/tamil-ie/media/media_files/uploads/2021/09/karunanidhi-3.jpg)
தமிழக சட்டப்பேரவையில் வீட்டுவசதித் துறை மானியக் கோரிக்கை மீதான் விவாதத்தில், தஞ்சாவூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம், மீண்டும் அண்ணா சாலையில் கருணாநிதியின் சிலையை நிறுவ வேண்டும் என கேட்டுக்கொண்டார். நீலமேகத்தின் இந்த கோரிக்கை, அண்ணா சாலையில், கருணாநிதிக்கு சிலை வைக்கப்பட்டிருந்ததையும் அது இடிக்கப்பட்ட நிகழ்வையும் பேச வைத்துள்ளது.
தமிழகத்தில் 5 முதலமைச்சராகவும் சட்டமன்றத்தில் மணிவிழா கண்டவராகவும் திமுகவின் நீண்ட கால தலைவராகவும் இருந்த மு.கருணாநிதி ஆகஸ்ட் 7, 2018ம் தேதி மறைந்தார். மக்களால் கலைஞர் என்று அழைக்கப்படும் கருணாநிதி உயிருடன் இருந்தபோதே அவருக்கு சென்னை அண்ணா சாலையில், திராவிடர் கழகத்தின் சார்பில், 1975ம் ஆண்டு சிலை வைக்கப்பட்டது. அந்த சிலை, எம்.ஜி.ஆர் மறைந்தபோது ஒரு சிறுவனால் உடைக்கப்பட்டது. அதற்கு பிறகு அங்கே மீண்டும் சிலை வைக்கப்படவில்லை.
அப்போது கருணாநிதி சிலையை ஒரு சிறுவன் கடைப்பாறையால் குத்தி இடிக்கப்பட்ட படம் செய்தித் தாள்களில் வெளியானபோது, கருணாநிதி, முரசொலியில் ஒரு கவிதை எழுதினார். அதில்,
“உடன்பிறப்பே,
செயல்பட விட்டோர்
சிரித்து மகிழ்ந்து நின்றாலும்
அந்த சின்னத்தம்பி
என் முதுகிலே குத்தவில்லை
நெஞ்சிலேதான் குத்துகிறான்;
அதனால் நிம்மதி எனக்கு!
வாழ்க! வாழ்க!!” என்று கவிதை எழுதினார்.
இந்த சூழலில்தான், தமிழக சட்டப்பேரவையில் பேசிய தஞ்சாவூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம், 1971 ஆம் ஆண்டு சென்னையில் கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டும் என்று பெரியார் முடிவு செய்தார். அதன் பின்னர் 1975 ஆம் ஆண்டு அப்போதைய திராவிடர் கழகத் தலைவர் மணியம்மை, சென்னை அண்ணாசாலையில் கலைஞர் கருணாநிதியின் சிலையை நிறுவி குன்றக்குடி அடிகளாரால் அந்த சிலை திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர், 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்தில் சில விஷமிகள் கருணாநிதி சிலையை சேதப்படுத்தினார்கள். அதனால், அதே இடத்தில் மீண்டும் கருணாநிதி சிலை வைக்க, கலைஞர் வேண்டாம் என தடுத்துவிட்டதாக கூறினார்.
எனவே பெரியார் நினைத்ததை மணியம்மை செய்து காட்டியதின் அடிப்படையில் மீண்டும் அண்ணாசாலையில் கலைஞர் கருணாநிதியின் சிலையை நிறுவ வேண்டும்” என்று நீலமேகம் கேட்டுக்கொண்டார்.
நீலமேகத்தின் கோரிக்கை குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்மையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தன்னை சந்தித்த போது இந்த கோரிக்கை தொடர்பாக தன்னிடம் வலியுறுத்தினார்.
