scorecardresearch

மேகதாது விவகாரம்: தமிழகத்துடன் பேச்சு நடந்த ஏற்பாடு செய்யுங்கள் – பிரதமரிடம் நேரில் வலியுறுத்திய முதல்வர் குமாரசாமி

இவ்விவகாரத்தில் தமிழகம் உடனான அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்து, கால தாமதமின்றி உடனடியாக அணையை கட்ட ஒத்துழைக்க வேண்டும்

மேகதாது அணை கட்ட பிரதமர் மோடியை வலியுறுத்திய குமாரசாமி
மேகதாது அணை கட்ட பிரதமர் மோடியை வலியுறுத்திய குமாரசாமி

மேகதாது அணை விவகாரம்: காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய நான்கு அணைகள் உள்ள நிலையில், புதிதாக மேகதாது எனும் பகுதியில் அணை கட்ட, முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டது.

காவிரியின் குறுக்கே தமிழக எல்லையில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில், 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் இந்த புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்திருந்தது. இந்த அணையின் மூலம், 67 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகாவால் தேக்கி வைக்க முடியும், பெங்களூரு நகரத்தின் குடிநீர் வசதிக்காகவே இது கட்டப்பட முடிவு செய்ததாக கூறப்பட்டது.

ஆனால், மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் நிறைய சிக்கல் இருப்பதாக தமிழக அரசு கருதுகிறது. காவீர் நதிநீர் பங்கீட்டில், இரு மாநிலத்திற்கும் இடையே உள்ள பஞ்சாயத்து நாடறிந்தது. இதில், புதிதாக ஒரு அணையை கட்டினால் என்னவாகும் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படியிருக்க, மேகதாது அணையை கட்டியே தீருவது என தற்போதைய குமாரசாமி தலைமையிலான கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. அதேசமயம், இதனை கட்டவிடக் கூடாது என்பதில் தமிழக அரசும் உறுதியாக உள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநில அனைத்துக் கட்சி நிர்வாகிகளையும் ஒன்று திரட்டி டெல்லி சென்ற முதல்வர் குமாரசாமி, அங்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, மேகதாது அணையை கட்ட அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறும் வலியுறுத்தியுள்ள குமாரசாமி, இவ்விவகாரத்தில் தமிழகம் உடனான அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்து, கால தாமதமின்றி உடனடியாக அணையை கட்ட ஒத்துழைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Karnataka cm demand pm modi to build mekedatu dam