தி.மு.கவின் முன்னாள் தலைவர் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் ரூ.100 நினைவு நாணயத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
வெள்ளியும், தாமிரமும் கலந்த இந்த நாணயத்தின் விலை ரூ.2,500 ஆகும். தமிழக அரசின் தலைமை செயலர் சிவ் தாஸ் மீனா , மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நினவு நாணயம் வெளியிட மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு ஜூலை 23ம் தேதி கடிதம் எழுதினார்.
முன்னாள் தமிழக முதல்வரான மு.கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் ரூ.100 நினைவு நாணயம், அதன் அமைப்பு, உள்ளடக்கம் விலை ஆகியவை முடிவு செய்யப்பட்டது. இதன்படி இந்த நாணயத்தை அச்சிடுவதற்கு கடந்த ஜூலை 12ம் தேதி மத்திய அரசிதழிலும் வெளியிப்பட்டது.
இந்த நாணயத்தின் ஒரு பக்கம் சிங்கத்தின் தலையுடன் கூடிய அசோகா தூண், சத்யமேவ ஜெயதே , பாரத் ஆகிய வார்த்தைகள் தேவநாகிரி எழுத்திலும், இந்தியா என ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். மறுபக்கம் நாணயத்தின் மையத்தில் கலைஞர் எம். கருணாநிதி உருவப்படம், கீழே அவர் பயன்படுத்திய தமிழ் வெல்லும் என்ற வாசகமும் இடம் பெறுகிறது. கலைஞர் பிறந்த நூற்றாண்டு 1924 முதல் 2024 என தேவநாகிரி எழுத்திலும், ஆங்கிலத்திலும் எழுதி இருக்கும்.
இந்த நாணயத்தை முறைப்படி வெளியிட தமிழக அரசு இதுவரை மத்திய அரசிடம் அனுமதி கோரவில்லை. மத்திய அரசும் இதற்கான முயற்சி எடுக்கப்படாத சூழ்நிலையில் இந்த நாணயம் காசாலைகளில் அச்சிடப்பட்டு வந்தவுடன் ரிசர்வ் வங்கி விற்பனையகங்கள் மற்றும் தபால் நிலையங்களில் விற்பனைக்கு வரும் என மத்திய நிதித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“