவகாரத்தில் சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டியைத் தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சியைச் சேர்ந்தோர் நேற்று சென்னை கேப்பாக்கம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், தற்போது கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரும் அனைத்துப் பேருந்துகளும் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் வழியாகக் கோவை, ஈரோடு செல்லும் கர்நாடக பதிவெண் கொண்ட பேருந்துகள் திம்பம் சோதனை சாவடியில் போலீசாரால் தடுத்து நிறுத்தினர். தமிழகத்தில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றமான சூழலில் மேலும் பாதிப்புகள் நடப்பதைத் தவிர்க்க இந்த நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

×Close
×Close