பெரியார் கட்டளையிட்டு திராவிடர் கழகம் வைத்த சிலையை மீண்டும் நிறுவ வேண்டுமென கி.வீரமணி கோரிக்கை வைத்ததை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
பொதுவான இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக சிலை வைக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தான் சுட்டிக் காட்டியதாக கூறிய முதல்வர், ஏற்கனவே நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுத்தான் சிலை வைக்கப்பட்டதாகவும் எனவே மீண்டும் அந்த இடத்தில் சிலை நிறுவ எந்த பிரச்சினையும் இல்லை என கி.வீரமணி கூறியதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
அண்ணா சாலையில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோருக்கு சிலைகள் இருப்பதை போன்று கருணாநிதி சிலையை அதே இடத்தில் நிறுவ வேண்டும் என்று ஆசிரியர் கி.வீரமணி மீண்டும் தன்னிடம் வலியுறுத்தினார். இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, அண்ணாசாலையில் கருணாநிதி சிலை நிச்சயம் அமைக்கப்படும் என்று கூறினார்.
சென்னை அண்ணா சாலையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது பற்றி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் திராவிடர் கழகத் தலைவர் பூங்குன்றன் உடன் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறியதாவது: “பெரியார் இருக்கும்போது, கலைஞருக்கு அண்ணமலைப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் கொடுத்தார்கள். அதற்கு பாராட்டு விழா சென்னை பெரியார் திடலில் நடந்தது. அந்த பாராட்டுவிழாவில் பெரியார் குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் கலந்துகொண்டார்கள். அப்போது பெரியார், சென்னையில் கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் என்று சொன்னார். அந்த மேடையிலேயே, அடிகளார் 1000 ரூபாய் பணம் கொடுத்தார். சிலை வைப்பதற்கு அந்த மேடையிலேயே ஓரளவு பணம் வசூல் ஆகிவிட்டது. கலைஞர் சிலை வைக்க வேண்டாம் என்று சொன்னதால் அது தாமதமாகிக்கொண்டே வந்தது. அவர் ஒருமுறை திமுக சார்பில் பெரியாருக்கு சிலை வைத்த பிறகு முயற்சி செய்யுங்கள் என்று ஒருமுறை கூறினார்.
பெரியார் மறைந்த பிறகு, அண்ணாசாலையில் சிம்சனில் திமுக சார்பில் பெரியார் சிலை வைக்கப்பட்டது. அந்த சிலை வைத்த பிறகு, மணியம்மையார் தலைமை தாங்கிய பிறகு, பெரியார் சொன்னபடியும் கலைஞர் ஒப்புக்கொண்டபடியும் சிலை வைப்பது என்று முடிவு பண்ணி, ஜெனரல் பேட்டர்ஸ் சாலை சந்திப்பில் சிலை வைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் மறைந்த அன்று அந்த சிலையை உடைத்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர் தொண்டர்கள் சிலையை உடைத்துவிட்டார்கள். சிலையை மார்பில் குத்தி உடைப்பது போன்ற படம் எல்லாம் வெளியானது. இப்போதும் அந்த பீடம் எல்லாம் இருக்குது. அப்போது, கலைஞர் சொன்னார், அந்த சிறுவன் என் மார்பில்தான் குத்தினான். முதுகில் குத்தாமல் மார்பில் குத்தினான் பரவாயில்லை என்று வேடிக்கையாக சொன்னார்.
அதற்கு பிறகு, நாங்கள் அந்த இடத்தில் மீண்டும் சிலையை வைக்க வேண்டும் என்று முயற்சி செய்தோம். அப்போது கலைஞர் இப்போது வேண்டாம் என்று கூறியதால் அப்படியே தள்ளிப்போய் விட்டது.
