/tamil-ie/media/media_files/uploads/2017/08/z57.jpg)
கர்நாடக மாநிலத்துக்குச் சொந்தமான அரசு சொகுசுப் பேருந்து ஒன்று பூந்தமல்லி அருகே இன்று நடுரோட்டில் பற்றி எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநில அரசின் சொகுசுப் பேருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே திருமழிசை என்ற இடத்தில் பேருந்து வந்தபோது, பேருந்தின் பின்புறம் திடீரென தீப்பற்றி எரிந்தது. மளமளவென தீ பேருந்தின் மற்ற இடங்களுக்கும் பரவியதால், உடனடியாகப் பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர். இதனால், பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
ஓட்டுநர், நடத்துநர் உட்பட 42 பேர் இந்த பேருந்தில் பயணம் செய்திருக்கின்றனர். குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து என்பதால் தீ வேகமாகப் பரவியது. ஏறக்குறைய 45 நிமிடங்கள் தீப்பிடித்து எரிந்த பேருந்து முற்றிலும் கருகியது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர் பகுதியிலிருந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள், பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எப்போதும் பரபரப்பாக, வாகனங்கள் நிறைந்த சாலையில் பேருந்து தொடர்ந்து எரிந்து கொண்டு இருந்ததால் அங்கு போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.