திமுக தலைவர் கருணாநிதியை சுற்றியேதான் தமிழக அரசியல் எப்போதும் இருந்து வருகிறது. அவர் உடல் நலமில்லாமல் வீட்டில் ஒய்வு எடுத்து வரும் நிலையிலும், அவரைச் சுற்றியே அரசியல் நிகழ்வுகள் நடக்கிறது.
ஜூன் மாதம் 3ம் தேதி 94 வயதில் அடி எடுத்து வைக்கும் அவருக்கு, சட்டபேரவைக்குள் நுழைந்த வைரவிழா ஆண்டு. 1957ம் ஆண்டு குளித்தலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு, சட்டப்பேரவைக்குள் நுழைந்த அவர் கடந்த 60 வருடங்களாக தோல்வியே சந்தித்ததில்லை. இந்த பெருமை வேறு எந்த அரசியல்வாதிக்கும் கிடைத்தது இல்லை.
இந்த சாதனைக்காக திமுகவினர் பெருமைப் பட்டுக் கொள்வதை யாரும் குறை சொல்லப்போவதில்லை. இந்த சாதனையை திருவிழாவாக கொண்டாட திமுகவினர் தயாராகி வருகின்றனர். ஜூன் 3ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் விழா நடக்க இருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.
விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த விழாவில், ‘அனைத்துக் கட்சி தலைவர்களையும் அழைத்து கலந்து கொள்ள செய்ய வேண்டும்’ என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சொன்ன பின்னர்தான் சர்சை உருவானது. இதற்கு பதிலளித்த திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘மதவாத கட்சியான பாஜகவை, எங்கள் தலைவரின் வைரவிழாவுக்கு அழைக்கப்போவதில்லை’ என்றார்.
இதற்கு பதிலளித்த தமிழிசை, ‘கருணாநிதி முதுபெரும் தலைவர். அவரை சிறிய வட்டத்துக்குள் அடைக்காமல், அனைத்து கட்சியினரையும் அழைத்து விழா எடுக்க வேண்டும் என்றுதான் சொன்னேன். ஆனால், எங்களையும் அழையுங்கள் என்று கேட்டது போல திசை திருப்புவது அரசியல் நாகரிகம் இல்லை’ என்றார்.
உடன் திமுக செயல்தலைவர் ஸ்டாலின், ‘திராவிட இயக்கத்தை அழிக்கப்போவதாக சொல்லிக் கொண்டிருக்கும் பிஜேபியை, விழாவுக்கு அழைத்து மேடையில் அமர வைத்து தர்ம சங்கடப்படுத்த விரும்பவில்லை’ என்று பதில் சொன்னார்.
தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் ஆட்சி செலுத்த ஆரம்பித்த பின்னர்தான் அரசியல் நாகரிகம் வெறும் வார்த்தையாக மட்டுமாகிப்போனது. டெல்லியில் எதிர் எதிர் கொள்கை கொண்ட தலைவர்கள்க மேடையில் அருகருகே அமர்வதை பார்க்க முடிகிறது. அந்த நிலை தமிழகத்துக்கு எப்போது வரும் என்ற ஏக்கம் எனக்கு உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதியே பல முறை மேடைகளில் பேசியிருக்கிறார்.
திமுகவில் இருந்து கருணாநிதி விலகிய பின்னர்தான், ஆளும் கட்சியினரும் எதிர்கட்சியினரும் ஒருவருக்கொருவர் சந்தித்தாலே கட்சியில் இருந்து நீக்கப்படும் நிலை உருவானது. அதிமுக தலைவராக ஜெயலலிதா இருந்த போது ஒருபடி மேலே போய், திமுகவினர் குடும்ப விழாவில் அதிமுகவினர் கலந்து கொண்டாலே கட்சியில் இருந்து தூக்கப்படும் நிலை உருவானது. தற்போது மக்களவை துணை சபாநாயகராக இருக்கும் தம்பித்துரையின் மகள், காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகனை காதலித்து திருமணம் செய்ததால், மகள் திருமணத்தில் கலந்து கொள்வதை தவிர்த்துவிட்டார், தம்பித்துரை.