கலைஞர் மரணம் அடைந்த பிறகு, கலைஞர் சிலையை திறக்க வேண்டும் என்று திராவிடர் கழகம் முடிவு செய்தது. கலைஞர் சிலையை திறக்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு, 3 நாளைக்கு முன்புகூட ஆசிரியர் கி.வீரமணி, தலைமையில் நான், பொதுச் செயலாளர் அன்புராஜ் 3 பேரும் முதலமைச்சரை பார்த்து கலைஞர் சிலை திறப்பது பற்றி வலியுறுத்தினோம். அப்போது முதலமைச்சரிடம் அது பெரியார் சொன்ன கட்டளை என்று ஞாபகமூட்டினோம். இரண்டாவது அது நாங்கள் வைத்து உடைக்கப்பட்ட சிலை. அதனால், மீண்டும் வைக்க வேண்டும் நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும். நாங்கள் புது அனுமதி கேட்கவில்லை. ஏற்கெனவே வைக்கப்பட்ட சிலைக்கு அனுமதி இருந்தது. ஏற்கெனவே வைத்த சிலையை உடைத்துவிட்டார்கள். அதனால், புதுப்பித்தல் என்கிற முறையில், மீண்டும் அந்த இடத்தில் சிலை வைப்பதற்கு நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
அதற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் நான் கலந்து பேசி, நீதிமன்றத் தீர்ப்பு எல்லாம் இருக்கிறது. அதைப் பற்றி யோசனை செய்கிறேன் என்று கூறினார். இந்த நிலையில்தான், நேற்று தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர், கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் என்று பொதுவாக கேட்டிருக்கிறார். அதற்கு முதலமைச்சர் 2-3 நாளைக்கு முன்னால் ஆசிரியர் கி.வீரமணி வந்து சொன்னார் என்று கூறியிருக்கிறார். அண்ணா சாலையில், கலைஞர் சிலை வைப்போம் என்று சொல்லியிருக்கிறார். இதுதான், மீண்டும் கலைஞர் சிலை வைப்பது பற்றிய சுறுக்கமான வரலாறு. இப்போது, முதலமைச்சர் ஸ்டாலின், கலைஞர் சிலை வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.” என்று கூறினார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும் என்று அறிவித்திருப்பது குறித்து திமுக எம்.பி திருச்சி சிவா கூறியதாவது: முதலில் வைக்கப்பட்ட கலைஞர் சிலையானது பெரியாரின் விருப்பத்திற்கு இணங்க மணியம்மையார் முயற்சி எடுத்து திராவிடர் கழகத்தின் சார்பாக வைத்தார்கள். சிலை இடிக்கப்பட்ட பிறகு, ஆடியில் இருந்தாலும்கூட கலைஞர் இருந்தவரை சிலை வைப்பதில் அவருக்கு உடன்பாடு இல்லை. இப்போது, அவர் இல்லை. எங்களுக்கு அவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கடமை இருக்கிறது. இப்போது திமுக ஆட்சி நடக்கிறது. அதனால், இது அவருக்கு செய்யக்கூடிய ஒரு நன்றி. அதனால், கலைஞருக்கு சிலை வைப்பதை முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அதற்கு என்னென்ன சட்ட நியதிகள் இருக்கிறதோ அதைப் பின்பற்றுவோம்.” என்று கூறினார்.
மறைந்த திமுக தலைவர், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதற்கு முன்பு வைக்கப்பட்ட கருணாநிதி சிலை எம்.ஜி.ஆர் மறைந்த போது இடிக்கப்பட்டது. இப்போதும் மீண்டும் சிலை வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக சார்பில் உங்களுடைய கருத்து என்ன என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையனிடம் கேட்டோம். அவர் கூறியதாவது: “அவருக்கு மவுண்ட் ரோட்டில் சிலை வைத்தார்கள். விதிகளை எல்லாம் மீறி விதிகள் கமிட்டிகிட்டியிட அனுமதி வாங்காமல், இஷ்டம்போல சிலை வைத்துவிட்டார்கள். அதற்கு எதிராக யாரோ ஒரு வழக்கறிஞர் கோர்ட்ல வழக்கு தொடர்ந்தார்கள். அந்த சிலை விதிகளை மீறி இருக்கிறது என்று கோர்ட் சொல்லிவிட்டது. அந்த இடம் வாகனங்கள் போய் திரும்புவதற்கு இடைஞ்சலாக இருந்தது என்று வழக்கு தொடர்ந்தார்கள். அதனால், அதை நீக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது. அதை நீக்க வேண்டும் என்று நாங்கள் எந்த உத்தரவும் போடவில்லை.
இப்போது முறைப்படி அனுமதி வாங்கி நீதிமன்ற உத்தரவின் வரைமுறைகளுக்கும் சட்ட விதிகளுக்கும் உட்பட்டு மீண்டும் சிலை வைக்கிறார்கள் என்றால் அதில் யாரும் மறுப்பு சொல்ல முடியாது. கருணாநிதி சிலை வைப்பது பற்றி எதிர்க்கவோ அல்லது வரவேற்காவோ எங்களிடம் கருத்து சொல்வதற்கு எதுவுமில்லை. கருணாநிதி சிலை உடைக்கப்பட்டதற்கு அதிமுகவுக்கு எந்த தொடரபும் இல்லை.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.