கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்பு: மத்திய உள்துறை அமைச்சகம்

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜியின் “ஐஎன்எக்ஸ் மீடியா” நிறுவனத்திற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று பெற்றுத் தருவதற்காக மொரிஷியஸில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக அவரது வீடு உள்ளிட்ட 17 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டவர்களின் மீது வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் தேவையான ஆவணங்களுடன் ஜூலை 21-ம் தேதியன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்திற்கு இரண்டாவது முறையாக சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகாத கார்த்தி சிதம்பரம், அந்த சம்மனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இதனிடையே, கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விடக்கூடாது என்பதற்காக (அவரை தேடப்படும் நபராக அறிவித்து) அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸை சிபிஐ அறிவுறுத்தலின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் குடியுரிமை அலுவலகம் கடந்த ஜூலை 18-ம் தேதி பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், சிபிஐ தரப்பில் அனுப்பிய அனைத்து சம்மனுக்கும் முறையாக வழக்கறிஞர்கள் மூலமாக பதில் மனு தாக்கல் செய்துள்ளேன். இதே போல் எனக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்க துறை சார்பில் இதுவரை பதிவு செய்த அனைத்து வழக்குகளையும் நான் சட்டபடி எதிர் கொண்டு வருகின்றேன். இது தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றேன். அந்த சம்மனுக்கு எதிராக நான் தொடர்ந்த வழக்கும் நிலுவையில் இருந்து வரும் நிலையில், எனக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்து இருப்பது சட்டத்திற்கு புறம்பானது. எனவே அதனை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் இன்றைய விசாரணையின் போது,”கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது. மல்லையா போன்று கார்த்தி சிதம்பரமும் வெளிநாட்டுக்கு தப்புவதைத் தடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது. மேலும், இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும் நேரில் ஆஜராகாத கார்த்தி சிதம்பரம் நோட்டீசை எதிர்ப்பது ஏன் எனவும் மத்திய அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை வருகிற 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

×Close
×Close