முரசொலி பவள விழாவையொட்டி, முரசொலி காட்சி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மெழுகு சிலை தொண்டர்களை வெகுவாக கவர்ந்தது.
கடந்த 1942-ஆம் ஆண்டு “முரசொலி வெளியீட்டுக் கழகம்” என்ற பெயரில் பதிப்பகம் துவங்கிய கருணாநிதி, அதே ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி “முரசொலி” என்ற மாத இதழை துவக்கினார். மாத இதழ் என்றாலும் அது ஒரு துண்டறிக்கை போன்றே வெளியிடப்பட்டது. பின் வந்த நாட்களில் தினசரி நாளிதழாக வெளியிடப்பட்ட முரசொலி, திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளிதழாக திகழ்கிறது.
முரசொலியில் வெளியாகும் “உடன்பிறப்பே” என்ற கலைஞரின் கடிதம் தொண்டர்களை எழுச்சியுடன் போராட்டக்களத்துக்கு இட்டுச்செல்லும். கருணாநிதி என்கிற ஒரு படைப்பாளர், தன் அத்தனை திறமைகளையும் வெளிப்படுத்திய களம் முரசொலி.
அரசியல் தாண்டி கட்டுரைகள், கேள்வி-பதில், சிறுகதைகள், கடித இலக்கியம், கவிதைகள், சமூகக் கதைகள், வரலாற்றுக் கதைகள், திரைப்படங்கள் என அவர் சாதித்த அத்தனை விஷயங்களுக்கும் முரசொலியே முன்னோடி. கருணாநிதி நினைவுடன் இருந்தது வரை, முரோசொலியில் வெளிவரும் ஒவ்வொரு வார்த்தையும் அவரது அனுமதியின்றி வராது. மிசா காலத்தில் முரசொலி ஆற்றிய பங்கு அளப்பரியது.
திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்க்கையுடன் ஒன்றிணைந்த முரசொலி, தொடங்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதை முன்னிட்டு பவள விழாவுக்கு திமுக ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழா இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. பத்திரிகையாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்கின்றனர்.
அதன்படி, இன்று காலை 10 மணிக்கு கோடம்பாக்கம் நெடுஞ் சாலையில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் “முரசொலி காட்சி அரங்கம்” திறக்கப்பட்டது. “தி இந்து” குழுமத்தின் தலைவர் என்.ராம் தொடங்கி வைத்த இந்த நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமிணி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ், தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி, முரசொலி மேலாண்மை இயக்குனர் உதய நிதி ஸ்டாலின், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த காட்சி அரங்கத்தில், திராவிட இயக்கம் கடந்து வந்த பாதை தொடர்பான அரிய புகைப்படங்களும், உடன்பிறப்புகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கடிதங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், அறிஞர் அண்ணாவின் கடிதங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. மேலும், ஆரம்பகால அச்சு கோர்க்கும் இயந்திரம் முதல் தற்போதைய இயந்திரம் வரை இடம் பெற்றிருந்தது.
ஆரம்ப காலம் முதல் வெளிவந்த முரசொலி நாளிதழ்கள், திமுக தலைவர் கருணாநிதி அமரும் அறை. அதில் அவர் அமர்ந்திருப்பது போன்ற மெழுகு சிலை உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தது. இதனை அனைவரும் பார்த்து ரசித்தனர்.
முரசொலி அலுவலகத்தில் வழக்கமாக கருணாநிதி வந்து அமர்ந்து கட்டுரை எழுதும் அறையில் அவரைப் போன்றே தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்த மெழுகுச் சிலை தொண்டர்களை வெகுவாக கவர்ந்தது.
இதை தொடர்ந்து, ஓமந்தூரர் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் முரசொலி பவளவிழாவின் வாழ்த்தரங்கம் இன்று மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. முரசொலியின் ஆசிரியர் முரசொலி செல்வம் வரவேற்புரை நிகழ்த்துகிறார். தி இந்து குழுமத்தின் தலைவர் என்.ராம் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள், நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குநர் உதயநிதி ஸ்டாலின் நன்றியுரையாற்றுகிறார்.
அதேபோல், நாளை மாலை 5 மணிக்கு நந்தனம் ஒய்எம்சிஏ விளையாட்டுத் திடலில் முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.