திமுக குடும்ப திருமணங்களில் அனைத்துக் கட்சி தலைவர்களையும் அழைப்பார்கள். அவர்களும் கலந்து கொள்வதும் சகஜம். கடைசியாக நடந்த நடிகரும் கருணாநிதியின் பேரனுமான அருள்நிதி, திருமணத்தில் பிஜேபி மாநில தலைவர் தமிழிசை கலந்து கொண்டார். தமிழிசையின் மகன் திருமணத்தில் கருணாநிதி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அரசியல்ரீதியாக பார்த்தால் திமுக பிஜேபியோடு கூட்டணி அமைத்து, மத்திய அரசில் பங்கும் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி அமைத்திருக்கும் நிலையில் பிஜேபி தலைவர்களை அழைக்க வேண்டாம் என்று ஸ்டாலின் நினைத்திருக்கலாம். அதை தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் கருணாநிதி போன்ற மூத்த தலைவர்களுக்கு அனைத்துக் கட்சியிலும் நண்பர்கள் உண்டு. பிஜேபியின் மூத்த தலைவரான இல.கணேசனுடன் எப்போதும் நெருக்கமாகவே இருப்பார். வாஜ்பாயுடனும் நெருக்கமாக இருந்தார். சோனியாவின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராகவும் இருந்துள்ளார். திமுகவில் இருந்து பிரிந்து போன வைகோவுடன் கைகோர்த்துள்ளார். மாற்று அணியில் இருந்தால் கூட வைகோ, கருணாநிதி வீட்டு விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்ததில்லை. ஸ்டாலினுக்கு எதிராக அரசியல் செய்யும் வைகோவின் தாயார் மறைந்த போது, கலிங்கப்பட்டிக்கே சென்று துக்கம் விசாரித்தார், ஸ்டாலின்.
அரசியல் மட்டுமல்லாது, இலக்கியம், சினிமா, பத்திரிகை என கருணாநிதி கால் பதிக்காத துறைகளே இல்லை. அனைத்து துறையினரையும் அழைத்துக் கூட இந்த விழாவை திமுகவினர் பிரமாண்டமாக நடத்தலாம். அதிலொன்றும் தப்பில்லை.
குடும்பத்தின் மிக முக்கியமான விழாக்களில் நமக்கு வேண்டிய ஒரிருவர் பெயர் விட்டுப் போயிவிடும். யாராவது நினைவுபடுத்தினால் உடனடியாக அவர்களை தொடர்பு கொண்டு விழாவுக்கு அழைப்பது சகஜம்தான். அதே போல தமிழிசையின் கோரிக்கையை ஸ்டாலின் பரிசீலிப்பது, தமிழக அரசியல் நாகரிகத்துக்கு உகந்ததாக இருக்கும்.
கருணாநிதி போன்ற மிகப்பெரிய ஆளுமையை எதிர்த்தவர்கள் கூட, அவருடைய பல திறமைகளை கண்டு வியந்து பாராட்டியுள்ளனர். ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்ற போது ஸ்டாலின் கலந்து கொள்ள வைத்தது. தானே புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் முதல்வர் ஜெயலலிதாவை ஸ்டாலின் நேரில் சந்தித்ததும் உண்டு. எனவே இன்றைய அதிமுக பிளவுபட்டிருந்தாலும், இரு அணியின் தலைவர்களைக் கூட கருணாநிதியின் விழாவில் கலந்து கொள்ள வருமாறு ஸ்டாலின் அழைக்கலாம். இது தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
கூட்டணியை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு மூத்த தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை கொண்டாடாமல், அனைவருக்கும் பொதுவான தலைவராக கருணாநிதியை முன்னிருந்த ஸ்டாலின் முயல வேண்டும். அதுதான் கருணாநிதியின் புகழுக்கு பெருமை சேர்க்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.